Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டது ஏன்? அண்ணாவே வெளியிட்ட தகவல்..!

பெரியார்

திராவிட நாடு கோரிக்கையால் அன்றைய மத்திய அரசான காங்கிரஸை எரிச்சலுக்குள்ளாக்கியவர் அண்ணா. இந்தி எதிர்ப்புப்போராட்டம் தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரியக் காரணமானவர் அண்ணா. மற்ற எந்த மாநிலத்தைவிடவும் தமிழகத்தில் மாணவர்களும் இளைஞர்பட்டாளமும் இந்தி எதிர்ப்புப்போரில் தங்கள் உயிரையும் துச்சமென மதித்து மத்திய அரசுக்கெதிரான போரில் முன்நின்றனர். இந்த எழுச்சிக்கு வடிவம் கொடுத்தது அன்றைய அண்ணா தலைமையிலான தி.மு.கழகம். தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை தி.மு.க வெளியிட்டுவந்த நேரத்தில் தி.மு.கழகம் திராவிட நாடு கோரிக்கையை எழுப்பியது. அதன் தளகர்த்தர்கள் அதற்கு ஆதரவான வாதங்களுடன் தமிழக மேடைகளில் முழங்கினர். தி.மு.கழகத்தின் இந்த கோரிக்கையை எரிச்சலுடன் அணுகிய நேரு தி.மு. கழகம் பிரிவினையை ஊக்குவிப்பதாகக்கூறி திமுகவை தடைசெய்யும் முயற்சிகளில் சட்டரீதியாக வழிகளை முன்னெடுத்தது. இந்த விவகாரத்தை அண்ணா எப்படி சாதுர்யமாக கையாண்டு தி.மு.கவின் ஆயுளை நீட்டித்தார் என்பதை 1983ஆம் அண்டு களில் தமிழக அரசு வெளியிட்ட அண்ணா பவளவிழா மலரில் “அண்ணா ஒரு தீர்க்கதரிசி ” என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் விரிவாக எழுதினார். சுவாரஷ்யமான அந்த பகுதியை  இங்கு தருகிறோம்...

திராவிடரியக்கம் - திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட நாடு தனி நாடாக ஆக வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டிருந்ததென்பது மறைக்க முடியாத, மறுக்க முடியாத வரலாற்றைப் பேருண்மையாகும். 1962 சீனப் படையெடுப்பின்போது எழுந்த நிலவரம் காரணமாகப் பிரிவினைக் கோரிக்கையைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் கைவிட்டார்கள். அதே கால கட்டத்தில் பிரிவினைத் தடைச் சட்டமும் கொண்டுவரப்பட்டது. 'வீடு இருந்தால்தான் ஓடு மாற்றலாம். நாடு இருந்தால்தான் கட்சி நடத்தலாம். நாட்டுக்கே ஆபத்து என்று வந்திருக்கிற நிலையில் நாம் பிரிவினை பேசுவது அயலானுக்கு இடம் கொடுபத்து விடுவதாகும். நாம் அப்படி நடந்துகொண்டால் வருங்காலத்துத் தலைமுறை நம்மைச் சபிக்கும்' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள், 1962 அக்டோபரில் வேலூர் சிறையில் இருந்து விடுதலையடைந்தபோது தெரிவித்தார்கள்.

அண்ணாஇந்தியா மீது சீனா படையெடுத்துள்ள நிலையில் யாரும் கேளாமல், சற்றும் எதிர்பாராத நிலையில் இந்த அறிவிப்பை அண்ணா செய்தபோது,  அவரை யாராவது பாராட்டினார்களா? அண்ணாவின் செயலில் காணப்பட்ட தேசபக்திக்காக அவரைப் பாராட்ட வேண்டிய காங்கிரஸ்காரர்கள்கூட அவரைப் பாராட்டத் தவறிவிட்டனர். பங்காளிகளான திராவிடர் கழகத்தாருடன் சேர்ந்து காங்கிரஸ்காரர்களும்,  ''சட்டம் வருகிறதென்பதால் பயந்து பிரிவினையைக் கைவிட்டார்கள்" என்றுதான் மலிவான முறையில் பிரசாரம் செய்தனர்.

