வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (15/09/2017)

கடைசி தொடர்பு:18:00 (15/09/2017)

சொத்துக்காக தம்பியைக் கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை!

திருப்பூர் மாவட்டம் பெரியபுத்தூர் பகுதியில் வசித்துவந்தவர் மதன்குமார். இவருக்கும் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றிவரும், அவரது சகோதரர் மனோகரனுக்கும் சில வருடங்களுக்கு முன் சொத்துப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சொத்துப் பிரச்னை தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் அதிகரிக்க, தம்பி மதன்குமாரை கட்டையால் தாக்கியுள்ளார் மனோகரன். அதில் படுகாயமடைந்த மதன்குமாரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கூட்டிச் சென்றுள்ளார் மனோகரன். பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு கோவை அரசு மருத்துவமனைக்கு மதன்குமாரை அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். பின்னர் உறவினர்களிடையே மதன்குமார் விபத்தில் இறந்துவிட்டதாக ஏமாற்றி அவரை அடக்கமும் செய்தார் மனோகரன். ஆனால், மதன்குமாரின் மரணத்தில் சந்தேகமடைந்த குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

பின்னர் புதைக்கப்பட்ட இரு தினங்களுக்குப் பிறகு மதன்குமாரின் உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டபோது, மதன்குமார் கொலை செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக்கொண்ட மனோகரனின் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைதுசெய்தது காவல்துறை.

திருப்பூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. தம்பி மதன்குமாரை தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட அண்ணன் மனோகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.