Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துப்பாக்கிகளுக்குள் தூரிகை! - ஓவியங்களால் ஈர்க்கும் கோயம்புத்தூர் பெண் காவலர்கள்!

பெண் காவலர்கள்

புரியும்படியான கையெழுத்துடன் மருத்துவர், சில்லறையைச் சரியாகக் கொடுக்கும் நடத்துநர்... என ஒரு சிலர் நம்மை ஆச்சர்யப்படுத்துவாங்களோ அப்படி ஓர் ஆச்சர்யத்தைக் கொடுக்கறாங்க கோயம்புத்தூர் பெண் காவலர்கள். 

அட ஆமாங்க! போலீஸ் எனச் சொன்னாலே விறைப்பும் முறைப்பும்தான் நம்ம கண்களுக்கு முன்னாடி வந்துபோகும். அது ஆண் போலீஸாக இருந்தாலும் சரி, பெண் போலீஸாக இருந்தாலும் சரி. ஆனால், சிவப்புக் கட்டடமும் சிடுசிடுப்பு முகங்களும் என்ற பிம்பத்தை, தூரிகை விரட்டிட்டு இருக்காங்க, கோவையின் போலீஸ் ஓவியர்கள். 

கோயம்புத்தூர் கமிஷனர் அலுவகத்துக்குச் சென்றோம். திரும்பி நம்மளை ஒரு பார்வைப் பார்த்துட்டு, கடல் வாழ் உயிரியல் ஓவியத்தை ஆர்வத்துடன் வரைஞ்சுட்டிருந்தாங்க ஹெட் கான்ஸ்டபிள் கெளரி மற்றும் சரண்யா. 

"சுவரின் கடைசியில் வரைஞ்சு இருக்கிறது என்ன அது?" என்று கேட்டதும், மெல்ல சிரிச்சுக்கிட்டே, ''அது டால்பின்'' என்றார்கள். 

"எனக்குச் சின்ன வயசிலிருந்தே கோலம் போடறதுன்னா ரொம்பப் பிடிக்கும். ஸ்கூலுக்குப் போகும்போது, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்னு, அவங்க போட்டிருக்கும் கோலத்தைக் கவனிப்பேன். புதுசா ஒரு கோலத்தைப் பார்த்தால் போதும். எத்தனை புள்ளி எப்படி போட்டிருக்காங்கனு மனசுக்குள்ளே குறிச்சுப்பேன். ஸ்கூலுக்குப் போனதுமே நோட்புக்ல அந்த கோலத்தைப் போட்டுப் பார்ப்பேன். சரியா போட்டு பிராக்டிஸ் ஆனதும், அது எங்க வீட்டு வாசல்ல இருக்கும். படிச்சு முடிச்சு இந்த டுயூட்டில் சேர்ந்த பிறகும் எனக்குள்ளே சிறைப்பட்டிருக்கும் கலை ஆர்வம் அடிக்கடி ஜாமீன் கேட்கும். எந்த நிகழ்ச்சின்னாலும் கோலம் போட முதல் ஆளா நிப்பேன். அப்படித்தான் ஓவியம் வரையும் ஆர்வமும் வந்துச்சு" என்று அவர் வரைந்த ஓவியம் போலவே அழகாகப் பேசுகிறார் கெளரி. 

women police

தொடரும் ஹெட் கான்ஸ்டபிள் சரண்யா, "எங்க காவலர் குடியிருப்பில் குழந்தைகளுக்கான கிரச் இருக்கு. டியூட்டி போற ஆபீசர்ஸ் அவங்க குழந்தைகளைப் பத்தி கவலைப்படக்கூடாதுனு, கமிஷனர் அமல்ராஜ் சாரின் முயற்சியில் உருவாக்கப்பட்ட கிரச் அது. தொடக்க விழாவுக்கு முன்னாடி அந்த கிரச்சைப் பார்க்கவந்த இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சார், 'இது குழந்தைகளுக்கான இடம். பார்த்ததும் மனசை சந்தோஷப்படுத்தற மாதிரி இருக்கணும். ஏதாச்சும் கலர்ஃபுல்லா பண்ணுங்க. சுவர்களில் ஓவியம் வரையுங்க'னு சொன்னார். நாங்களும் ஆர்வமா களத்தில் இறங்கி வரைஞ்சோம். அதைப் பார்த்த கமிஷனர் சார், 'சமூகக்கூட சுவர்களையும் கமிஷனர் ஆபீஸ் சுவர்களிலும் ஓவியம் வரைய ஊக்கப்படுத்தினார். வரையச் சொன்னதோடு நிறுத்தாமல், தினமும் வந்து பார்த்து, நாங்க வரையும் ஓவியங்களில் நல்ல விஷயங்கள், திருத்தங்கள் பற்றியும் சொன்னாங்க. அந்த ஆர்வம் எங்களை இன்னும் உற்சாகப்படுத்தி வரையவெச்சிருக்கு" என்கிறார். 

"ஓவியம் வரையறப்ப மனசு ரொம்ப லைட்டா இருக்கும். சில பண்டிகை நாள்களில்கூட எங்களால் குடும்பத்துடன் இருக்க முடியாது. அது மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கும். அதனால்தான், இந்த ஓவியங்களில் குடும்பத்தோடு ஒண்ணா சந்தோஷமா இருக்கற மாதிரி வரஞ்சிருக்கோம்" என்று சொல்லிவிட்டு ஓவியத்தைப் புன்னகையுடன் பார்க்கிறார் கெளரி. 

woman police

"இந்த மாதிரி பத்து இடங்களுக்கும் மேலே ஓவியம் வரஞ்சிருக்கோம். ஓவியத்தைப் பார்த்த யாராவது, ஒரு சின்ன தவறைச் சுட்டிக்காட்டினாலும் உடனே போய் அதை சரிசெஞ்சுடுவோம். கொடுக்கப்பட்ட வேலை எதுவா இருந்தாலும், காம்பிரமைஸ் பண்ணிக்காமல் திருத்தமா முடிக்கணும்னு நினைக்கிறோம்'' என்கிறார் சரண்யா. 

''இப்படி கலர் கலரா வரைஞ்சு இருக்கீங்களே, உங்களுக்குப் பிடிச்ச கலர் எது?'' என்று கேட்டால், கொஞ்சமும் தயங்காமல் சொல்கிறார்கள், 'இதிலென்ன சந்தேகம். எங்களுக்குப் பிடிச்ச கலர், காக்கி'' 

ஓவியம் ஓர் இடத்தை மக்களுக்கு நெருக்கமான இடமாக மாற்றுகிறது. அங்கிருப்பவர்களை அன்பான மனிதர்களாக அடையாளப்படுத்துகிறது. இந்த ஓவியப் புரட்சி தொடர்ந்தால், துப்பாக்கிகள் தூரிகைகளாக மாறும்!

பெண்களின் திறமைகளுக்கான வெளி இன்னும் விரியட்டும் பாராட்டுகள் குவியட்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement