“சுவாதி முதல் ஹாசினி வரை... தீர்வு நோக்கி நகராமல் என்ன செய்கிறோம்?!” | No justice over the death of Swathi or hasini, saddens people

வெளியிடப்பட்ட நேரம்: 14:09 (15/09/2017)

கடைசி தொடர்பு:14:39 (15/09/2017)

“சுவாதி முதல் ஹாசினி வரை... தீர்வு நோக்கி நகராமல் என்ன செய்கிறோம்?!”

தமிழகத்தில் அரசியல் ரீதியான அசாதாரண சூழல் நிலவி வந்த கடந்த பிப்ரவரி 5-ம் தேதி ஏழு வயது ஹாசினி காணாமல் போனார்.

ஹாசினி

ஆனால், தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ்களில் ஆழ்ந்திருந்த தமிழக மக்களுக்குச் சிறு குழந்தை ஹாசினி காணாமல் போனதும் அதன் பிறகு எரிக்கப்பட்ட நிலையில் அனகாபுத்தூர் அருகே அவளது உடல் கண்டெடுக்கப்பட்டதும் அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை. 

தற்போது, எட்டு மாதங்கள் கடந்த நிலையிலும் தமிழகம் இன்றும் அதே அசாதாரண அரசியல் சூழலில் சிக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் குழந்தை ஹாசினி வழக்கில் அவளைப் பாலியல் வன்புணர்வு செய்து எரித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதான அவளின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜஸ்வந்த் என்னும் மெத்தப் படித்த சாப்ட்வேர் இன்ஜினீயர், குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனால், அவர் தற்போது  ஜாமீனில் வெளியே வந்துள்ளதாகக் காவல்துறை தரப்பு கூறியுள்ளது. 

ஜஸ்வந்த

குற்றம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் ஜஸ்வந்தை கைது செய்து அழைத்து வந்தபோது அந்தப் பகுதி மக்கள் அனைவரும் அவரைத் தாக்கத் தொடங்கினார்கள். தற்போது ஜஸ்வந்தின் மீதான குண்டர் சட்டம் விலக்கப்பட்டதை அடுத்து ஹாசினியின் வீடு இருக்கும் போரூர் மதனந்தபுரம் பகுதி மக்கள் உச்சகட்ட கோபத்தில் ஆழ்ந்துள்ளனர். ஹாசினியின்  வீட்டின் அருகே இருக்கும் எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான சபி கூறுகையில், “நாடே தற்போது மோசமான சூழலில்தான் இருக்கிறது. நமக்கான நியாயம் கிடைக்கவிட்டால், செத்துதான் போகவேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். இந்தச் சூழலில் ஒரு பெரும் குற்றம் செய்தவருக்கு குண்டர் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது பெரிய விஷயம் இல்லை.

குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை, “என் பிள்ளையை நான் விடுவித்து காண்பிக்கிறேன் பார்!” என்று இறந்த ஹாசினியின், தந்தையிடம் செயற்பாட்டாளர் சபிசவால் விடுத்திருக்கிறார். இதிலிருந்தே, வழக்கில் என்ன நடந்திருக்கும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எப்படி ஜாமீன் கிடைத்திருக்கும் என்று தெரிகிறது. உண்மையில் சொல்லப்போனால் சுவாதி கொலையிலிருந்து தமிழகத்துக்குப் பிரச்னைகள் அடுக்கடுக்காக ஆரம்பித்தன. தற்போது அனிதா வரை. ஆனால் ஒன்றில் கூட நமக்கான தீர்வு கிடைக்காமல்தான் கடந்து வந்திருக்கிறோம். குற்றம் செய்தவர்களைப் பின் தொடராமல் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பையே டி.ஆர்.பிக்காக மீடியாக்களும் சுற்றிக் கொண்டிருந்ததுதான் தவறு. போலீஸ் தரப்பு ஹாசினி விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்கள், அவர்களையும் இதில் தவறென்று காரணம் காட்ட முடியாது. ஆனால், தீர்ப்பு சொல்லும் நீதிபதியை இந்த விவகாரத்தில் கேள்வி கேட்கமுடியாததுதான் சிக்கல். ஆனால் போராடி நிச்சயம் நீதி கேட்போம்” என்றார்.

இதுதொடர்பாகப் பேசிய, அம்பத்தூர் சரகத் துணை கமிஷனர் சர்வேஷ் ராஜ், “குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் நீதிமன்றம் குண்டர் சட்டத்திலிருந்து விலக்கு கொடுக்க எப்படி முடிவு செய்தது என்பது பற்றி காவல்துறை எதுவும் விமர்சிக்க முடியாது. நீதிமன்றத்தின் முடிவுகள் காவல்துறையின் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது. தற்போது ஜஸ்வந்த் ஜாமீனில் உள்ளார். ஆனால் வழக்கு தொடர்பான அடுத்த வாதம்  விரைவில் உயர்நீதிமன்றத்தில் வரவுள்ளது. நீதிபதிகளிடம்தான் இதற்கான தீர்வு இருக்கிறது” என்று கூறி முடித்தார்.

தவறுகளுக்குத் தீர்வு நியாயம் கிடைப்பது மட்டும்தான். ஆனால், நியாயத்தின் மீது அதிகாரம் சப்பணமிட்டு அமர்ந்திருப்பதுதான் இவ்வளவு அழுத்தங்களிலும் இருக்கும் சிக்கல். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்