குடும்பத்தின் பாதுகாப்புக்கு `டேர்ம் இன்ஷூரன்ஸ்' அவசியம், ஏன்? | Important things to look for term insurance!

வெளியிடப்பட்ட நேரம்: 16:18 (17/09/2017)

கடைசி தொடர்பு:16:18 (17/09/2017)

குடும்பத்தின் பாதுகாப்புக்கு `டேர்ம் இன்ஷூரன்ஸ்' அவசியம், ஏன்?

நம்முடைய எதிர்கால தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு முதலீடு எவ்வளவு முக்கியமோ, அதைவிட மிக முக்கியம் நம்முடைய குடும்பத்தினரின் நிதி சார்ந்த `பாதுகாப்பு'. 60 ஆயிரம் ரூபாய் கொடுத்து டூ வீலர் வாங்கும்போது, பாதுகாப்புக்காக 1000 ரூபாய்க்கு ஹெல்மெட் வாங்குகிறோம்; வாகனம் ஒட்டும்போது பாதுகாப்புக்காக சீட் பெல்ட் போட்டுக்கொள்கிறோம் அல்லவா? அதைப்போல நம்முடைய குடும்பத்தினரின் பாதுகாப்புக்காகக் கொண்டுவரப்பட்டதுதான் `டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி'. 

டேர்ம் இன்ஷூரன்ஸ்

ஆனால், டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி என்றாலே ஒரு சிலர் அபசகுனமாகப் பார்க்கிறார்கள். ஏனெனில் டேர்ம் இன்ஷூரன்ஸில் பாலிசிதாரர் மரணம் அடைந்தால் கிளெய்ம் கிடைக்கும் என்பதே முக்கிய காரணம். இன்றைய சூழ்நிலையில் இறப்பு என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால், ஒரு வேளை நமக்கு இறப்பு நிகழ்ந்தால் நம்மை நம்பியே வாழ்க்கை நடத்தி வரும் நம்முடைய குடும்ப உறுப்பினர்களை யார் காப்பாற்றுவது?  இதற்கு முன் கூட்டுக் குடும்பமாக கூடி வாழ்ந்துவந்தோம். கூட்டுக் குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், குடும்பத்திலுள்ள மற்றவர்கள் உதவி செய்வார்கள். இப்போது பெரும்பாலும் தனிக் குடித்தனம் ஆகிவிட்டதால், அதுபோன்ற நிலை இப்போது எங்குமே இல்லை. சொந்த வீடு, பிள்ளைகளின் படிப்பு, திருமணம் என பலதரப்பட்ட தேவைக்கு நிதித் திட்டமிடல் செய்கிறோம். அதேநேரத்தில், குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், இந்த நிதித் திட்டமிடல் எதுவுமே நிறைவேறாமல் போக அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆகையால், இந்த நிதித் திட்டமிடலில் முதல்படியாக, வருமானம் ஈட்டும் நபர் அவசியம் எடுக்க வேண்டிது `டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி' 

குறைந்த பிரீமியம், அதிக கவரேஜ்! 

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பொறுத்தவரை, வருமானம் ஈட்டக்கூடியவர்கள் மட்டுமே இந்த பாலிசியை எடுக்க முடியும். இந்த பாலிசியில் குறைவான பிரீமியம் செலுத்தினாலே அதிக கவரேஜ் கிடைக்கும். டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் மட்டுமே கிளெய்ம் கிடைக்கும். மற்றபடி பிரீமியமாகச் செலுத்திய தொகை திரும்பத் தரப்பட மாட்டாது. டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை நேரடியாகவும் வாங்கலாம், ஆன்லைன் மூலமாகவும் வாங்கலாம். பாலிசிக் காலத்தில் பாலிசிதாரருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் பாலிசி முடிவில் தொகை எதுவும் கிடைக்காது. டேர்ம் இன்ஷூரன்ஸை பொறுத்தவரை, குறைந்த வயதில் பாலிசி எடுக்கும்போது பிரீமியம் குறைவாக இருக்கும். எனவே, இளம் வயதிலேயே இந்தப் பாலிசியை எடுப்பது நல்லது. 

இன்ஷூரன்ஸ் கம்பெனி! 

எந்த ஒரு நிறுவனத்திலும் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் அந்த நிறுவனத்தின் பின்னணியைக் கவனிப்பது நல்லது. அந்த நிறுவனம் இன்ஷூரன்ஸ் துறையில் எத்தனை வருடங்களாக இருக்கிறது; வாடிக்கையாளர்களுக்கு இன்ஷூரன்ஸ் கிளெய்ம் சரியாக செய்கிறார்களா; அவர்களுடைய இன்ஷூரன்ஸ் கிளெய்ம் ரேஷியோ எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். நிறுவனத்துக்கு நிறுவனம் இன்ஷூரன்ஸ் பாலிசியின் பிரிமீயம் வித்தியாசப்படும். அதாவது, பிரீமியம் அதிகமாக இருக்கும் நிறுவனத்தின் பாலிசியில் ஏதாவது கூடுதல் வசதி உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். பிரீமியம் குறைவு என்பதால் மட்டும் ஒரு பாலிசியைத் தேர்வு செய்யக்கூடாது.

அதிக வயது, அதிக பிரீமியம்! 

40, 50 வயதுக்கு அதிகமாக இருப்பவர்கள், அவர்களுடைய உடல் நலத்தைக் கருதி, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி கிடைக்காது என நினைக்கிறார்கள். 50 வயதுக்குப் பின் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பவர்களுக்கும் பாலிசி வழங்கப்படும். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் பிரீமியமானது இருக்கும். அதாவது கூடுதலாக சர்க்கரை, ரத்த அழுத்தம், வேறு ஏதாவது வியாதிகள் இருந்தால் அந்த வியாதிக்கான ரிஸ்க்கின் அடிப்படையில் பிரீமியம் கொஞ்சம் அதிகம் இருக்கும். டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் மரணம் ஏற்பட்டால்தான் கிளெய்ம் கிடைக்கும். ஒருவேளை விபத்தில் சிக்கி ஏதாவது ஊனம் ஏற்பட்டால் கிளெய்ம் கிடைக்காது எனக் கருதுகிறார்கள். இதுபோன்ற சிக்கல்களைத் தீர்க்க ரைடர் பாலிசி எடுத்தாலே போதும். அதாவது, டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது சற்று கூடுதல் பிரீமியம் செலுத்தி விபத்தில் ஏற்படும் ஊனத்துக்கும் கவரேஜ் பெற முடியும். 

சிக்கல் கிடையாது! 

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது, கொடுக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையாக, சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம். ஏனெனில் பாலிசி எடுக்கும்போது தரும் தகவல்களில் ஏதாவது தவறு இருந்தால், கிளெய்ம் நிராகரிக்க அல்லது தாமதமாக வாய்ப்புள்ளது. டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எப்படி க்ளெய்ம் செய்ய வேண்டும், அதற்குத் தேவையான ஆவணங்கள் என்ன என்பது குறித்த தகவல்களையும், பாலிசியில் யாரை நாமினியாக குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதையும் குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்துகொள்வது அவசியம். சரியானபடிக்கு கிளெய்ம் செய்தால் சிக்கல் இல்லாமல் இழப்பீடு கிடைக்கும்.


டிரெண்டிங் @ விகடன்