Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கல்லால் அடித்தும், எரித்தும் கொல்லப்பட்ட ‘மெரினா' சிறப்புக் குழந்தையின் பரிதாபம்!

மெரீனாவின் சிறப்புக் குழந்தை மனோவின் போஸ்டர் முன் சிறுவர்கள்

யாரைப் பார்த்தாலும் வெள்ளைச் சிரிப்பில் இயல்பை வெளிப்படுத்தும் மனோ, இந்த நிமிடத்தில் உயிரோடு இல்லை. கல்லால் அடித்தும், எரித்தும்  'சிறப்புக் குழந்தை' மனோவைக் கொலை செய்திருக்கிறது ஒரு கும்பல். மனிதர்கள் நடமாட்டம் எப்போதாவது இருக்கிற, சென்னை திருவல்லிக்கேணி பறக்கும் ரயில் நுழைவாயிலில்தான்  இருபத்தியெட்டு வயதான மனோவின் வாழ்க்கையை முடித்திருக்கிறார்கள். 'என்ன நடந்தது ?' அயோத்திக்குப்பம் பகுதிவாசிகளிடம் பேசினோம். "மனோவின் அம்மா அஞ்சலைதேவி, துப்புரவுத் தொழிலாளி. திருவல்லிக்கேணி ரயில் நிலையப் பகுதியை எப்போதும்போலச் சுத்தம் செய்துவிட்டுக் கடற்கரை மணல்வெளியில் உறங்கப் போய்விடுவார். மனோவுக்கு, அம்மா அஞ்சலைதேவி துப்புரவு செய்யும் அதே ரயில் நிலையப் பகுதிதான் வழக்கமான உறங்கும் இடம். கடந்த 12-ம் தேதி இரவு 11 மணி... அங்கே படுத்திருந்த மனோவின் முகத்தில் பெட்ரோலை ஊற்றித் தீயை வைத்துள்ளது ஒரு கும்பல். தீ, உடல் முழுவதும் பரவ... அலறியபடி எழுந்த மனோவை, மேலே எழுந்திருக்க விடாமல் கற்களால் அடித்தபடியே இருந்துள்ளனர், அந்தக் கும்பலில் இருந்தவர்கள்.


பாட்டி சாந்தம்மாள்பாதி எரிந்தபடி,  கற்களால் ஏற்பட்ட காயத்துடன் ரத்தம் சொட்டச்சொட்ட அங்கிருந்து மெயின் ரோட்டில் ஓடிவந்திருக்கிறார் மனோ. இரவு ரோந்துப் பணியில் இருந்த போலீஸார், மனோவைக் காப்பாற்றி அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே, தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்கள் யார் என்று சொல்லும் அளவுக்கே மனோவிடம் தெம்பு இருந்துள்ளது. மறுநாள் 13-ம் தேதி பிற்பகல், சிகிச்சைப் பலனின்றி மனோ இறந்து விட்டார்" என்றனர். நாம், மனோவின் வீட்டுக்குச் சென்றோம். மனோவின் பாட்டி சாந்தம்மா, "அவனை எல்லோருக்கும் பிடிக்கும். கொஞ்சம் குழந்தைபோல இருப்பான். இருபத்தியெட்டு வயதாகிறது என்றாலும், இங்குள்ள குழந்தைகளுக்கு அவன்தான் குழந்தை. இப்படி அவனைக் கொடூரமாகக் கொல்லும் அளவுக்கு எப்படித்தான் மனது வந்ததோ" என்று அழ ஆரம்பித்துவிட்டார்.

பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துலெட்சுமி என்ற மூதாட்டி. "அந்தப் புள்ளை எரிந்துகொண்டே பீச்சில் படுத்திருக்கும் அவன் அம்மாவிடம் சொல்லத்தான் அங்கிருந்து ஓடியிருக்கிறான். ஒரு குழந்தையைப்போலவே அவன் வாழ்ந்து வந்தான்" என்று கண்கலங்கினார். வயதால் இளைஞனாகவும், சராசரிக்குக் கொஞ்சம் குறைவான மனவளர்ச்சியால் குழந்தையாகவும் இருந்த 'சிறப்புக் குழந்தை' மனோவுக்குக் குழந்தைகளும், சிறுவர்களுமே நண்பர்களாக இருந்துள்ளனர். எப்போதும் மெரினா மணல் வெளியில் விளையாட்டு, பின்னர் அயோத்திக்குப்பம் குடியிருப்புப் பகுதியில் அம்மா அஞ்சலைதேவியுடன் கொஞ்சல், கெஞ்சல் என்றிருந்த மனோ, அந்தப் பகுதியில் எல்லோருக்கும் செல்லம்.

ஆள் நடமாட்டமே இல்லாத ஒற்றையடி ரயில்வே சாலைசம்பவ இடத்துக்குச் சென்று அங்குள்ள சூழ்நிலையைக் கவனித்தோம். ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒற்றையடிப் பாதையாக நீண்டு கிடக்கிறது, திருவல்லிக்கேணி ரயில்நிலையம். எப்போதாவது பயணிகள் வருகிறார்கள் என்பதாலோ என்னவோ, அங்கே ஒரு அவுட்போஸ்ட் காவல் நிலையமும் இல்லை. ரயில்வே போலீஸ், தனியார் செக்யூரிட்டி என்று யாரும் கண்ணில் படவில்லை. ஒரு பக்கம்  நாள் கணக்கில் அள்ளப்படாத குப்பைகளும், அதில் புரண்டு உருளும் நாய்களுமாக அந்தப் பகுதியே சுகாதாரம் தொலைத்துக் கிடக்கிறது. இன்னொரு பக்கம், கஞ்சா புகையின் பரவலான நெடி, அந்தப் பகுதியையே மயக்கத்தில் வைத்திருக்கிறது. சமூக நல்லொழுக்கம் முற்றிலும் இழந்துள்ள பாதையாகவே அந்த ஒரு கிலோ மீட்டர் தூரமும் இருக்கிறது. போதை ஆசாமிகள், மனோவின் கையில் இருந்த சில்லறைக்கு ஆசைப்பட்டு அதைப் பறிக்க முயன்றிருக்கலாம், அதை மனோ தடுத்திருக்கலாம்... மனோவைப் போன்ற பல மனோக்களிடம்  இதேபோல் சில்லறை இருக்கிறது, பறிக்க முற்படும் போதை ஆசாமிகளும் அங்கே அதிகமாக இருக்கிறார்கள்.

மனோ இறப்பு குறித்த விசாரணை, திருவல்லிக்கேணி ரயில்வே போலீஸாரிடம் இருந்து மெரினா போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் கைக்கு மாறியிருக்கிறது. இதுகுறித்து போலீஸில் கேட்டபோது " மனோ இறப்பு,  கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்மந்தப் பட்டவர்களைத் தேடிவருகிறோம்" என்று முடித்துக்கொண்டனர்.மனோவை எரித்த இடம் இதுதான் மெரினா கடற்கரை மணல் வெளியில் யாரும் போக முடியாதபடி தடுப்பு வளைவு போட்டு வைத்துள்ள அரசாங்கம், மெரினாவுக்கு எதிரேயே நடந்துள்ள இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க என்ன மாதிரியான திட்டத்தைக் கையில் வைத்திருக்கிறதோ, தெரியவில்லை. திரும்பும் வழியெல்லாம் மனோவுக்கு அஞ்சலி செலுத்தும் சுவரொட்டிகள் காணப்பட்டன. அந்தப் பகுதி சிறுவர்கள் கூடிநின்று மனோவுடனான தங்கள் நட்பு குறித்துப் பேசிக் கொண்டிருந்தது, பரிதாபக் காட்சி.  இந்தக் கொடூரக் கொலை அந்தச் சிறுவர்களிடையே இனம் புரியாத ஒரு சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருப்பதைக் காணமுடிகிறது...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close