வெளியிடப்பட்ட நேரம்: 17:22 (15/09/2017)

கடைசி தொடர்பு:18:17 (15/09/2017)

"மாநில மொழிக்கு முக்கியத்துவம்!" - மோடியைப் பின்பற்றும் ராம்நாத் கோவிந்த்

மோடி வழியில் ராம்நாத் கோவிந்த்

டெல்லியில் கல்லூரி மாணவர்களிடையே அண்மையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 'தமிழ் தினம்' கொண்டாடப்பட வேண்டும் என்றார். இதேபோன்று பல்வேறு மாநில மொழிகளின் சார்பில், அப்பகுதி மக்களின் பாரம்பர்ய உடையணிந்து, அவர்களின் கலாசாரத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

தமிழகத்தைக் குறிவைக்கும் பி.ஜே.பி-யின் யுக்திகளில் ஒரு அங்கமாகவே பிரதமரின் இந்த அறிவிப்பை பார்த்தபோதிலும், இதர மாநில மொழிகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் அவரின் கருத்து வரவேற்கப்பட வேண்டியதே.

அண்மைக்காலமாக இந்தி மொழி திணிப்புக்கு எதிராக கர்நாடகத்திலும், தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில், பிரதமர் மோடியின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே அமைந்தது.

இந்நிலையில், புதுடெல்லியில் உள்துறை அமைச்சகம் சார்பில் நடைபெற்ற 'இந்தி திவஸ்' நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்தி மொழி பேசுபவர்கள், பிற மொழிகளுக்கு அதிக மரியாதை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அப்போதுதான் இந்தியை நாடு முழுவதும் பிரபலம் அடையச் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். விழாவில், இந்தி மொழிக்கு சிறப்பான பங்காற்றியவர்களுக்கு ராஜ்பாஷா விருதுகளையும் குடியரசுத் தலைவர் வழங்கி கௌரவித்தார். 

ராம்நாத் கோவிந்த்

"இந்தியாவில் பேசப்படும் பிற பிராந்திய மொழிகளுக்கு அதிக மரியாதையும், உரிய இடமும் கொடுக்க வேண்டும். இந்தியாவின் அலுவலக மொழியாக இந்தி அங்கீகரிக்கப்பட்டு பல ஆண்டுகளான பின்னரும், நாட்டின் சில பகுதிகளில் இந்திக்குத் தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வருகிறது. தங்கள் மீது இந்தி திணிக்கப்படுவதாக சில மாநில மக்கள் நினைக்கின்றனர். அவர்கள் மொழிக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பிற மொழிகளைப் பேசும் மக்களுக்கும், பிராந்திய மொழிகளுக்கும் உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. தமிழர்களுக்கு இந்தி மொழி பேசும் மக்கள் 'வணக்கம்' கூறி மரியாதை செலுத்த வேண்டும். சீக்கியர்களுக்கு பஞ்சாபி மொழியிலும், இஸ்லாமியர்களுக்கு உருது மொழியிலும், தெலுங்கு பேசும் மக்களுக்கு அவர்கள் மொழியிலும் மரியாதை செலுத்த வேண்டும். பிறமொழித் தழுவல்கள் மூலமும், பிற மாநில கலாசாரத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமும் நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படும். அவர்கள் மொழியில் நாம் பேசுவதால், அவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்" என்று பேசினார் ராம்நாத் கோவிந்த்.

இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோரும் இந்தி மொழியிலேயே உரையாற்றினர். அவர்களும் பிறமொழிச் சொற்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பிரதமர் மோடியின் 'தமிழ் தின' கொண்டாட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அதே பாணியில் குடியரசுத் தலைவரும் தமிழில் 'வணக்கம்' தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருப்பதன் மூலம் இந்தி மொழியை திணிக்கப் போவதில்லை என்பதை சூசகமாக உணர்த்த முயற்சித்துள்ளனர். 'பன்முக கலாசாரம், பல மொழிகளைப் பேசும் நாடு இந்தியா' என்பது காலங்காலமாக நீடித்துவருவதுதான். அதில், எந்த மாற்றமும் ஏற்பட்டு விடப்போவதில்லை.

எனினும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் இந்தி மொழியில் எழுத்துகள் எழுதப்பட்டதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு, பெங்களூருவில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகளுக்கு கர்நாடக மக்கள் எதிர்ப்பு என தொடர்ந்து, இந்தி மொழிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே, மத்திய அரசும், பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற உயர் பதவி வகிப்பவர்களும், மாநில மொழிகளுக்கு உரிய அங்கீகாரமும், மரியாதையும் அளிக்கப்படும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.

நாடு முழுவதும் 'ஒரே வரி விதிப்பு முறை' என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ள போதிலும், 'சிஜிஎஸ்டி' என்றும். 'எஸ்ஜிஎஸ்டி' (மாநில அரசின் வரி) தனித்தனியாக பில்களில் இடம்பெறுவது போன்று, மாநில மொழிகளுக்கான மரியாதையும், அங்கீகாரமும் இந்தி மொழிக்கு இணையான அளவில் இருக்க வேண்டும் என்பதே நம் கருத்து!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்