வெளியிடப்பட்ட நேரம்: 00:45 (15/09/2017)

கடைசி தொடர்பு:08:29 (15/09/2017)

தினகரன் திருச்சியில் கூட்டம் நடத்தக் கூடாது- திட்டமிட்டு நாடகம் ஆடும் திருச்சி மாநகராட்சி

நீட் தேர்வுக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம் நடத்திட, டி.டி.வி.தினகரன் தரப்பு அனுமதி கேட்ட இடத்தை மறு சீரமைப்பு செய்வதாக திருச்சி மாநகராட்சி நிர்வாகம், அந்தக் கட்டடத்தை இடிக்க ஆரம்பித்திருப்பது அரசியல்கட்சிகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 8-ம்தேதி தி.மு.க. சார்பில், நீட் தேர்வுக்கு எதிராகக் கண்டனப் பொதுக் கூட்டம் திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்றது. அதற்கு அடுத்த நாள், அதே இடத்தில் பி.ஜே.பி நீட் தேர்வை ஆதரித்துக் கூட்டம் நடத்தியது. இந்நிலையில் அ.தி.மு.க போட்டி அணியான டி.டி.வி.தினகரன் அணியினர், அதே திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நீட் தேர்வுக்கு எதிராக செப்டம்பர் 16 ம் தேதி கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.. இதற்காக அவரது ஆதரவாளர்கள், திருச்சி மாநகராட்சி, மற்றும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் அனுமதிகேட்டு விண்ணப்பித்தனர்.

அப்போது மாநகராட்சி நிர்வாகம், அந்த இடம் வேறு அமைப்பின் கூட்டத்துக்கு அன்றைய தேதியில் ஒதுக்கப்பட்டதாகக் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனையடுத்து, தினகரன் தரப்பு, செப்டம்பர் 19-ம் தேதியில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்திட இடம் கேட்டு தினகரன் அணி மாவட்டச் செயலாளர் சீனிவாசன் விண்ணப்பம் கொடுத்தார்.

இந்தமுறை திருச்சி மாநகராட்சி நிர்வாகம், திருச்சி உழவர் சந்தை மைதானத்தை மறு சீரமைப்பு செய்யப் போகிறோம் என்று கூறி தினகரன் தரப்புக் கூட்டம் நடத்த அனுமதி மறுத்தது. இந்நிலையில், உழவர் சந்தை மைதானத்தில் கூட்டம் நடத்திட அனுமதி கேட்டு டி.டி.வி.தினகரன் தரப்பின் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் மைதானத்திலிருந்த கூட்ட அரங்கை, திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில், ஆட்களை வைத்து மறுசீரமைப்பு செய்கிறேன் என இடிக்க ஆரம்பித்தனர். மேலும், அந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) ஒத்தி வைக்கப்படுவதாகத் தகவல் வரவே, இடித்த இடத்தை அப்படியே போட்டுவிட்டு வேலையாட்கள் கிளம்பினர். தினகரன் அணியினர், கூட்டம் நடத்தக் கூடாது என்பதற்காகவே, திருச்சி மாநகராட்சி நிர்வாகம், நல்ல முறையில் இருந்த இடத்தை இடித்துவிட்டு, கட்டடத்தைப் புனரமைப்பு செய்வதைப்போல் நீதிமன்றத்தை ஏமாற்றவே, இப்படி பாவலா செய்வதாகத் தினகரன் தரப்பு குற்றஞ்சாட்டுகிறது.

இதனால் தினகரன் அணியின் நீட் தேர்வுக்கு எதிரான கூட்டம் நடக்குமா என்பது நீதிமன்ற உத்தரவைப் பொறுத்தது என்பதால் திருச்சியில் பெரும் பரபரப்பு நிலவிவருகின்றது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க