சிறையிலிருந்து வெளியே வந்தவுடன்,  கழகத் தோழர்கள் யாரையும் கலந்து பேசாமல் அறிஞர் அண்ணா அவர்கள் இப்படி அறிவிக்கலாமா என்று நம்மிலே எவரும் கேட்கவில்லை. கழகத்தின் உயிர்க் கொள்கையான ஒன்றை எப்படி ஒரு கணத்தில் விட்டுவிடலாம் என்றும் நாம் வீண் பழி போடவில்லை. ஒரு மாறான சூழ்நிலை. ஒரு பெரிய எதிர்ப்பு தோன்றியபோது அறநிலையில் 'மோதுதல்' எனும் பாதையை அண்ணா தேர்தெடுக்கவில்லை. மாறாக எதிர்கால விளைவுகளைப் பற்றி ஆழமாகச் சிந்தித்தார். அதன் விளைவாகவே பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடுவதாக அறிவித்தார்.

அப்போது பரவலாக எழுந்த பிரசாரத்தை முறியடிக்க,  அண்ணா அவர்கள் கழக சார்பில் ஒரு சுவரொட்டி அடித்து வெளியிட்டார். ''கழகத்தை அழிக்க சட்டம் கொணர்ந்தனர். சட்டத்தைத் திருத்தி கழகத்தைக் காத்தோம். 'சூட்சுமம்' புரிகிறதா தம்பி?" என்று அந்த சுவரொட்டி பேசியது.

அதுமட்டுமல்ல. இந்திய அரசுக்கு ஆதரவாகவும், சீனாவுக்கு எதிராகவும் அண்ணா அவர்கள் பிரசாரம் செய்தார்கள். யுத்த நிதிக்குப் பணம் திரட்டினார்கள். வானொலியில் இருமுறை பேசினார்கள். ஆனாலும் தேசிய முகாமில் இதற்கெல்லாம் உரிய முறையில் பாராட்டு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் கழகத் தோழர்களிடையே இருந்தது. அதையும் அறிந்தார் அண்ணா. மத்திய அரசின் போக்கிலே உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டினர் பலர். இத்தனை குறைபாடுகளைத் தாங்கிக் கொண்டு எப்படி அண்ணா, காங்கிரஸ் அரசை ஆதரிப்பது என்று கழகத் தோழர்கள் கேட்டனர்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்கள் - மதுரை தியாகராயர் கல்லூரியிலே என்று நினைவு -

''பாதுகாப்பிற்காக இவ்வளவு பணி செய்கிறோம். ஆளும் கட்சி நம்மைப் பாராட்டவில்லையே என்று கழகத் தோழர்கள் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். தம்பி! வரலாறு நம்மைப் பாராட்டும்! வந்து போகும் மந்திரிகள் பாராட்டா பெரிது! நீ செய்யும் நல்ல காரியத்துக்காக உன் அண்ணா நான் பாராட்டுகிறேன். அதைவிட வேறு யாருடைய பாராட்டு பெரிது?" என்று கேட்டார் அண்ணா. அதுமட்டுமல்ல; நெருக்கடியான நேரத்தில் மத்திய அரசை, காங்கிரஸ் அரசைக் குறை சொல்லாதீர்கள் என்றும் திட்டவட்டமாக அண்ணா தெரிவித்தார்.

''ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய நேரம் இது. செம்மைப்படுத்தும் காரியத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்றே அண்ணா தெரிவித்தார். இன்னும் ஒருபடி மேலே சென்று சொன்னார் அண்ணா, ''மத்திய அரசின் குறைகளை இப்போது பேசாதீர்கள். மணப்பந்தலில் இருக்கும் போது மணமகளின் கழுத்தில் எத்தனை மச்சங்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டாம். அதற்கு வேறு நேரம் இருக்கிறது" என்று கட்டளையிட்டார் அண்ணா. இதுதான் தேசியப் பார்வையின் முழுமையான இலக்கணம்.

