தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஓர் சுயம்வரம் நிகழ்ச்சி

தூத்துக்குடி, லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

suyamvaram

இந்த சுயம்வரம் நிகழ்ச்சிகுறித்து லூசியா மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் லூசியா மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பெர்க்மான்ஸிடம் பேசினோம், ‘’ இந்த லூசியா மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் பெயர் கொண்ட புனித லூசியாவின் திருநாள் மற்றும் இச்சங்கத்தின் ஆண்டுவிழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 13-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 15 வருடத்துக்கு முன்புதான் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தி இச்சங்கம் சார்பில் திருமணம் நடத்தி வைக்கத் தொடங்கினோம். கடந்த 15 வருடத்தில் இதுவரை 65 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் 13-ம் தேதி நடக்கும் லூசியாவின் திருநாளில் நடக்க இருக்கும் மாற்றுத்திறனாளிகளின் திருமணத்துக்கான சுயம்வரம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலுமிருந்து மொத்தம் 52 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம் கொடுத்தனர். விண்ணப்பம் கொடுத்த மாற்றுத்திறனாளிகள் மேடை முன்பு வந்து தன்னைப் பற்றி சுய அறிமுகம் செய்துகொள்வார்கள். அப்படி சுய அறிமுகம் செய்யும்போதே பார்வையாளர் வரிசையிலுள்ள மாற்றுத்திறனாளிகள் தனது வாழ்க்கைத்துணையை தேர்வு செய்துகொள்வார்கள். மணமக்கள் இருவரும் அவரது குடும்பத்தினர்களும் பேசி சம்மதம் தெரிவித்த பிறகு அந்த ஜோடிகளின் பெயர்களைப் பதிவுசெய்து கொள்வோம்.இன்று சுய அறிமுகம் செய்த 52 மாற்றுத்திறனாளிகளில் 4 ஜோடிகளுக்கு நிச்சயதார்த்தம் செய்துவைக்கப்பட்டுள்ளது. 3 ஜோடிகள் தங்கள் துணையை தேர்வு செய்துகொண்டனர். இந்த 7 ஜோடிகளுக்கும் வரும் டிசம்பர் 13-ம் தேதி திருமணம் நடத்தி வைக்கப்படும். இந்த சுயம்வரத்தில் கலந்துகொள்ளவும் திருமணச் செலவுக்கும் மாற்றுத்திறனாளி ஜோடிகள் எந்த செலவும் செய்யத் தேவையில்லை. இந்த சங்கம் மற்றும் சில நற்பணி மன்றங்களின் உதவியுடன் மணமக்களுக்கு பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி, தாலி, கட்டில், பாத்திரங்கள், கேஸ் அடுப்பு, டி.வி மற்றும் ஒருமாதத்துக்குத் தேவையான சமையல் பொருள்கள் வரை அனைத்துமே வழங்கப்பட்டுவிடும். உடலில் உள்ள குறைகளை மறந்து மணவாழ்வில் இணைந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.’’ என்றார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!