Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அண்ணாவைப் பற்றிய இந்த 10 சுவாரஸ்யங்கள் தெரியுமா..?

றிஞர் அண்ணா 1963-ம் ஆண்டில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர். நாடாளுமன்றத்தில் 'சென்னை மாகாணம்' என்பதை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்திடக்கோரும் தீர்மானம் ஒன்றை அவர் கொண்டுவந்தார். காங்கிரஸ் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தது. எம்.என். லிங்கம் என்ற உறுப்பினர், "தமிழ்நாடு எனப் பெயர் மாறினால் நீங்கள் என்ன லாபம் அடைந்து விடப்போகிறீர்கள்?" என்று கேட்டார். “நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு ராஜ்யசபா என்றும், மக்களவைக்கு லோக்சபா என்றும், ஜனாதிபதிக்கு ராஷ்ட்ரபதி என்றும் பெயர் மாற்றம் செய்திருக்கிறீர்களே, இதனால் நீங்கள் கண்ட லாபம் என்ன?” என்று அண்ணா கேட்டதும், காங்கிரஸ் உறுப்பினரிடமிருந்து பதிலேதுமில்லை.

அண்ணா

முதல்வராக அண்ணா இருந்தபோது, அவரின் பேச்சு எதிர்க்கட்சியினரும் ரசிக்கும்படியாக இருக்கும். ஒரு சமயம் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுந்து, “மிருகக்காட்சி சாலைக்கு நான் தந்த ஆண் புலிக்குட்டி சரியாக கவனிக்கப்படவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் தந்த பெண் புலிக்குட்டி மட்டும் நன்கு கவனிக்கப்படுகிறது” என்று குற்றம்சாட்டினார். அப்போது குறுக்கிட்ட அண்ணா, "சம்பந்திகள் இருவரும் உட்கார்ந்து, உங்கள் பிரச்னையைப் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்” என்றதும் சபை சிரிப்பால் நிறைந்தது. 
பெரியார் தன் முதுமைப் பருவத்தில் செய்துகொண்ட திருமணத்தினால், அண்ணா அவருடன் முரண்பட்டார். பெரியாரின் செயலால் கருத்துவேறுபாடு கொண்ட திராவிடர் கழகத்தினர், அண்ணா தலைமையில் திரண்டனர். பெரியாரின் செயலால் தொண்டர்கள் கண்ணீர் விடுவதாகவும் அந்தக் கண்ணீர் கடலாகி, அதில் பெரியார் மூழ்குவதாகவும் அட்டைப்படம் வெளியிட்டது திராவிட நாடு. எரிச்சலான பெரியார், அண்ணாவின் ஆதரவாளர்களை 'கண்ணீர்த் துளிகள்' எனக் கிண்டலடித்தார். தி.மு.கழகம் உருவானது. ஆனாலும், பெரியாரை தரம் தாழாமல் விமர்சனம் செய்து கண்ணியம் காத்தார் அண்ணா. 

அண்ணாபெரியாருடன் முரண்பட்டு அரசியல் செய்தாலும், 1967 தேர்தலில் தி.மு.க வென்று தமிழக முதல்வராகப் பதவியேற்ற அண்ணா முதலில் சென்று சந்தித்தது பெரியாரைத்தான். தி.மு.கழகத்தின் வெற்றியை பெரியாருக்குக் காணிக்கையாக்குவதாகச் சொல்லி காலில் விழுந்து ஆசி பெற்றார் அண்ணா. இதன்மூலம் அவர் தன்னை சங்கடத்துக்கு உள்ளாக்கி விட்டதாக பெரியார் நெகிழ்ந்து எழுதினார்.

