'உள்ளுர் விடுமுறை திருப்பதி ஜீயருக்காகவா, முதல்வர் பழனிசாமிக்காகவா?': தொடர்கிறது புஷ்கர சர்ச்சை!

நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவிரி புஷ்கரத் திருவிழா நடைபெறுதல் மற்றும் மஹாளய அமாவாசை அன்று திருப்பதி ஜீயர் ஸ்ரீ செங்கோல் ஆதீன குருமகா சன்னிதானம் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெறும் நாளான 20.09.2017 புதன் கிழமையன்று நாகை மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் சுரேஷ்குமார் ஆணை வெளியிட்டுள்ளார்.  

திருப்பதி ஜீயர் உள்ளுர் விடுமுறை அளிக்கவேண்டும் என்று கோரிக்கைவிடுத்தாகவும், அதை அரசு கவனமுடன் பரிசீலித்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) உள்ளூர் விடுமுறை அளித்துள்ளதாகவும், அதை ஈடுசெய்யும் பொருட்டு இந்த மாதத்திலோ அல்லது அடுத்த மாதத்திலோ ஒரு சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  

மேற்கண்ட விடுமுறை தினமானது செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அளிக்கப்படவில்லை என்பதால் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படத் தகுந்த ஏற்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

காவிரி புஷ்கரத்துக்காக கடந்த 12-ம் தேதி உள்ளூர் விடுறை விடப்பட்ட நிலையில், மீண்டும் 20-ம் தேதி திருப்பதி ஜீயரின் வேண்டுகோளின்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது பலருக்கும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அன்றைய தினம் நாகையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகைதர இருக்கிறார். வரும் வழியில் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் காலை 11.00 மணியளவில் புனிதநீராடவுள்ளார்.  இதற்காகத்தான் இந்த விடுமுறை என்றும் சிலர் கூறுகிறார்கள். 

ஐந்தாம் நாளான இன்று காவிரி புஷ்கரத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஏராளமான வெளியூர் பக்தர்கள் வாகனங்களில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.  மேலும், இன்று மாலை 5.00 மணிக்கு அய்யாரப்பர் கோயிலிருந்து பூசாரிகள் பேரணி நடைபெறவுள்ளது. கட்சிசேரி ரோடு, பேருந்துநிலையம், பட்டமங்கலத்தெரு, பெரியகடைத்தெரு வழியாக ஊர்வலமாக சென்று காவிரியின் வடகரையில் மாநாடு நடத்துகிறார்கள். மாலை 6.00 மணிக்கு பூசாரிகள், காவிரி அன்னைக்கு ஆரத்தி வழிபாடு செய்கிறார்கள். அதேநேரம் தர்மபுர ஆதீனத்துக்கு காஞ்சி சங்கராச்சாரியார்கள் முன்னிலையில் புஷ்பாஞ்சலி நடைபெறவுள்ளது. இரவு கலையரங்கில் காஞ்சி மகாப்பெரியவரின் வாழ்க்கை வரலாறு நாடகம் நடைபெறவுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!