வெளியிடப்பட்ட நேரம்: 07:25 (16/09/2017)

கடைசி தொடர்பு:07:59 (16/09/2017)

காவிரி நீர் உரிமைக்காகத் தன்னுயிர் தந்த விக்னேஷின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று !

15.12.1995ல் ஈழத்தமிழர்களுக்காக திருச்சியில் தன்னை எரித்து, ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப், 2009-ம் ஆண்டு, ஈழத்தமிழர் படுகொலையை எதிர்த்து சாஸ்திரி பவன் முன்பாக தீக்குளித்த முத்துக்குமார், 2011-ம் ஆண்டு, காஞ்சிபுரத்தில் ஏழு தமிழர் விடுதலைக்காக நடந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் தீக்குளித்து இறந்த செங்கொடி, அதன் பின்னர், கடந்த நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற காவிரி நீர் உரிமை மீட்புப் பேரணியில் தன்னை எரித்துக்கொண்ட விக்னேஷ், இந்த மாதம் செப் 1 - ல் கல்வி உரிமை மறுக்கப்பட்டதால் தற்கொலைசெய்துகொண்ட அனிதா என தமிழர்கள் தங்களின் உரிமைக்காக உயிர்நீப்பது தொடர்ந்துகொண்டேவருகிறது.  

காவிரி நீர் உரிமைக்காக உயிர்த்தியாகம் செய்த விக்னேஷ்

தன்மீது நெருப்பை வைத்துப் பற்றி எரியும்போதுகூட 'தமிழ் வாழ்க' என்று முழங்கிய இளைஞன்தான் விக்னேஷ். நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர். தீராத மொழிப்பற்றும், இனப்பற்றும் மிக்க இளைஞர். காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா, அப்பாவித் தமிழர்கள் அங்கே சிலரால் தாக்கப்படுவதையும் கண்டு மிகுந்த மனவேதனைக்கு உள்ளானவர். தன் கட்சி சார்பாக நடந்த பேரணியில், தன்மீது தீ வைத்துத் தன் உயிரை மாய்த்துக்கொண்டவர்.

தன் கோரிக்கைகளை எல்லாம் ஒரு பேப்பரில் எழுதி எடுத்து வந்திருந்த விக்னேஷ், தீ வைத்துக்கொள்ளும் நேரத்தில் அதை வீசி எறிந்துவிட்டே தன் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். 

மாணவர்களே கோபம்கொள்ளுங்கள். தம் உரிமைகளை மீட்கப் போராடுங்கள்! என்ற தலைப்புடன்,

காவிரியில் நீரைப் பெற்று விவசாயத்தை மீட்டெடுக்கப் போராடுங்கள்.

விவாசய நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிப்பதை நிறுத்துங்கள்.

எம் மண்ணை மலடாக்கும் மன்னையில் இயங்கும் சாராய ஆலையை மூடப் போராடுங்கள்.

இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடுங்கள்.

அந்நிய முதலீடுகளை எதிர்த்து, தமிழ்த் தேசிய முதலாளிகளை உருவாக்கப் போராடுங்கள்.

நான் வைத்த கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடும் தமிழர்களுக்கு, இனி வாக்கு செலுத்துங்கள்

விக்னேஷின் கோரிக்கைகள்

மேற்கண்ட கோரிக்கைகளைத் தமிழக மக்களுக்கு வைத்துவிட்டே தன் இன்னுர் நீத்திருக்கிறார் விக்னேஷ்.

தன் மகன் இதனால்தான் இறந்துபோனான் என்று நினைக்காமல், தன் மகனின் லட்சியங்களை நிறைவேற்ற தற்போது களத்தில் நிற்கிறார்கள் விக்னேஷின் பெற்றோர்.

தமிழர்களின் உரிமைகளை முன்னிறுத்திப் பல தமிழர்கள்  உயிர்த்தியாகம்செய்து ஆண்டுகள் பல தாண்டினாலும், அவர்கள் வைத்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேறியபாடில்லை. தற்கொலைகள் ஒருபோதும் தீர்வைத் தரப்போவதுமில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க