அண்ணா ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல; தேர்ந்த நடிகரும்கூட. தான் எழுதிய 'சந்திரோதயம்', 'சந்திரமோகன்' போன்ற நாடகங்களில் நடித்தும் இருக்கிறார். புகழ்பெற்ற 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' நாடகத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் எம்.ஜி.ஆர். ஆனால், என்ன காரணத்தினாலோ தொடர்ந்து அதில் நடிக்கமுடியாத சூழல் உருவானது. அப்போது அந்த கதாபாத்திரத்துக்கு, தனது இல்லத்தில் தங்கியிருந்த 'கணேசன்' என்ற நாடக நடிகரை நடிக்க வைத்தார் அண்ணா. அந்த நாடகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஒருநாள் அந்த நாடகத்தைக் காணவந்த பெரியார், கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்து, “நாடகம் நடந்த இரண்டரை மணிநேரமும் நான் கணேசனை காணவில்லை. சிவாஜியையே கண்டேன்” என நெகிழ்ந்தார். அந்த நடிகர்தான், நடிகர் திலகம் 'சிவாஜி' கணேசன்.

பரபரப்பு அரசியல் தலைவர் எனப் பெயர் எடுத்தாலும் அண்ணாவுக்குள் ஒரு படைப்பாளி எப்போதும் உண்டு. பொதுக்கூட்டங்களுக்குச் சென்றுவிட்டு நேரம்கடந்து வீடு திரும்பினாலும், தன் டைரியில் ஓவியம் வரைவது, ஜோக் எழுதுவது என தனக்கு பிடித்தமானவற்றைச் செய்து அந்தநாளின் டென்ஷனைக் குறைத்துக்கொள்வார். போராட்டங்களில் கலந்து சிறை செல்லும்போது அண்ணா தன்னைக் காண வருபவர்களிடம் கேட்கிற விஷயம் ஒன்று புத்தகம். மற்றொன்று வெள்ளைத்தாள். அதில் விருப்பம்போல் படங்களை வரைந்து தள்ளுவார். போர் வீரன், வனம் என அவர் வரைந்த ஓவியங்கள் இன்றும் காணக்கிடைப்பவை. அவர் தன் டைரியில் எழுதிவைத்த ஜோக்குகளில் ஒன்று இது....

ஹோட்டலில் சாப்பிட வந்தவர்: "ஏம்பா.. வடை இவ்வளவு மோசமா இருக்கு...சின்னதாவும் இருக்கே?" 
சர்வர்: "பின்னே, என்னங்க...மோசமாகவும் இருந்து, பெரியதாவும் இருந்தா தின்ன முடியாதுங்களே? அதான்!" 


ண்ணாவுக்கு மூக்குப்பொடி போடும் வழக்கம் உண்டு. அண்ணாவிடம் ரசித்த விஷயம் என்ன என்று எம்.ஜி.ஆரிடம் ஒருமுறை கேட்டபோது, "பொதுக்கூட்டத்தில் மற்றவருக்குத் தெரியாமல் லாகவமாக, அவர் மூக்குப்பொடி போடும் அந்த சில விநாடிகள் பார்க்க ரசனையாக இருக்கும்" என்று பதிலளித்தார். ஆம், அத்தனை ரசனையாக மூக்குப்பொடி போடுவார் அண்ணா. 
இரவு நெடுநேரம்வரை எழுதிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கும் வழக்கம் கொண்டவர் அண்ணா. அதனால், பகல் 10 மணிக்கு மேல்தான் எழுதுவார். காஞ்சிபுரத்தில் அவரைக் காண வருபவர்கள், அவருக்காக வீட்டில் வாசற்படியில்  காத்திருப்பதைப் பார்க்கும் அவரது சித்தி, “கட்சிக்கு உதயசூரியன்னு பேரை வெச்சிட்டு, ஒருநாளும் அது உதிக்கறதைப் பார்க்க மாட்டேங்குறானே" எனக் குறைபட்டுக் கொள்வார் காத்திருப்பவர்களிடம். இதைக்கேட்டு, அந்த இடமே சிரிப்பொலியால் அலறும்..

