’நீட் தேர்வு எழுதத் தயார்’- சொல்கிறார் தமிழிசை

இன்று நீட் தேர்வு வைத்தாலும், அதை எழுதத் தயாராக இருப்பதாக, பா.ஜ.க-வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 


நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வுக்கு, தமிழகம் முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்குப் பின்னர் அரசியல் கட்சியினர், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் அமைதியான வழியில் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். குறிப்பாக, தி.மு.க தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, பல்வேறு இடங்களில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. தி.மு.க-வின் போராட்டத்துக்குப் பதிலடிகொடுக்கும் விதமாக, தமிழக பா.ஜ.க-வினர் நீட் தேர்வுக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, தமிழகம் முழுவதும் பா.ஜ.க சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த தாம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க-வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ’இன்று வைத்தாலும் நீட் தேர்வை எழுதத் தயாராக இருக்கிறேன். எந்தத் தொய்வும் இல்லாமல் படித்துத் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் நானும் ஒருவர். நீட் தேர்வு எழுதித் தேர்ச்சிபெறும் தெம்பும், திராணியும் எனக்கு இருக்கிறது. தி.மு.க. நடத்தும் அனைத்துப் போராட்டங்களுக்கும் பதிலடி கொடுக்கத் தயார். தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவதை இளைஞர்கள் எதிர்க்க மாட்டார்கள்'' என்று பேசினார். பா.ஜ.க சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. மதுரை பழங்காநத்தத்தில் பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமைதாங்கினார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!