வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (15/09/2017)

கடைசி தொடர்பு:13:10 (15/09/2017)

அண்ணா பிறந்த நாள் விழா - முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 109 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்குத் தமிழக முதல்வர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முனுசாமி, மதுசூதனன், செம்மலை, பா.வளர்மதி, கோகுல இந்திரா, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். 

stalin

அதே போன்று தி.மு.க செயல் தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். சிலைக்குக் கீழே வைக்கபட்டிருந்த அண்ணா படத்துக்கும் மலர்த் தூவி மரியாதை செய்தார். அப்போது தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு, கனிமொழி, துரை முருகன், ஆ.ராசா உள்ளிட்ட தி.மு.க பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணா சாலையில் இருக்கும் அண்ணா சிலைக்கு மரியாதை செய்தார். அதே நேரத்தில் அங்கு தினகரனும் மரியாதை செய்ய வந்தார். அப்போது இரண்டு தரப்பு ஆதரவாளர்களுக்கும் சிறு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுது நேரத்துக்குப் பிறகு, இருவரும் அண்ணா சிலைக்கு மரியாதை செய்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர். தமிழகம் முழுவதும் அண்ணாவின் பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.