இத்தனைக்குப் பிறகும் தி.மு. கழகத்திற்கு வந்த ஆபத்து நீங்கவில்லை என்று கருதியதால், பேரறிஞர் அண்ணா அவர்கள் அரசியல் நோக்கம் இல்லாத வகையில், ''மக்கள் உரிமைக் கழகம்" எனும் அமைப்பை, நீதிபதியாகவும் அமைச்சராகவும் இருந்த வழக்கறிஞர் நாராயணசாமி முதலியார் தலைமையில் நிறுவிடவில்லையா? அமைப்பைக் காப்பாற்றுவதற்கு அண்ணா அவர்கள் ஏன் அத்தனை பாடுபட வேண்டும் என்று இப்போது கேட்க முடியுமா?

எம்.ஜி.ஆர்

பேரறிஞர் அண்ணா அவர்கள் தன் மீது வீசப்பட்ட 'கோழை' 'உறுதியில்லாதவன்' எனும் வசைச் சொற்களையெல்லாம் ஏற்றுக் கொண்டு,  தீர்க்க தரிசனத்துடன் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அமைப்பைக் காத்தார். இல்லையென்றால் தமிழகத்தின் கதி என்ன ஆகியிருக்கும்? அன்று அது சரிவரப் புரிந்து கொள்ளப்படவில்லை. அதைப்போலவே, அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் எனும் வடிவம் ஏற்பட்டபோது இருந்த சூழ்நிலைகள்,  காலக் கட்டாயம் இவற்றுக்குப் பயந்து அந்த முடிவை நான் மேற்கொண்டேன் என்று கூறுவதற்கும், பிரிவினைக் கோரிக்கையை, அண்ணா பயத்தின் காரணமாகக் கைவிட்டார் என்று கூறுவதற்கும் பெரிய வேறுபாடில்லை.

அண்ணாவின் தீர்க்கதரிசனம் எவ்வாறு பிற்காலத்தில் மெய்யானதோ அதேபோல வருங்காலம்தான் என் முடிவைப் பற்றிய தீர்ப்பைக் கூற வேண்டும். எனினும் 1962-ல் பேரறிஞர் அண்ணா அவர்கள் சந்தித்து எதிர்கொண்ட அதே சூழ்நிலை, 1974-75-ம் ஆண்டுகளில் எனக்கு ஏற்பட்டதா? 1962-ல் நிலவிய நிர்ப்பந்தங்கள் 1974-75-ம் ஆண்டுகளில் நிலவியதா? என்பதெல்லாம் வேறு வகையானவை. பிற்காலச் சரித்திர ஆசிரியர்களுக்கு அதை நாம் விட்டு விடுவோம்.

ஆனால், 62-ல் அண்ணா அவர்கள் பெற்ற தேசியப் பார்வையின் அடிப்படையில்தான் 74-ல் நாம் அனைத்திந்திய வடிவம் பெற்றோம் என்று சொல்வது மிகையானதல்ல. பேரறிஞர் அண்ணா அவர்கள் பிரிவினையைக் கைவிட்டார் என்பதுடன்,  மாநிலங்கள் அவையில் இடம்பெற்று தேசியத் தலைவராக உயர்ந்தார் என்பது இந்தக் காலகட்டத்தில்தான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

முன்பு பிரிவினை பேசியவர்கள் என்ற காரணத்தால்,  அந்த வாடை இன்னும் இவர்களிடம் போக வில்லை என்றுபழி சுமத்துமாறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அண்ணா அவர்கள் மிகுந்த அக்கறை காட்டினார்கள். தந்தை பெரியாருடன் ஒன்றாக இருந்த காலத்திலேயே, 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர நாள்தான், துக்கநாள் அல்ல என்று அண்ணா வெளியிட்ட அறிக்கையில், ''உலகம் முழுவதும் கூர்ந்து கவனிக்கும் மகத்தான சம்பவத்தை நமது கொள்கையை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு அளந்து பார்ப்பதோ, உதாசீனம் செய்வதோ சரியாகாது" என்று விளக்கமாகச் சொன்னார்.

