குமரி மாவட்ட அ.தி.மு.க-வில் கோஷ்டி மோதலா?

அ.தி.மு.க.வில் டி.டி.வி.தினகரன் அணியினரால் வைக்கப்படிருந்த பேனர் கிழிக்கப்பட்டதால் குமரி அ.தி.மு.க. பரபரப்பாக காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து 10 ஆண்டுகளாக குமரிமாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் பச்சைமால் செயல்பட்டு வந்தார். கடந்த எம்.பி.தேர்தலுக்குப் பின் மாவட்டச் செயலாளராக தளவாய்சுந்தரம் நியமிக்கப்பட்டு, பின்னர் விஜயகுமார் எம்.பி.யை  ஜெயலலிதா மாவட்டச் செயலாளராக நியமித்தார். தொடக்கம் முதல் சசிகலா தரப்பு ஆதரவாளராக இருந்த விஜயகுமார், எடப்பாடி  ஆதரவாளராகவும் தன்னைக் காட்டிக் கொண்டு வந்ததால் டி.டி.வி தினகரன், அவரை நீக்கி விட்டு முன்னாள் அமைச்சர் பச்சைமாலுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கினார். இதற்கு டி.டி.வி.தினகரனுக்கு நன்றி தெரிவித்து நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகை முன் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதில் ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி. தினகரன் படங்கள் இடம் பெற்றிருந்தது. இந்த பேனர் திடீரென கிழிக்கப்பட்டிருந்தது.

இரண்டு நாள்களுக்கு முன்புதான் நாகர்கோவிலில் தினகரன் அணியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பச்சைமால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் ஆணைப்படி, வரும் 15 ம் தேதி நடைபெற உள்ள பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்தும், எழுச்சியுடன் பொதுக்கூட்டங்கள் நடத்துவது குறித்தும் முடிவெடுக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பச்சைமால், ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். தலைமையில் சென்னையில் நடைபெற்றது போலிகள் நடத்திய பொதுக்குழு கூட்டம் என்றும் உண்மையான பொதுக்குழு கூட்டத்தைக் கூட்ட தினகரனால் மட்டுமே முடியும் என்றும் கூறினார். போலிகள் நடத்திய இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் குமரி மாவட்டத்திலிருந்து 30 க்கு மேற்பட்ட கழகத்தின் முன்னோடி உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமான தினகரன் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன் எதிரொலியாகத்தான் டி.டி.வி. தினகரனுக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிக்கப்பட்டிருக்கலாம் என தினகரன் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். குமரி மாவட்ட அ.தி.மு.க.வில் கோஷ்டி மோதல் தொடங்கிவிட்டது. அடுத்து என்ன நடக்கப் போகிறது எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!