'நான் யார் தெரியுமா?' - போலீஸை மிரட்டித் தாக்கிய அ.தி.மு.க நிர்வாகி கைது!

குற்றாலத்தில், குடிபோதையில் ஈடுபட்டதுடன் பாதுகாப்புக்கு இருந்த போலீஸாருடன் தகராறுசெய்து தாக்குதல் நடத்திய அ.தி.மு.க நிர்வாகி உள்ளிட்ட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.

குற்றாலத்தில் தகராறு

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில், மது அருந்திவிட்டு குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்ட போதிலும், சுற்றுலாவுக்கு வெளியிடங்களிலிருந்து வருபவர்கள், ஆர்வம் மிகுதியால் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இது, அருவிக்குக் குளிப்பதற்காக வரக்கூடிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இதனால், அனைத்து அருவிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

அ.தி.மு.க நிர்வாகி சரவணன்விதிமுறைகளை மீறி, மது போதையில் அருவிக்குக் குளிப்பதற்காக வருபவர்களை போலீஸார் குளிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவருகின்றனர். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளரான சரவணன், முன்னாள் நகரச் செயலாளர் பாரதி முருகன் மற்றும் சேகர் ஆகிய மூவரும் போதையில் குளிப்பதற்கு வந்துள்ளனர். அவர்கள், அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்களிடம் தகராறுசெய்தனர்.

பழைய குற்றால அருவியில் இந்தச் சம்பவம் நடந்தது. இதைப் பார்த்த பாதுகாப்புப் போலீஸார், மூவரையும் சமாதானப்படுத்தினார்கள். ஆனால், அதிகமான போதையில் இருந்த மூவரும் போலீஸாருடன் தகராறு செய்தனர். திண்டுக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளர் சரவணன், ‘நான் யார் தெரியுமா? அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் சொல்லி உன்னோட வேலையைத் தொலைச்சுப்புடுவேன்’ என மிரட்டியுள்ளார்.

அத்துடன் சரவனண், பாரதி முருகன், சேகர் ஆகிய மூவரும் பாதுகாப்புக்கு நின்ற போலீஸாரை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். இதை எதிர்பார்க்காத போலீஸார், நிலை குலைந்தனர். உடனடியாகக் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். பின்னர், மூவரையும் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் குற்றாலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே, அ.தி.மு.க-வில் தற்போது கோஷ்டிகள் அதிகரித்துள்ள நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் ஆதரவாளர்கள் மது போதை காரணமாக போலீஸாரிடம் சிக்கிக் கொண்ட விவகாரத்தை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அவரின் எதிரணியினர் கொண்டாடி மகிழ்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!