அண்ணா

தேசியப் பார்வை என்பது அண்ணா வழிக்கு மாறானது என்று இன்றும் பேசி வருவோர்தான், உண்மையில் அண்ணாவை உணராதவர்கள், புரியாதவர்கள்! அவர்களை சில கேள்விகள் தொடர்ந்து கேட்டு வந்தால் அதில் இருந்து கிடைக்கும் பதில் மூலம்,  அத்தகையவர்கள் ஒப்புக்காக ஒற்றுமை பேசுகிறவர்களே தவிர ''உள்ளத்தில் பிரிவினைவாதிகள்" என்பது நன்கு தெரியவரும்.

பிரிவினையைக் கைவிட்டு,  தேசிய எண்ணங்களுக்கு வலிவூட்டுவது என்ற பாதையில் அண்ணா அவர்களின் தி.மு.க. பயணம் தொடங்கிய பிறகு, 1965-ல் நடந்த மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பின்னர், மத்திய அரசுக்கு எதிராக, அதன் இந்தி ஆதிக்கப் போக்கிற்கு எதிராக நாம் அணி திரண்ட நேரத்தில்கூட அண்ணா அவர்கள் தனது அனைத்திந்தியப் பார்வையைக் கைவிடவில்லை.

பண்டித நேரு மறைந்த பிறகு, காங்கிரசில் இடது சாரிகளுக்கும் வலது சாரிகளுக்கும் இடையே கொள்கைப் போர் நடந்து வந்ததை அண்ணா அவர்கள் தமக்கேயுரிய தொலைநோக்குடன் கண்டார். அப்படிப்பட்ட மோதல் ஏற்படுமானால் காங்கிரசில் உள்ள இடதுசாரிகளை ஆதரிப்பதுதான் நாட்டுக்கு நல்லது என்பதை அண்ணா வலியுறுத்தினார். தனது பிறந்த நாளையொட்டி 1965-ம் ஆண்டு,  செப்டம்பர் 15-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ''காங்கிரஸ் கட்சிக்குள் வலதுசாரி, இடதுசாரி சக்திகள் மோதுகின்றன. அதில் வலதுசாரிகளின் கை மேலோங்காமல் பார்த்துக் கொள்வது நாட்டுக்கு நல்லது" என்று அண்ணா அவர்கள் தெளிவாக வழிகாட்டினார்கள்.

தி.மு.கழகம் போன்ற ஒரு அரசியல் அமைப்பு அனைத்திந்திய அளவில் அமைய வேண்டும் என்று பல நேரங்களில், பலர் பேரறிஞர் அண்ணா அவர்களிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதுண்டு. படப் பிடிப்புக்காக வெளி மாநிலங்களுக்குச் சென்று, அங்கு தங்கிய நேரத்தில் ஜெய்ப்பூரில்,  என்னிடம் அப்பகுதியிலிருந்த பல படித்தவர்கள் இக்கோரிக்கையை வெளியிட்டார்கள். அதனை சுட்டிக் காட்டி,  கலைவாணர் அரங்கில் மாறனை ஆசிரியராகக் கொண்டு 'ரைசிங் சன்' என்னும் ஆங்கில வார ஏடு வெளியீட்டு விழாவின்போது பேசிய நான், 'தி.மு.கழகம் அகில இந்திய அமைப்பாக மாற வேண்டும்" என்று சொன்னேன்.

