வெளியிடப்பட்ட நேரம்: 00:45 (16/09/2017)

கடைசி தொடர்பு:10:39 (16/09/2017)

ஊருக்குள் புகுந்த அரிய வகை மரநாய்.. - தெருநாய்கள் கடித்துக் குதறியதால் பலி!

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் ஊருக்குள் நுழைந்த அரியவகை மரநாய், உள்ளூரில் உள்ள தெருநாய்களால் கடித்துக் குதறப்பட்டதால் உயிரிழந்தது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் களக்காடு பகுதியில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதில், புலி, சிறுத்தை, யானை, கரடி, கடமான், மரநாய், சிங்கவால் குரங்கு என அரியவகை விலங்குகள் அதிகமாக உள்ளன. இந்த விலங்குகள் அவ்வப்போது மலையடிவாரத்தில் உள்ள மக்களின் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவது வழக்கம். அவற்றை வனத்துறையினரும் பொதுமக்களும் இணைந்து மீண்டும் காட்டுக்குள் விரட்டி விடுவார்கள். 

மரநாய்இந்த நிலையில், களக்காடு ஊருக்குள் இன்று அரிய வகை உயிரினமான மரநாய் ஒன்று உயிர் இழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் உடலில் காயங்கள் இருந்தன. இது பற்றிய தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து அந்த மரநாயைக் கைப்பற்றினர். அந்த மரநாய் 2 வயது உடையதாக இருந்ததையும் தெருநாய்கள் கடித்ததால் உயிர் இழந்ததையும் கண்டனர். 

இது பற்றி வனத்துறையினர் கூறுகையில், ‘’அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே வசிக்கக் கூடிய மரநாய், காடுகளில் விளையும் பலா உள்ளிட்ட பழங்களை உண்டு வாழக்கூடியது. இறைதேடி வந்தபோது வழி தவறி ஊருக்குள் வந்திருக்கக் கூடும். அல்லது மலையடிவாரப் பகுதியில் விளையும் வாழை, தென்னை உள்ளிட்டவற்றை உண்பதற்காக வந்த நிலையில் வழி தவறி ஊருக்குள் வந்திருக்கும். இங்கு வந்த இடத்தில் தெருநாய்களிடம் சிக்கி பலியாகி இருக்கலாம்’’ எனத் தெரிவித்தனர்.