கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி டி.ராஜாவின் ஓராண்டு போக்குவரத்துச் செலவு ரூ.65 லட்சம்!

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா எம்.பி, ஓராண்டு போக்குவரத்துக்குச் செலவுக்கு ரூ.65 லட்சம் செலவிட்டுள்ளார். 

இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா

நாடாளுமன்ற உறுப்பினர்களின் 2016-17-ம் ஆண்டுக்கான போக்குவரத்துச் செலவுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் கேட்கப்பட்டிருந்தது. ஒரே ஆண்டில், இரு அவையைச் சேர்ந்த எம்.பி-க்களும் மொத்தமாக ரூ.130 கோடியை போக்குவரத்துக்காகச் செலவு செய்துள்ளனர். ராஜ்யசபா உறுப்பினர்களின் போக்குவரத்துச் செலவு, ரூ.35 கோடி. மக்களவை உறுப்பினர்களின் போக்குவரத்துச் செலவு, ரூ.95 கோடி.

பட்டியலில், முதல் இரு இடங்களில் கம்யூனிஸ்ட்  கட்சி உறுப்பினர்கள்தான் உள்ளனர் என்பதுதான் இதில் சுவாரஸ்யம். மேற்கு வங்க மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரிதபர்தா பானர்ஜி, பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரின் ஓராண்டு போக்குவரத்துச் செலவு மட்டும் ரூ. 69,24,335. அதாவது, மாதம் ரூ. 6 லட்சம். ரிதபர்தா பானார்ஜி, மோன்ட் பிளான்க் வாட்ச், ஆப்பிள் ஐ போன் வாங்கியிருப்பதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பதிவிட்டார். இதையடுத்து, 'கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்போலவே இவர் செயல்படவில்லை' என மார்க்ஸிஸ்ட் கட்சி, மூன்று மாதங்களுக்கு பானார்ஜியை சஸ்பென்ட் செய்துள்ளது. 

பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா. தமிழகத்தைச் சேர்ந்த இவர், போக்குவரத்துக்காக ரூ.65,04,880 செலவிட்டுள்ளார். இதில், சென்னை - டெல்லி விமானப் பயணத்துக்காக நான்கில் ஒரு பகுதி  செலவிடப்பட்டுள்ளது.  இதுகுறித்து டி.ராஜா கூறுகையில், ''நான், மூன்று முக்கிய கமிட்டிகளில் உறுப்பினராக இருக்கிறேன். அதனால், அதிக அளவில் பயணம் மேற்கொள்ளவேண்டியுள்ளது. தனியார் விமானங்களில் பயணிப்பதில்லை. பெரும்பாலும் ஏர் இந்தியாவில்தான் பயணம் மேற்கொள்கிறேன். மக்கள் சேவைக்காகவே பயணிக்கிறேன். எங்கள் செலவுத் தொகையை பில்லுடன் இணைத்தே அனுப்பிப் பெறுகிறோம். இதை வைத்து லாபம் அடையவில்லை'' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!