’இந்த ஆண்டு இறுதிக்குள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்’ -கரூர் ஆட்சியர்

கரூர் மாவட்டத்தில், ''வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள், ஆதார் எண்ணை வரும் 31.12.2017 - க்குள் இணைக்காவிட்டால், வங்கிக் கணக்கு முடக்கப்படும்" என்று கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் எச்சரித்துள்ளார்.

               
 

கரூரில் வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பதின் அவசியம்குறித்த சிறப்பு விளக்கக் கூட்டம், கரூர் நெசவாளர் பனியன் தொழிற்சாலை உரிமையாளர் சங்க அரங்கத்தில், மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் உதவிப் பொதுமேலாளர் மணிவண்ணன், நபார்ட் வங்கி உதவிப் பொதுமேலாளர் பரமேஷ்குமார், மகளிர் திட்ட இயக்குநர் பாலகணேஷ், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், வட்டாட்சியர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அதில் பேசிய மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், "வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர், தங்கள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்கில் இணைப்பது அவசியமான ஒன்றாகும். மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களுக்கு ஊதியம், பிற துறைகள்மூலம் பயனாளிகளுக்குத் தொழில் கடன்கள், குழுக் கடன்கள், மானியங்கள் போன்றவைகள் வங்கிகள்மூலம் வழங்கப்படுகிறது. மேலும், பிற தேவைகளுக்கும் வங்கிக் கணக்கு தற்போது மிகவும் அவசியம். வங்கிக் கணக்கைத் தொடர்ந்து பரிவர்த்தனை செய்வதற்காக, ஆதார் எண்ணை 31.12.2017-க்குள் கணக்கு வைத்துள்ள வங்கிகளில் இணைத்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஆதார் எண்ணை வங்கிக் கணக்கில் இணைக்காதவர்களின் கணக்கு முடக்கப்பட உள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்கில் இணைக்க முன் வர வேண்டும். கரூர் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் இதுவரை 65 சதவிகிதம் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. 80 சதவிகிதம் கைப்பேசி எண்ணுடன் இணைத்து, பரிவர்த்தனைகுறித்த குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!