``பணம் குவிக்கும் குகைகள்தான் தனியார் பள்ளிகள்!'' - குரல்கொடுக்கும் எம்.பி

`தனியார் பள்ளிகள், பணம் குவிக்கும் குகைகளாக இருக்கின்றன. இங்கு, அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றுபவர்கள் அதிக அளவில் முதலீடு செய்திருக்கிறார்கள். தனியார் பள்ளிகள் அனைத்தையும் தேசியமயமாக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்திருக்கிறார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி பப்பு யாதவ்.

தனியார் பள்ளிகள்

டெல்லியில் தனியார் பள்ளியில் படித்த ஏழு வயது பையனின் இறப்புகுறித்து தன் எதிர்ப்பைப் பதிவுசெய்த பப்பு யாதவ், ``தனியார் பள்ளிகளில் நடக்கும் மாணவர்களின் கொலைகள் குறித்து, சி.பி.ஐ விரைவாக விசாரிக்க வேண்டும். டெல்லி பள்ளி மாணவன் இறந்த சம்பவத்திலிருந்தாவது பொதுமக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். தனியார் பள்ளி நிறுவனத்தை மாஃபியாக்கள் நிர்வகிப்பதைத் தடுத்து நிறுத்த, உச்ச நீதிமன்றத்தில் வழக்கையும் தொடுத்திருக்கிறேன். இந்த வழக்கின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறேன். 

கல்வித் துறையின் மாற்றங்கள்குறித்து ஆய்வுசெய்த கோத்தாரி மற்றும் முச்குந்த் திரிவேதி குழு வழங்கியுள்ள ஆலோசனைகளை, கல்வித் துறையில் உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.

தனியார் பள்ளிகள் மீது நம்பிக்கையில்லை. இவர்கள் எப்போதும் லாப நோக்கில் மட்டுமே  செயல்படுகிறார்கள். பெரும் அளவிலான பணத்தை எப்படிச் சம்பாதித்தார்கள் என்பதுகுறித்து யாருக்கும் தெரிவதும் இல்லை, தெரிவிப்பதும் இல்லை. அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் கடவுள் பெயரால் ஊரை ஏமாற்றிவருபவர்கள்தான் தனியார் பள்ளியில் பெருமளவில் பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள். தவறான வழிமுறைகளில் இவர்கள் சம்பாதித்தப் பணத்தை முதலீடு செய்யும் குகைகளாகவே தனியார் பள்ளிகள் உள்ளன. எனவே, தனியார் பள்ளிகளை உடனே தேசியமயமாக்க வேண்டும். இதன்மூலம் அங்கு முதலீடு செய்துள்ள பணத்துக்கான பின்னணியை அறிந்துகொள்ள முடியும்.

நடுத்தர நிலையில் இருந்த பலர், அரசியலில் நுழைந்த பிறகு பல பில்லியன்களுக்குச் சொந்தக்காரர்களாக மாறியுள்ளனர். இவர்களின் சொத்து விவரங்கள் குறித்து நீதிமன்றம் விசாரித்து, முறைகேடாகச் சேர்த்துள்ள சொத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும். இதற்கான விசாரணையை விரைவாக எடுத்திட, நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறேன்" என்கிறார்.

சமுதாயத்தின் மீது கோபப்பட்டு அதன் வெளிப்பாடாக பல கோரிக்கைகளை வைக்கும் பப்பு யாதவ் யார் தெரியுமா? 

ராஜேஷ் ரஞ்சன் என்கிற இயற்பெயர்கொண்ட இவர், மதேபுரா தொகுதியிலிருந்து 1991 முதல் 2004-ம் ஆண்டு வரை நான்கு முறை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரின் மீது ஆள் கடத்தல், கொலைக் குற்றம் என ஏராளமான கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இவரது ஊரில் இவரை `நேதாஜி' என்றுதான் அழைக்கிறார்கள். 

தனியார் பள்ளிகள்

ஆரம்பத்தில் சுயேச்சையாகக் களம் இறங்கியவர், சமாஜ்வாதி கட்சி, லோக் ஜனதாதளம், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய  ஜனதா தளம் என ஒரு ரவுண்ட் வந்தவர், தற்போது சொந்தமாக `ஜன் ஆதிகார்' என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரையும், லாலு பிரசாத்தையும் எதிர்த்து அரசியல் செய்துவருகிறார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், ஜனதா தள கட்சியின் தலைவராக இருந்த சரத் யாதவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இவரது மனைவியும் நாடாளுமன்ற உறுப்பினர். பப்பு யாதவ் `2015-ம் ஆண்டு சிறப்பாகச் செயலாற்றிய எம்.பி-க்களில் ஒருவர்' என்ற பெயர் எடுத்திருப்பவர்.

இத்தனை பெருமைகளைக்கொண்ட பப்பு யாதவின் கோரிக்கை நியாயமானதா விநோதமானதா என்பது குறித்து மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!