Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினகரனின் ஸ்லீப்பர் செல்ஸ்...! ஐ.பி.எஸ். அதிகாரிகளின் இடமாற்றப் பின்னணி #VikatanExclusive

 போலீஸ் ஐ;.பி.எஸ். அதிகாரி ஜாங்கிட்

தினகரனின் ஸ்லீப்பர் செல்களாகச் செயல்பட்டுவந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடம் மாற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருந்தார். டி.ஜி.பி பதவி உயர்வுப் பட்டியல் வந்ததும், அவர்கள் இடமாற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றிணைந்த பிறகு, தினகரனின் ஆதரவாளர்களாக இருந்தவர்களுக்குச் சிக்கல் எழுந்துள்ளது. கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். போலீஸார் மூலம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பேரம் பேசப்படுவதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் குற்றம் சாட்டினர். தற்போது, பொதுக்குழுக் கூட்டம் வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் உற்சாகத்தில் உள்ளனர். தினகரனின் ஆதரவாளர்களைத் தங்கள் பக்கம் இழுக்க, அவர்கள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். அணி மாற விரும்பாத தினகரன் ஆதரவாளர்களுக்கு, மறைமுகமாகவும் நேரிடையாகவும் நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன.

இந்தச் சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எடுக்கும் சில ரகசிய முடிவுகள்குறித்த தகவல்கள், தினகரனுக்குச் சிலர்மூலம் உடனுக்குடன் கொடுக்கப்படுவதாக சந்தேகம் எழுந்தது. அவர்கள்குறித்த தகவல்களைச் சேகரிக்கும்படி எடப்பாடி பழனிசாமிக்கு நம்பிக்கையான உளவுத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தினகரனின் ஸ்லீப்பர் செல்களாகச் செயல்படும் ஐ.பி.எஸ். அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகளின் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன. அந்தப் பட்டியல், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்கப்பட்டது. உடனடியாக அவர்களை இடமாற்ற முதல்வர் முடிவுசெய்திருந்தார்.

அப்போது, தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி-யாக பதவி உயர்வுக்கான பட்டியல் தயாராகிக்கொண்டிருந்தது. அந்தப் பதவி உயர்வுப் பட்டியலுடன் தினகரனின் ஸ்லீப்பர் செல்களாகச் செயல்படுவதாகச் சந்தேகிக்கப்பட்ட சில ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி டி.ஜி.பி பதவி உயர்வுப் பட்டியல் வந்தவுடன் அவர்களுடன் சேர்த்து தினகரனின் ஆதரவு ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஐ.பி.எஸ் அதிகாரிகள், "தமிழகக் காவல்துறையில் அரசியல்வாதிகளின் பாலிடிக்ஸைவிட ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பாலிடிக்ஸ் அதிகமாக உள்ளது. இங்கு, திறமைக்கு மரியாதை கிடையாது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாளர்களாகச் செயல்படும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மட்டுமே முக்கியப் பதவிகளில் பணியமர்த்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. அந்த வரிசையில்தான் தமிழகச் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி பதவி, டி.கே.ராஜேந்திரனுக்கு இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்புடன் வழங்கியது. இதனால், சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் டி.ஜி.பி (சட்டம், ஒழுங்கு) வாய்ப்புப் பறிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த சில ஆண்டுகளாகத் தமிழக காவல்துறையில் நடந்துவருகிறது.

திரிபாதி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழகத்தில் அ.தி.மு.க-விலும் ஆட்சியிலும் கடும் குழப்பம் நிலவியது. தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவரது குடும்பத்தினருக்கு விசுவாசமாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு முக்கியப் பதவிகள் கொடுக்கப்பட்டன. டம்மி பதவிகளில் இருந்த சசிகலா குடும்பத்தின் விசுவாசிகளான ஐ.பி.எஸ் அதிகாரிகள், அதிகாரமிக்க பதவிகளில் பணியமர்ந்தனர். சசிகலா, சிறைக்குச் சென்ற பிறகும் அவர்கள் அந்தப் பணியிலேயே தொடர்ந்தனர்.

சசிகலா, தினகரனுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்படத் தொடங்கிய பிறகும் சம்பந்தப்பட்ட சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் அந்தக் குடும்பத்தினருக்கு விசுவாசமாகவே இருந்தனர். மேலும், இந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட சில ரகசியத் தகவல்கள், அந்தக் குடும்பத்தினருக்குச் சம்பந்தப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள்மூலம் சொல்லப்படுவதாக சந்தேகம் எழுந்தது. உடனே சம்பந்தப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அப்போது, மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள், ஏ.டி.ஜி.பி-யிலிருந்து டி.ஜி.பி-யாகப் பதவி உயர்வுபெறும் பட்டியலும் தயாராகிக்கொண்டிருந்தது. அந்தப் பட்டியலுடன் தினகரனின் ஆதரவு ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றினால், எந்த சர்ச்சையும் ஏற்படாது என்று கருதி, நேற்று மாலை 14 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழகக் காவல்துறையில் சட்டம், ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக இருந்த திரிபாதி, ஜெயலலிதாவுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தார். இதனால், ஜெயலலிதா ஆட்சியில் திரிபாதிக்கும், ஜார்ஜுக்கும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் பதவி வழங்கப்பட்டது.  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தினருக்கு விசுவாசமாக இருந்தாக, எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்குச் சந்தேகம் எழுந்தது. இதனால், டி.ஜி.பி-யாக பதவி உயர்வுபெற்ற திரிபாதி, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்துக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்து, நீண்டகால இடைவெளிக்குப் பிறகு, சென்னையில் பணியமர்த்தப்பட்ட ஏ.டி.ஜி.பி., ஜாங்கிட், டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெற்ற பிறகு, பொருளாதாரக் குற்றப்பிரிவிலிருந்து போக்குவரத்துக் கழக முதன்மை விஜிலென்ஸ் அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். மாநில மனித உரிமை ஆணையத்தின் ஏ.டி.ஜி.பி-யாக இருந்த சி.கே.காந்திராஜன், டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெற்றதால், இடமாற்றம் செய்யப்படாமல் அங்கேயே பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகக் காவல்துறையில் டி.ஜி.பி (சட்டம், ஒழுங்கு) பதவிக்குப் பிறகு  சட்டம், ஒழுங்கு ஏ.டி.ஜி.பி பதவியும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அந்தப் பதவியிலிருந்த திரிபாதி, டி.ஜி.பி-யாகப் பதவி உயர்வு பெற்றதால், அங்கு யாரை நியமிக்கலாம் என்ற ஆலோசனை நடந்துள்ளது. அப்போது, தமிழ்நாடு போலீஸ் கார்ப்பரேஷனின் தலைவராக இருந்த ஏ.டி.ஜி.பி., விஜயகுமாரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதோடு, இன்னும் இரண்டு ஏ.டி.ஜி.பி-க்களின் பெயர்களும் டி.ஜி.பி. அலுவலகத்திலிருந்து முதல்வர் கவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், முதல் பெயரான விஜயகுமார், டிக் அடிக்கப்பட்டது. இதற்கு, எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டப்பட்டவர்கள் விஜயகுமாருக்கு சிபாரிசுசெய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ஐ.ஏ.எஸ் மற்றும் இன்னும் சில ஐ.பி.எஸ் அதிகாரிகளையும், உளவுத்துறை அதிகாரிகளையும் இடம் மாற்ற முடிவுசெய்யப்பட உள்ளனர்" என்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close