அண்ணா

1968-ம் ஆண்டில் மருத்துவக்கல்லுாரி மாணவர் ஒருவருக்கும், பஸ் நடத்துநர் ஒருவருக்குமான மோதல் பெரிய பிரச்னையாகி பேருந்து தொழிற்சங்கங்கள் ஸ்ட்ரைக் செய்தன. அண்ணா தலையிட்டும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. மாணவர் சார்பாக, அண்ணா மன்னிப்பு கேட்டும், அவர்கள் மனமிரங்கி வரவில்லை. அந்தப் பேச்சுவார்த்தையின்போது, அண்ணா மயக்கமுற்றார். வாயிலிருந்து ரத்தம் வந்தது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அண்ணாவுக்குப் புற்றுநோய் எனத் தெரியவந்தது. 

லைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கும், அண்ணாவுக்குமான நட்பு ஆச்சர்யமானது. கலைவாணருக்காக அண்ணா எழுதிய கதை “நல்லதம்பி”. கதைப்படி, படத்தில் கலைவாணருக்கு ஒரே ஒரு கதாநாயகிதான். அது பானுமதி. அந்தப் படம் தயாரிப்பிலிருந்தபோது, அண்ணா ஒருமுறை கலைவாணர் இல்லத்துக்குச் சென்றார். அப்போது தன் கணவருடன்தான் நடிக்கமுடியவில்லையே எனக் கலைவாணரின் மனைவி 'மதுரம்' கவலைப்பட்டதை அவரின் செயல்மூலம் தெரிந்துகொண்டார் அண்ணா. அன்றிரவே "நல்லதம்பி" படத்தின் கதையில் மதுரத்துக்கென ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, கலைவாணருக்கு ஜோடியாக்கினார் அண்ணா. 

அண்ணா

தனக்குப் புகழ்கொடுத்த அந்தப் படத்துக்கு சன்மானமாக, அண்ணாவுக்கு ஒரு காரை பரிசளித்தார் கலைவாணர். காஞ்சிக்கு நேரில்வந்து அதைத் தந்ததோடு, பெட்ரோல் தட்டுப்பாடு நிலவிய காலம் என்பதால் குறிப்பிட்ட காலம்வரை அந்த காருக்குத் தேவையான பெட்ரோல் டோக்கன்களையும் கொடுத்தார் கலைவாணர்.

ந்தி எதிர்ப்பு நிலை, திராவிட நாடு கோரிக்கை இவற்றால் அண்ணாவின் மீது கோபத்தில் இருந்தவர் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. அவர், சென்னை வந்தபோது தி.மு.க.-வினர் அவருக்குக் கறுப்புக்கொடி காட்டியதற்காக 'நான்சென்ஸ்' என தி.மு.க. தலைவர்களை கடுமையாக விமர்சித்தார். அதே நேரு, மாநிலங்களவைக்கு அண்ணா தேர்வாகிச் சென்றபோது, அவரது கன்னிப்பேச்சை ஆங்கிலத்தில் கேட்டு அயர்ந்துபோனார். நேரம் கடந்ததை மாநிலங்களவைத் தலைவர் சுட்டிக்காட்டியபோது, உணர்ச்சிவயப்பட்டு குறுக்கிட்ட நேரு ‘அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்; பேசவிடுங்கள்” எனக் கேட்டுக்கொண்ட அதிசயம் நடந்தது. அண்ணாவின் உரை அந்த அளவுக்கு நேருவைக் கட்டிப்போட்டது.

