வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (15/09/2017)

கடைசி தொடர்பு:17:34 (15/09/2017)

அதென்ன 104..? மருத்துவ ஹெல்ப்லைன் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை!

ஆபத்தான இணையதள விளையாட்டில் ஈடுபட்டு வெளியே வர முடியாமல் இருக்கும் மாணவர்களாக இருந்தாலும் சரி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களாக இருந்தாலும் சரி, `104' என்ற எண்ணில் எப்போது அழைத்தாலும் தேவையான சிகிச்சைமுறைகளையும் ஆலோசனைகளையும் பெறலாம்.

104

அவசரம் என்றால், சின்னக் குழந்தைகூட `108' என்ற எண்ணுக்கு போன் செய்கிறது. அந்த அளவுக்கு  108 பிரபலம். இந்த எண்ணுக்கு இணையாக `104' என்ற எண்ணும் மருத்துவத் தொலைபேசி சேவையாக 2014-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டுவருகிறது. இந்த எண்ணில் அழைத்து `சாதாரண காய்ச்சலுக்கும் டெங்கு காய்ச்சலுக்கும் என்ன வித்தியாசம்?' என்பதிலிருந்து உடல்நலம் குறித்த ஆலோசனைகள், ஆரோக்கியமான வாழ்க்கைக்குரிய தகவல்கள், மனநலம் சார்ந்த கவுன்சலிங் தகவல்கள் என அனைத்தையும் இலவசமாகப் பெறலாம். 

`104' சேவைக்கான கட்டுப்பாட்டு அறை, சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணி இயக்ககத்தில் செயல்பட்டுவருகிறது. இந்த மையம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பார்க்க, அங்கு சென்றோம்.

 ``எங்க ஊர் மருத்துவமனையில் சரியா கவனிக்க மாட்றாங்க. உடனே நடவடிக்கை எடுங்க சார்'' என்று விருதுநகர் மாவட்டத்திலிருந்து அழைப்பு. ``டெங்கு காய்ச்சலுக்கு எங்கு பரிசோதனை செய்வது?'' என அடுத்த அழைப்பு. இதுபோல் எண்ணற்ற அழைப்புகள் நிமிடத்துக்கு நிமிடம் வருகின்றன. அனைத்து அழைப்புகளுக்கும் சலிக்காமல் பதில் சொல்கிறார்கள், அழைப்புகளை ஏற்கும் மருத்துவ அதிகாரிகளும் மருத்துவர்களும். 

`104' கட்டுப்பாட்டு அறையில் ஒருங்கிணைப்புப் பணியின் குழுத் தலைவராக உள்ள நந்தினி புஷ்பகலாவிடம் பேசினோம்...

``இன்றைய வாழ்க்கைமுறையும் உணவுப்பழக்கமும் மாறியிருக்கின்றன. மக்களிடையே  உடல்நலம் சார்ந்த விழிப்புஉணர்வு அதிக அளவில் இருந்தாலும், உடனடி தேவைக்கு யாரிடம் ஆலோசனை பெறுவது என்பது பலருக்கும் தெரியவில்லை. மருத்துவம் மற்றும் சுகாதாரம் சார்ந்த உடனடி தகவலுக்கும் ஆலோசனைக்கும் `104' என்ற எண்ணை அழைத்தால், நாங்கள்  ஆலோசனை வழங்கவும் உதவி செய்யவும் தயாராக இருக்கிறோம்" என்றார்.

`104' மருத்துவம் சார்ந்த சேவையில், தலைவலி, காய்ச்சலுக்கான முதலுதவி தொடங்கி அவசரத் தேவைக்கு ரத்ததானம் பெறுவது வரையிலான அனைத்து தகவல்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மனநல ஆலோசனை, உடல் உறுப்பு தானங்கள் எனப் பொதுவான தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். இந்தச் சேவைக்கு விடுமுறையே கிடையாது. 24 மணி நேரமும் செயல்பட்டுவருகிறது. `புதிதாகப் பரவும் நோய்க்கான அறிகுறிகள், அந்த நோய்க்கான பரிசோதனைகள் எங்கு செய்யப்படுகின்றன, உரிய சிகிச்சைகள் எங்கு வழங்கப்படுகின்றன, வருமுன் பாதுகாத்துக்கொள்வது எப்படி?' போன்ற பல விவரங்களை  உடனுக்குடன்  தெரிந்துகொள்ளலாம். 

