தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்!

தூத்துக்குடியில் தங்குகடல் முறையில் மீன்பிடிக்க அனுமதிக்கக்கோரி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்

தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகத்திலுள்ள விசைப்படகுகள் மூலம் கடலுக்குள் சென்று பிடித்து வரப்படும் மீன்கள் ஏலமுறையில் தமிழ்நாட்டுக்குள் மட்டுமல்லாமல் மற்ற அண்டை மாநிலங்களுக்கும் நல்ல விற்பனை ஆகிறது. இந்த மீன்பிடித்துறைமுகம் மூலம் 240 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். தற்போது அதிகமாக மீன் வரத்து இல்லாததால் தங்குகடலில் மீன்பிடிக்க அரசு அனுமதி கோருகின்றனர் மீனவர்கள்.

இதுகுறித்து விசைப்படகு மீனவர்களிடம் பேசியபோது, ‘’தினமும் அதிகாலை 5 மணிக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு இரவு 9 மணிக்குள்ளாக கரைக்கு திரும்பி விடவேண்டுமென்பது அரசு மீன்வளத்துறையின் சார்பில் மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறை. இரவு 9 மணிக்கு மேல் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவோ, தங்குகடலில் மீன்பிடிக்கவோ அனுமதியில்லை.  சில நாள்களில் ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தூத்துக்குடி மாவட்ட கடல் எல்லைப் பகுதிக்குள் இரவில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துச் செல்கின்றனர். இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

தற்போது மீன்வரத்து குறைந்துள்ளதால் அரசு விதித்துள்ள காலை 5 மணி முதல் 9 மணிக்குள்ளாக கடலுக்குள் சென்று மீன் பிடித்துவருவதால் கிடைக்கும் வருமானம் விசைப்படகுக்கான டீசல், மற்ற மீன்பிடி வேலையாட்கள் கூலி ஆகியவற்றுக்கே போதுமானதாக உள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக 80 முதல் 100 விசைப்படகுகளே கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று வருகின்றன. இரவில் தங்குகடலில் படகில் தங்கி மீன் பிடித்தால் மட்டும்தான் கட்டுப்படியாகும்.

இந்தக் கோரிக்கையை பல ஆண்டுகளாக அரசுக்கு வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அரசு அனுமதி வழங்க மறுக்கிறது. மற்ற மாவட்ட மீனவர்களைப் போல எங்களுக்கும் தங்குகடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி வழங்கிட வேண்டும். தங்குகடல் அனுமதி இல்லாவிட்டால் கடலுக்குள் சென்று வருவதே லாபமில்லாமல் இருக்கும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒருநாள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.’’ என்றனர். 

விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் 240 விசைப்படகுகளும் மீன்பிடித்துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீன் ஏலக்கூடமும் வெறிச்சோடிக் காணப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!