அண்ணா

என் கருத்துக்குப் பதில் சொல்ல வந்த அன்றைய முதல்வர் கருணாநிதி,  ''அகில இந்தியா என்பதே மாயை, அது வேண்டாம்" என்று பேசினார். அவர் பேச்சில் குறிப்பிட்ட 'மாயை' எனும் சொல் கருணாநிதியின் உள்ளக் கிடக்கையின் பிரதிபலிப்புதான் என்றாலும்,  அந்தப் பகுதி எந்த ஏட்டிலும் பிரசுரிக்கப்படாமல் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். இது அண்ணா அவர்களின் மறைவுக்குப் பின் நடந்தது.

இதே சூழ்நிலை அண்ணா அவர்களுக்கும் ஏற்பட்டது. அனைத்திந்தியா என்பது பாவம் என்றோ நமக்கு மாறானது, விரோதமானது, தீதானது என்றோ அண்ணா கூறவில்லை. 15.11.66 முரசொலி இதழ் தருகிற சேதி இது. அண்ணா பேசுகிறார்:- 'ஜெய்ப்பூர் பல்கலைக் கழகத்தில் பேசும்போது மாணவர் ஒருவர் எழுந்து ''நீங்கள் ஏன் டி.எம்.கே. என்று தமிழகத்தில் மட்டும் பணியாற்ற வேண்டும். பி.எம்.கே. (பாரத் முன்னேற்றக் கழகம்) என்று பெயர் வைத்துக் கொண்டு அகில இந்திய ரீதியில் பணியாற்றக் கூடாதா?" என்று கேட்டார். அதற்கு, நான் ''எனக்கு அந்த அளவுக்கு சக்தி இல்லை. நான் என் வட்டத்தில் பணியாற்றுகிறேன். நீங்கள் உங்கள் வட்டாரத்தில் ஜனநாயகத்தைக் காக்கும் பணியில் ஈடுபடுங்கள். பிறகு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வோம்" என்றுதான் அண்ணா பதில் சொன்னாரே தவிர, அகில இந்தியா என்பதே ஆகாதது என்று கூறவில்லை.

1966-ல்,  அகில இந்திய அளவில் காங்கிரசைப் பதவியில் இருந்து இறக்கி,  மாற்றுக் கட்சி ஒன்று ஆட்சியில் அமர முடியும் என்ற நிலை இல்லாத காரணத்தால், ஜனநாயகத்தில் மாற்றுக் கட்சி ஆட்சி ஏற்படும் வாய்ப்பே வராதோ என்ற நிலையில் கூட அண்ணா அவர்கள், அதே பேச்சில், காங்கிரசுக்கு அகில இந்திய அளவில் மாற்று ஏற்பாடு என்றே சிந்தித்தார். அதுவும் கொள்கை அடிப்படையில் என்பதையும் நான் நினைவில் கொள்ள வேண்டும்.

இதே மனப்பாங்கை அண்ணா அவர்கள் 1967 தேர்தல் பிரசாரத்திலும் வெளியிட்டார்கள். 7.1.67-ல் தியாகராய நகர் தொகுதியில் திரு. ம.பொ.சி.அவர்களை ஆதரித்துப் பேசும்போது,  ''வெள்ளையனை எதிர்த்து நடந்த ஆகஸ்ட் புரட்சியில் கலந்து கொள்ள முடியாமற் போனதற்காக இன்றும் வருந்துகிறவன் நான். எனவே ம.பொ.சி.-க்கு ஓட்டுக் கேட்க வருவதை ஒரு தேசியக் காரியமாகக் கருதுகிறேன்" என்றே அண்ணா அவர்கள் பேசினார்கள்.

அண்ணா

அண்ணா அவர்கள் 1967-ல் தமிழக முதல்வராக மக்களால் அமர்த்தப்படுகிறார். அண்ணா பதவியேற்ற அதே 1967ல் ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர நாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது.

கோட்டைக் கொடிமரத்தில் கொடியேறினால் போதாது. தி.மு. கழகத் தலைமை நிலையத்திலும் அன்றைக்கு ஒரு நாள் தேசியக் கொடி பறக்க வேண்டும் என்று அண்ணா கட்டளையிடுகிறார். தி.மு.க. தலைமை நிலையத்தில் மட்டுமின்றி ஆயிரம்விளக்கு அண்ணா சாலையில் இருந்த முரசொலி அலுவலகத்தில் கூட தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதே 1967-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ம் தேதி மாலை சென்னை கோடம்பாக்கத்தில் தி.மு.கழக சார்பில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது. 