``ஏற்கெனவே மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள், சிகிச்சை சார்ந்த இரண்டாவது ஆலோசனை குறித்தும் `104' எண்ணை அழைத்து ஆலோசனை கேட்கலாம். எங்களுக்கு, சிகிச்சை குறித்த விவரங்களை இ மெயில் அனுப்பியும் விளக்கம் பெறலாம். தாழ்வு மனப்பான்மை, உறவுகளிடையே விரிசல், தூக்கமின்மை, மூத்த குடிமக்களுக்கான மனநல ஆலோசனை, மகப்பேறுக்குப் பிறகு ஏற்படும் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் களைதல் என 24 மணி நேர மன நல ஆலோசனைக்கான சிறப்பு மையமாகவும் `104' செயல்பட்டுவருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் மேற்கொள்ளவேண்டிய உணவு முறைகள், குழந்தை பராமரிப்பு என ஏராளமான ஆலோசனைகளை வழங்குகிறோம்.
மாணவர்கள், தேர்வை பதற்றப்படாமல் எழுதுவது எப்படி? தேர்ச்சி பெறவில்லை என்றாலும் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் என்ன என்பது போன்ற பல ஆலோசனைகளும் வழங்குகிறோம்'' என்றார் நந்தினி புஷ்பகலா. 

104 - மருத்துவ ஹெல்ப்லைன்

ஒவ்வோர் அழைப்பும் பதிவுசெய்யப்படுகிறது. மக்கள் என்ன தகவலைக் கேட்கிறார்கள் என்ற விவரங்களையும், `104' சேவையில் மருத்துவர்களின் பதில்களையும் சுகாதாரத் துறையில் இருப்பவர்கள் கண்காணிக்கிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்தாலும் சரி, மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக இருந்தாலும் சரி, இங்கு வழங்கப்படும் சிகிச்சையிலும் சேவையிலும் ஏதேனும் குறைகள் இருந்தால், உடனுக்குடன் தகவல் தெரிவிக்கலாம். 

``மருத்துவ சேவை மற்றும் பராமரிப்பு குறித்த புகார் தெரிவித்தால், அதை உடனே வட்டார அலுவலகத்தின் கவனத்துக்கும், சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தி, தேவையான நடவடிக்கை எடுத்து, அதை, புகார் கொடுத்தவருக்குத் தெரியப்படுத்தவும் செய்கிறோம்" என்கிறார் நந்தினி புஷ்பகலா. 

104 - நந்தினி புஷ்பகலா

இந்தச் சேவையால் பலன் அடைந்த பயனாளிகளிடம் `104' சேவை குறித்து விசாரித்தோம்... 

``வாந்தி, தலைவலி என இரவு 12 மணிக்கு அழைத்தாலும், உடனே முதலுதவிக்கான விவரங்களை சொல்கிறார்கள். மருத்துவ ஆலோசனையின்போது தைரியம் சொல்லி, நட்பாகவும் கனிவாகவும் பேசுகிறார்கள். இதன்மூலம் பதற்றத்தைத் தணித்து, பாதிப் பிரச்னையை அப்போதே தீர்த்துவிடுகிறார்கள். வருமுன் காப்போம் என்பதற்கு, இந்தச் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது" என்கிறார் பொள்ளாச்சியிலிருந்து மனநல ஆலோசனை பெற்ற பயனாளி ஒருவர்.

கும்பகோணத்தைச் சேர்ந்த சிவகுமாரின் தந்தை, மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார்.  இரவு 1 மணிக்கு `104' என்ற எண்ணுக்கு அழைத்து, தன் தந்தையின் கண்களை தானமாக வழங்குவதாகத் தகவல் தெரிவித்திருக்கிறார். அரை மணி நேரத்தில் மருத்துவக் குழு அவரது இல்லத்துக்குச் சென்று கண்களை தானமாகப் பெற்றிருக்கிறார்கள். இதுகுறித்து சிவகுமாரிடம் பேசினோம்... 

``நாங்கள் கும்பகோணத்தில் ஃபர்னீச்சர் கடை வைத்திருக்கிறோம். அப்பா திடீரென இறந்துவிட்டார் என்ற சோகத்தில் இருந்தேன். அப்போது `அப்பாவின் கண்களை தானமாக வழங்கலாமே!' என யோசித்து, `108' எண்ணுக்கு போன் செய்தேன். அவர்கள் `104'க்கு அழைக்கச் சொன்னார்கள். அழைத்த அரை மணி நேரத்தில் எனது வீட்டுக்கு வந்து கண்களை தானமாகப் பெற்றுக்கொண்டார்கள். `இறந்து பயனில்லாமல்போவதைவிட, என் தந்தை இறந்தாலும் அவரின் கண்கள் மற்றவருக்குப் பார்வையைத் தருமே!' என்ற எண்ணத்தில்தான் இதைச் செய்தேன். இப்போது இரண்டு பேருக்கு கண்பார்வை கிடைத்தாக தகவல் கிடைத்திருக்கிறது" என்கிறார்.

முழுவதும் இலவசமாக வழங்கப்படும் `104' சேவை, உங்களின் ஆரோக்கியத்துக்காகவே காத்திருக்கிறது!


டிரெண்டிங் @ விகடன்