'நம் மொழியை அழிக்க வரும் நவோதயா பள்ளிக்கு எதிராகப் போராடுவேன்..!' - மாணவி வளர்மதி உறுதி

நீட் தேர்வுக்கு எதிராகவும் நவோதயா பள்ளிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவேன் என்று குண்டர் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மாணவி வளர்மதி தெரிவித்துள்ளார். 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சேலம் மகளிர் கலைக்கல்லூரியில் துண்டு பிரசுரம் கொடுத்தற்காக குண்டர் சட்டம் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கும் பல்கலைக்கழக இதழியல் மாணவி வளர்மதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பேசிய வளர்மதி, ''நான் நக்சலைட்டோ, மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவரோ கிடையாது. நான் சமூக சமத்துவத்துக்காகவும், இயற்கை வளம் பாதுகாப்பதற்காகவும் போராடக் கூடியவள். என்மீது தமிழகக் காவல்துறை பொய்யாக குண்டர் சட்டம் போட்டு சிறையில் அடைத்தார்கள்.

ஆனால், உயர்நீதிமன்றம் என்னை விடுதலை செய்துள்ளது. நான் எங்கள் பகுதியில் இயற்கைப் பாதுகாப்புக் குழு மூலம் இயற்கை வளங்களைக் காப்பதற்காக மரக்கன்றுகள் நட்டு வருவதோடு விழிப்பு உணர்வும் ஏற்படுத்தி வருகிறேன். அதேவேளையில் இயற்கையை அழிப்பவர்களுக்கு எதிராகப் போராட்டமும் செய்வேன். நான் இயற்கையைக் காக்க தொடர்ந்து போராடி வருவதால் காவல்துறையினர் என் மீது பல பொய்யான வழக்குகள் போடுகிறார்கள். அதுபற்றி எனக்குக் கவலை இல்லை. 

நான் குண்டர் சட்டத்திலிருந்து விடுதலையாகி வந்த பிறகு தொடர்ந்து காவல்துறையினர் என்னையும் என் குடும்பத்தினரையும் கண்காணித்து வருகிறார்கள். என் செல்போனை ஒட்டுக் கேட்கிறார்கள். இதனால் நான் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறேன். இது தனி மனித உரிமையைப் பறிக்கும் செயலாக இருக்கிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவுள்ளேன். தொடந்து மனித குலத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம், ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்விக் கனவைப் பறிக்கும் நீட் தேர்வு, நம்முடைய தாய்மொழி திறனையும், நம் வரலாற்றையும் அழிக்க வரும் நவோதயா பள்ளிகளுக்கு எதிராகவும் என் போராட்டம் தொடரும். 

இது ஏதோ விளம்பரத்துக்குச் செய்வதாக நினைக்க வேண்டாம். மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு மக்களின் நலன் சார்ந்தே போராடுவேன். நீட் தேர்வு ரத்து செய்யவும், நவோதயா பள்ளித் திறப்பதற்கு எதிராகவும் விரைவில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்'' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!