இரட்டை இலைச் சின்னம் : தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

'இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதுகுறித்து அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்' என்று தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விரைந்து முடிவெடுக்கக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ஆதித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ சின்னம் முடக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகின்றன. இதனால், கட்சியின் பணிகள் முடங்கிக் கிடப்பதாகவும், இதனால் கட்சியின் தொண்டர்களிடயே குழப்பம் நிலவுகிறது. இதேபோன்ற பிரச்னை சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சியின் பிளவு ஏற்பட்ட போது பெரும்பான்மை ஆதரவு உள்ளவருக்கே கட்சி சொந்தம் என்று தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது. இதைப் பின்பற்றி அ.தி.மு.க. விவகாரத்திலும் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும். தென்னிந்திய சினிமா வர்த்தக சபை தேர்தலில் பிரச்னை எழுந்தபோது, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடத்தப்பட்டது. 

அந்த முறையைப் பின்பற்றி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் அணியிலுள்ள எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், கட்சி நிர்வாகிகளின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி தேர்தல் நடத்தி முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீது கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெற்ற விசாரணையில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக இருதரப்பினரும் லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்திருப்பதாலும், இருதரப்பினரும் மாறி, மாறி காலஅவகாசம் கேட்பதாலும் முடிவெடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தல் வருவதால், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!