அந்தக் கூட்டத்தில் ம.பொ.சி. தலைமையில் முதல்வர் பேரறிஞர் அண்ணா பேசினார் என்பதையும் மறக்கக் கூடாது. இதற்கு என்ன பொருள்? கழகம் தேசியப் பாதையில் தேசிய இலக்குகளை நோக்கி எவருக்கும் சற்றும் குன்றாத வகையில் நடைபோட வேண்டும் என்ற அண்ணாவின் உயர்நோக்கம் புலனாகவில்லையா?

அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு 1968 ஏப்ரல் மாதம் அமெரிக்கா சென்று சுற்றுப் பயணம் நடத்திய நேரத்தில் எந்த இடத்திலும் தேசியத் தன்மையினையோ, தேசியப் பார்வையினையோ விட்டுக் கொடுத்ததில்லை. மிகச் சிக்கலான நிலையில் மிகத் திறமையான முறையில் மத்திய அரசை இந்திரா நடத்திச் செல்வதாகவும், நாட்டின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வருவதையே விரும்புவதாகவும் அண்ணா தெரிவித்தார். வெளிநாட்டுக் கொள்கையைப் பொறுத்தவரை மத்திய அரசின் அணுகுமுறையை ஏற்பதாகவும் அண்ணா அவர்கள் தெளிவாகக் கூறினார்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பொது வாழ்வு 1935-ல் தொடங்கியது. 1969-ல் முடிவுறுகிறது. இந்த நீண்ட இடைவெளியில் அவர் எத்தனையோ காரியங்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறார். அண்ணா அவர்கள் 1956-ல் சென்னை கருத்து கால மாற்றத்தால் 1967-ல் வேறு வகையில், வேறு முறையில், வேறு அமைப்பில் கூறப்பட்டிருக்குமானால் அவர் பிற்காலத்தில் என்ன போதித்தாரோ, அதைக் கடைப்பிடித்து நடப்பதுதான் அண்ணா அவர்களின் உண்மையான தம்பிகளுக்கு அழகாகும். அதுவே கடமையாகும்.

அண்ணா

மாநில சுயாட்சியா, கூட்டாட்சி அமைப்பா என்றால் அண்ணா அவர்கள் தனது இறுதிச் சாசனத்தில் தெளிவுபடக் கூறிய Fedaralism தான் நமது குறிக்கோள் ஆகும்.

''தம்பி! மத்திய அரசுக்கு எரிச்சலூட்டுவதோ, டில்லியுடன் சச்சரவில் ஈடுபடுவதோ என் நோக்கமல்ல, அது யாருக்கும் உதவி செய்வதாக இருக்காது. உண்மைதான். பொருத்தமான காலகட்டத்தில் திடமனதுடன் விளங்க வேண்டும். அதுதான் முக்கியம்" என்று 14.1.69-ல் அண்ணா கைப்பட கட்டளையிட்டுள்ளார்.

அதுதான் நமக்கு வேத வாக்கு. அதுதான் நமக்கு இடப்பட்ட கட்டளை. தமிழ் நாட்டினுடைய நலன்களையும், தமிழ் மக்களுடைய தனித்தன்மைகளையும் கட்டிக் காத்து வருகிற அதே நேரத்தில் தேசிய இலக்குகளுக்கு வலிவு சேர்க்கிற வகையில் ஒருமைப்பாட்டுக்காக உழைப்பதும், பேத உணர்ச்சிகள், பிரிவினை எண்ணங்கள் வளர இடம் தராமல் பார்த்துக் கொள்வதும் பேரறிஞர் அண்ணா அவர்கள் கட்டிக் காத்த குறிக்கோள்களாகும்.”

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close