வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (15/09/2017)

கடைசி தொடர்பு:11:41 (15/09/2017)

கந்துவட்டி கொடுமைக்குப் பலியான ஆசிரியர்: வீட்டை எழுதிக் கேட்டதால் தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்!

கந்துவட்டிக் கொடுமை காரணமாக, பள்ளி ஆசிரியர் ஒருவர் விஷம் அருந்தித் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.

கந்துவட்டி பலியான ஆசிரியர்

நெல்லை மாவட்டம், வள்ளியூர் ஞானதீபம் நகரைச் சேர்ந்தவர், பாபு இளங்கோ. இவர், சமீபத்தில் புதிய வீடு கட்டினார். இதற்காக, உள்ளூர் பிரமுகர்கள் சிலரிடம் வட்டிக்குப் பணம் வாங்கினார். 5 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கியுள்ளார். அதற்கான வட்டியுடன், தற்போது 40 லட்சம் வரை வந்துவிட்டதாகக் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். அத்துடன், அவர் புதிதாகக் கட்டிய சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டைத் தங்கள் பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு நெருக்கடிகொடுத்துள்ளனர். 

அவர் அதற்கு சம்மதிக்க மறுத்த நிலையில், கந்துவட்டிக் கும்பல் ஒன்று அவரைக் கடத்திச்சென்று, அடித்து மிரட்டியுள்ளது. அத்துடன், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் வீட்டில் இருந்தபோது, வீட்டுக்குள் நுழைந்த கந்துவட்டிக் கும்பல், நடுவீட்டில் அமர்ந்து குடித்துக் கும்மாளம் அடித்து, அசிங்கம் செய்துவிட்டுச் சென்றுள்ளது. அத்துடன், வீட்டை தங்கள் பெயருக்கு எழுதிக் கொடுக்காவிட்டால், குடும்பத்தையே காலி செய்துவிடுவதாகவும் மிரட்டிச் சென்றுள்ளது. 

இதனால் அச்சமடைந்த பாபு இளங்கோ, விஷம் அருந்தித் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக அவரது மனைவி ரெஜிலா, வள்ளியூர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், ’’நான் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறேன். எனது கணவரும் அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். நாங்கள் புதிதாக வீடு கட்ட சிலரிடம் எனது கணவர் கடன் வாங்கினார். அதற்கான வட்டியைச் சரியாகச் செலுத்திவந்த நிலையில், கடந்த ஒரிரு மாதங்களாக அதைக் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில், கடன் கொடுத்த சிலர், தினமும் எனது கணவருக்கு நெருக்கடிகொடுத்து வந்தனர். அவரும் இது தொடர்பாக பல முறை என்னிடம் தெரிவித்திருக்கிறார். அவர்கள் அளித்த நெருக்கடி மற்றும் எச்சரிக்கை காரணமாக மன உளைச்சலில் இருந்த எனது கணவர், தற்கொலை செய்துகொண்டார். இதன் பின்னணியில் இருக்கும் நபர்களையும் எனது கணவரை மிரட்டி தற்கொலைக்குத் தூண்டியவர்களையும் கண்டறிந்து, அவர்கள்மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனப் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர் பாபு இளங்கோவுக்கு மார்ஷா ரியோலின், ரெனிஷா தயாளின் ஆகிய இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கல்லூரி முதலாம் ஆண்டும், இரண்டாவது மகள் 10-ம் வகுப்பும் படித்துவருகின்றனர். கந்துவட்டிக் கொடுமைக்குப் பள்ளி ஆசிரியர் ஒருவர் பலியான சம்பவம், நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.