ண்ணாவின் பேச்சுக்கு யாரும் அவ்வளவு எளிதில் மறுத்துப் பேசிவிட முடியாது. வலுவான வாதங்களை வைப்பதில் சமர்த்தர் அவர். ஒருமுறை பெரியாரைக் காண சுதேச கிருபாளினி வந்தார். அந்த வார “ரிவோல்ட்” இதழில் கதர் கட்டுவது மூடநம்பிக்கை எனப் பொருள்படும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார் பெரியார். இதைக் குறிப்பிட்ட கிருபாளினி, "நீங்கள் ஒரு காங்கிரஸ்காரராக இருந்து தெருத் தெருவாக கதரைச் சுமந்து விற்று கட்சியை வளர்த்திருக்கிறீர்கள். ஆனால், இப்போது இப்படி எழுதுவது தவறு!" என்றார். அதற்குப் பதில்கூற முயன்ற பெரியாரின் பேச்சை மறுதலித்து, தொடர்ந்து கிருபாளினி ஆவேசத்துடன் பேசவே, குறுக்கே புகுந்த அண்ணா, " 'விபூதி அணிந்தவன் சிவ பக்தன். நாமம் போட்டவன்தான் வைணவன்!' என்று சொல்லும் நம்பிக்கை போன்றதுதான் கதர் கட்டுபவன்தான் தேசபக்தன் என்பது" என்று ஒரே போடாகப் போட, அமைதியானார் கிருபாளினி.

அண்ணா

திராவிட நாடு கொள்கையை அண்ணா முன்வைத்தபோது பெரும் சர்ச்சையானது. தி.மு.க-வை தடைசெய்ய வசதியாக, மத்திய அரசு பிரிவினைத் தடைச் சட்டம் கொண்டு வரும் அளவுக்குப் போனது. 1962-ம் ஆண்டு சீனப் படையெடுப்பின்போது, உருவான கொந்தளிப்பான அரசியல் சூழலில், திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிடுவதாக அறிவித்தார். திராவிட நாடு ஆதவாளர்கள் மத்தியில் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசுக்குப் பயந்து அண்ணா பின்வாங்கிவிட்டதாக அவர்கள் விமர்சித்தனர். 'வீடு இருந்தால்தான் ஓடு மாற்றலாம். நாடு இருந்தால்தான் கட்சி நடத்தலாம். நாட்டுக்கே ஆபத்து என்று வந்திருக்கிற நிலையில், நாம் பிரிவினை பேசுவது அயலானுக்கு இடம் கொடுத்து விடுவதாகும். நாம் அப்படி நடந்துகொண்டால், வருங்காலத் தலைமுறை நம்மைச் சபிக்கும்' என்று 1962 அக்டோபர் மாதம் வேலூர் சிறையில் இருந்து விடுதலையடைந்ததும், திராவிட நாடு கொள்கையை தான் கைவிட்டதற்கான காரணத்தை தெரிவித்தார் அண்ணா. இதன்மூலம் தான் ஒரு பக்குவப்பட்ட அரசியல் தலைவர் என்பதை நிரூபித்தார் அவர். 

அதேசமயத்தில் ''கழகத்தை அழிக்க சட்டம் கொணர்ந்தனர். சட்டத்தைத் திருத்தி கழகத்தைக் காத்தோம். 'சூட்சுமம்' புரிகிறதா தம்பி?" என்று தி.மு.க. தொண்டர்களுக்கும் தன் நிலைப்பாட்டை புரியவைத்தார் அண்ணா. 

1967-ம் ஆண்டு தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்தது தி.மு.க. பதவியேற்புக்குத் தலைவர்கள் கோட் சூட்டுடன் தயாராகிக் கொண்டிருந்தபோது, தனது  நுங்கம்பாக்கம் வீட்டில் கவலையோடு இருந்தார் அண்ணா. “தவறு நடந்துவிட்டது. இவ்வளவு சீக்கிரம் நாம் பொறுப்புக்கு வந்திருக்கக் கூடாது. இன்னும் சில காலம், நாம் பொறுத்திருந்திருக்க வேண்டும். நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரஸையே தூர எறிந்துவிட்டு, நம்மைத் தேர்ந்தெடுத்துள்ளனர் மக்கள். நம் மீது பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது. மிகக் கவனமாக இருக்க வேண்டும்” என தனக்கு நெருங்கிய நண்பர்களிடம் சொன்னார். 

