கிருஷ்ண ஜெயந்தி விழா : கிருஷ்ணர்-ராதை வேடமணிந்து கலக்கிய குழந்தைகள்

                    
 

கரூர் பண்டரிநாதன் ஆலயத்தில் நடந்த 96-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவில்,150 குழந்தைகள் கிருஷ்ணர்-ராதை வேடமணிந்து கலந்துகொண்டனர். கரூர் பண்டரிநாதன் ஆலயத்தில் 96-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி, கரூர் திருக்குறள் பேரவை அமைப்பு, குழந்தைகளுக்கு கிருஷ்ணர்-ராதை மாறுவேட போட்டியை முன்னதாக அறிவித்திருந்தது. அதன்படி,150 குழந்தைகள் கிருஷ்ணர்-ராதை வேடமணிந்து போட்டியில் பங்கேற்றனர்.

150 குழந்தைகள் கிருஷ்ணர்-ராதை வேடமணிந்து பண்டரிநாதன் கோயிலில் குவிந்ததால், பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதோடு, அங்கு நடந்த உறியடிப் போட்டியைத் திருக்குறள் பேரவைத் தலைவர், மேலை பழனியப்பன் தொடங்கிவைத்தார். அதேபோல, வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சியை ஆடிட்டர் ரமணன் மற்றும் சிவசங்கர் ஆகியோரும் தொடங்கிவைத்தனர். பின்னர் பண்டரிநாதர், கிருஷ்ணர் அலங்காரத்தில் நகர் வலம் வந்து, ஆதி கிருஷ்ணராத்தில் ராமசாமி,வெங்கட்ராமன் முன்னிலையில் உறியடி நடத்தி,மேற்சொன்ன இரண்டு இடங்களிலும் அன்னதானம் நடத்தப்பட்டு, விழா நிறைவுக்கு வந்தது.

கிருஷ்ணர்-ராதை வேடமணிந்து வந்த 150 குழந்தைகளுக்கும் ஏராளமான பரிசுகளை வழங்கினார், திருக்குறள் பேரவையின் தலைவர் மேலை பழனியப்பன். அன்னதான நிகழ்ச்சியை மாரி நற்பணி மன்றத்தைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் வினோத் செய்திருந்தனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தனலட்சுமி வங்கியின் மேலாளர் கவிஞர் அஷ்ரப் அலி, "சமய,மத ஒற்றுமையை வளர்க்கவும், ஆன்மிகம், பண்பாடு,கலாசாரம்,இறை ஒழுக்கம் ஆகியவை தழைக்கவும், குழந்தைகள் இறைப் பற்றோடு வளரவும் இதுபோன்ற வேடம் புனையும் நிகழ்ச்சிகள் வழிசெய்யும். இதை, வருடா வருடம் திருக்குறள் பேரவை நடத்த வேண்டும்" என்று பேசினார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!