ஆசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற நெல்லை மாணவன்!

நீச்சல் வீரருக்கு வரவேற்பு

ஆசிய நீச்சல் போட்டியில், நெல்லையைச் சேர்ந்த பள்ளி மாணவன் தங்கப்பதக்கம் வென்று, இன்று சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு, ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நெல்லையில் உள்ள விவேகானந்தா வித்யாஸ்ரம் பள்ளியில் 9-ம் வகுப்புப் படிக்கும் மாணவர், லியோனார்ட். நீச்சல் போட்டியில் ஆர்வம் கொண்ட இவர், மாவட்ட, மாநில, தேசியப் போட்டிகளில் சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில், உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஆசிய நீச்சல் போட்டியில், இந்தியா சார்பாகக் கலந்துகொண்டார். 400 மீட்டர் ரிலே போட்டியில், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் லியோனார்ட் பங்கேற்றார்.

ஆசிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், திறமையாகச் செயல்பட்ட லியோனார்ட், முதலிடத்தைக் கைப்பற்றினார். ஆசியப் போட்டியில் தங்கம் வென்று, சொந்த ஊருக்கு இன்று காலை திரும்பிய அவருக்கு, ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லை மாவட்ட நீச்சல் கழகம் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் தலைமையிலான அதிகாரிகள், வீரர்கள், சமூக நல ஆர்வலர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

வெற்றி வாகையுடன் திரும்பிய லியோனார்டை சந்தித்துப் பேசினோம். ’’எனது தந்தை விவேக் ஆனந்தன், ராணுவ வீரராகப் பணியாற்றியவர். அவர், கடந்த 2006-ம் வருடம் திருச்சி மாவட்டம் முக்கொம்பு என்ற இடத்தில், ஆற்றில் குளிக்கும்போது உயிர் இழந்து விட்டார். அதன் பின்னர், என்னையும் தம்பி, எபி ரிச்சர்டையும் எனது தாய் கோகிலா மேரி கஷ்டப்பட்டு வளர்த்தார். எனது தாயார் எனக்கு மூன்றரை வயதில் நீச்சல் பழக்கிவிட்டார்.

அதன் பின்னர், எனக்கு நீச்சலில் ஆர்வம் ஏற்பட்டது. பள்ளியில் என்னை குடும்பத்தினரும் உறவினர்களும் ஆசிரியர்களும் நல்ல முறையில் உற்சாகப்படுத்தினார்கள். அதனால், மாவட்டப் போட்டிகளில் வெற்றிபெற்றேன். பின்னர், மாநில அளவில் சாதனை படைத்தேன். தற்போது, ஆசியப் போட்டியில் வெற்றிபெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது தம்பி எபி ரிச்சர்ட் நல்ல நீச்சல் வீரர். அவனும் மாவட்டம் மற்றும் மாநிலப் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளான். ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதே எனது லட்சியம். அது நிச்சயம் நிறைவேறும்’’ என்கிறார் நம்பிக்கையுடன்.

வெற்றிபெற்ற சாதனை வீரர் லியோனார்டுக்கு விளையாட்டு ஆர்வலர்கள், அதிகாரிகள், கல்வித்துறையினர் மற்றும் விளையாட்டு அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர். இந்த மாணவனுக்கு சர்வதேச தரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டால், மேலும் பல சாதனைகளைப் படைக்க ஏதுவாக அமையும் என்பதால், அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு, தமிழக அரசு உடனடியாக உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அக்கறையுடன் வலியுறுத்துகின்றனர். அதைச் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!