வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (16/09/2017)

கடைசி தொடர்பு:17:14 (12/07/2018)

சர்வதேச ஓசோன் தின விழிப்புஉணர்வு பிரசாரம் மேற்கொண்ட மாணவர்கள்

சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில், புவி வெப்பமடைதலுக்கு எதிரான விழிப்புஉணர்வு பிரசாரம் நடைபெற்றது.

ஓசோன் படலம், நமது பூமியைப் போர்த்தியிருக்கும் ஒரு மெல்லிய வாயுப் படலமாகும். இது, சூரியன் மற்றும் விண்வெளியிலிருந்து பூமியைத் தாக்கி கேடு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்கள் போன்ற பல வகை கதிர்வீச்சுகளிலிருந்து பூமியைக் காக்கிறது. இந்த ஓசோன் படலம் சேதமடைவதால், உயிரியல் தொடர்பான ஏராளமான குறைபாடுகள், தோல் புற்றுநோய், கடலின் ஒளிப்பாலத்தில் ப்ளாங்க்டனின் குறைபாடு, தாவரங்களின் அழிவு போன்றவை ஏற்படும். அறிவியல் வளர்ச்சி, நாம் பலவகையான நவீன பொருள்களை அளவின்றிப் பயன்படுத்தும் போக்கை உருவாக்கியுள்ளது. நாம் அதிகம் பயன்படுத்தும் குளிர் சாதனங்களான ஃப்ரிட்ஜ் மற்றும் ஏசி இயந்திரங்களில் நிரப்பப்படும் வாயுக்களே பெருமளவு காரணம். இதுபோன்ற வாயுக்களின் பயன்பாட்டைக் குறைக்கவும், புதிய பொருள்களைக் கண்டுபிடித்தால், அதை ஊக்கப்படுத்துவதை வலியுறுத்தி, கடந்த 1987-ம் ஆண்டு உலகின் பெரும்பாலான நாடுகள் இணைந்து கையொப்பமிட்ட மான்ட்ரீல் சாசனம், செப்டம்பர் 16 -ம் நாள் வெளியிடப்பட்டது. இந்நாளை 1994 ல் சர்வதேச ஓசோன் தினமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அறிவித்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பூமி வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்குறித்து பரவலான விழிப்பு உணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

 

ஓசோன் தின விழிப்புணர்வு பிரச்சாரம்

இன்று ராமேஸ்வரத்தில் நடைபெற்ற "உலக வெப்பமயமாதலைத் தடுப்போம்" என்ற பிரசார இயக்கத்தை ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் முத்துமாணிக்கம் தொடங்கிவைத்தார். நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்ற மாணவர்கள், பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புஉணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கிப் பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ஜெயகாந்தன், என்.சி.சி அதிகாரி பழனிசாமி, ஜூனியர் ரெட்கிராஸ் ஆசிரியர் தினகரன், சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாசிரியர் ஜேம்ஸ் ஆனந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.