அண்ணாரசியல் கட்சிகள் அநாகரிகமாக ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் நிலைதான் இன்றைய அரசியல். ஆனால், 1967 தேர்தலில் காமராஜர் தோற்ற தகவல் வந்தபோது, எதிர்முகாமில் இருந்த அண்ணா கலக்கமுற்றார். "காமராஜர் போன்ற அனுபவசாலிகள் தோற்றது நமக்கும் தோல்வி போன்றதே. சட்டமன்றத்தில் அவர் இருந்திருந்தால், நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட அது உதவியிருக்கும்” என மனம் திறந்து சொன்னார் அண்ணா. "வெற்றியைக் கொண்டாடுகிறேன் பேர்வழி" என தோற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியை சங்கடப்படுத்தக் கூடாது. கொஞ்சநாள் கொண்டாட்டங்களைத் தள்ளிப்போடுங்கள்" என கண்ணியத்தோடு தன் தம்பிகளுக்கு கட்டளையிட்டார். 1957 தேர்தலில் அண்ணாவின் வீட்டுமுன் அவரை அருவருப்புடன் விமர்சித்து எழுதி வைக்கப்பட்டது. "இரவில் படிக்கச் சிரமமாக இருக்கும். ஒரு லாந்தர் விளக்கை வையுங்கள். இதை எழுதியவரின் தகுதியை ஊர் தெரிந்து கொள்ளட்டும்" என்றார் தம்பிகளிடம். 

வாரிசு அரசியல் போன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான விஷயம் இன்று தமிழகம் மட்டுமன்றி இந்திய அளவிலும் சர்வ சாதாரணமாகி விட்டது. ஆனால், அண்ணா தன் வாரிசுகள் எவரையும் அரசியலில் ஈடுபடுத்தியதில்லை. கட்சி விவகாரங்களில் தலையிட வைத்ததுமில்லை. அண்ணாவின் மறைவுக்குப்பின், கருணாநிதி ஒருமுறையும், அ.தி.மு.க உருவாகி அக்கட்சி சந்தித்த முதல் தேர்தலான திண்டுக்கல் இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்த அண்ணாவின் வளர்ப்புப் புதல்வர் பரிமளத்தை அணுகினார் எம்.ஜி.ஆர். அண்ணாவைப்போன்றே அவரது துணைவியாரும் தன் மகனை அரசியலில் ஈடுபடுத்துவதில்லை என்பதில் உறுதியாக நின்றார். 

ண்ணா வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை 1980-ம் ஆண்டு நினைவு இல்லமாக்கியது தமிழக அரசு. திறப்பு விழாவில் கலந்துகொண்ட அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி, "இந்த எளிய இல்லத்தில் பிறந்த ஒருவர், பின்னாளில் ஒரு மாநிலத்துக்கு முதல்வரானது என்பது ஜனநாயகம் இங்கு தழைப்பதையேக் காட்டுகிறது. நான் அண்ணா அளவுக்குப் படித்தவனல்ல என்றாலும், சாமான்யனாகிய நானும் குடியரசுத் தலைவராக ஆனதற்கு நமது ஜனநாயக அமைப்பே காரணம்" என்றார். அநேகமாக மாநில முதல்வராக இருந்த ஒருவரின் நினைவு இல்லத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தது என்பது அதுவே முதல்முறை.

அண்ணா

ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி பேசுகையில், "திராவிட இயக்க அரசியல்வாதியாக அண்ணாவைப் பார்த்தாலும், அவர் ஒரு காந்தியவாதியாகத்தான் இருந்தார். எதையும் யாருக்கும் புரியும் வகையில் சொல்வதில் அவர் கெட்டிக்காரர். குடும்பக் கட்டுப்பாட்டை பற்றி பேசும்போது பாமரர்களுக்குப் புரியும்படி “பெருமாளுக்கு இரண்டு பிள்ளைகள்” எனக் கூறினார். தீவிர நாத்திகவாதியான அவர், மக்களுக்குப் புரிய வேண்டுமென்பதற்காக தன் கொள்கைளைத் தள்ளிவைத்து, கடவுளைத் துணைக்கு அழைக்கவும் தயங்கவில்லை. அவர் ஒரு ஜென்டில்மேன்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close