தமிழீழ செயற்பாட்டாளர் டாக்டர் பொன் சத்தியநாதன் ஆஸ்திரேலியாவில் காலமானார்!

ஈழத்தமிழர் டாக்டர் பொன் சத்தியநாதன்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பங்களிப்பாளர்களில் ஒருவரும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் செயற்பாட்டாளருமான டாக்டர் பொன்.சத்தியநாதன் ஆஸ்திரேலியாவில் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 69. 

இலங்கை, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த பொன்.சத்தியநாதன், ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தார். 80-களில் அங்கு ஈழத்தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கி, அந்த நாட்டில் குடியேறிய தமிழர்களின் பிள்ளைகளுக்கு தமிழைக் கற்பிக்கும் பள்ளிகளை உருவாக்கினார். அங்கு மட்டுமல்லாமல் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வசிக்கும் நாடுகளில் எல்லாம் தமிழ்ப் பள்ளிகளை அமைக்கப் பணியாற்றினார். 

அது மட்டுமில்லாமல் தமிழீழத்துக்கும் அடிக்கடி சென்றுவந்தவர், தமிழீழப் பகுதி இளைஞர்களுக்கும் குறிப்பாக விடுதலைப்புலிகளின் நிழல் அரசுக் காலத்தில் கணினிகளைப் பயன்படுத்துவதற்கு முன்னின்று பணியாற்றினார். தன் சொந்த செலவில் ஈழத்து இளைஞர்களுக்கு கணினிகளை வழங்கி, அவர்களின் கணினிக் கல்விக்கு உதவியாக இருந்தார். கூடவே கணினியில் தமிழின் பயன்பாட்டை எளிமையாக்கவும் உழைத்தார். அதையொட்டி கணினி மென்பொருள் தொடர்பாக, இளைஞரைப் போல புதிதாகப் படித்து பட்டங்களையும் பெற்றார். ஒலிக்குறிப்புகளை தமிழ் எழுத்தாக்கிப் பதியும் வசதியை உருவாக்கும் ஆய்வுப்பணியில் செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

ஈழத்தமிழ்ச் சங்கத்தின் பணிகள் மட்டுமின்றி, மருத்துவரான தன் மனைவி மேரி நளாயினியுடன் இணைந்து, மெல்பர்னில் தமிழ் நூலகம் ஒன்றையும் நடத்திவந்தார். பின்னர் சமாதான காலத்தில் விடுதலைப்புலிகளின் நிழல் அரசுக் காலத்தில் ஈழத்து மக்கள் பயன்படுத்துவதற்காக சத்தியநாதன் பல உதவிகளைச் செய்தார்.

தமிழீழப் பகுதிகளில் இலங்கை அரசின் மனிதாபிமான உதவிப் பணிகளும் நிறுத்தப்பட்ட காலத்தில், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திலும் அவர் பங்கெடுத்திருந்தார். தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு இயங்கிவரும் உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத்தலைவராகவும் செயல்பட்டார். சென்னையில் உள்ள தன் சொந்த வீட்டை அந்த அமைப்புக்காக வழங்கினார். 

விக்டோரியா மாநிலம் மெல்பர்னில் வசித்துவந்த அவருக்கு, நினைவுமறதி நோய் தாக்கியதால் சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்தது. தொடர்ந்து சிகிச்சைபெற்றுவந்தவர், அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு இயற்கை எய்தினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!