சாரண இயக்கத்தை தமிழ்நாடு முழுக்க அறியச் செய்த ஹெச்.ராஜாவுக்கு நன்றி : மணி பேட்டி

தமிழ்நாடு சாரண - சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா படுதோல்வியடைந்தார். அவரை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் இயக்குநர் மணியும் போட்டியிட்டார். இதில் மணி, 232 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். ஹெச்.ராஜா, வெறும் 52 வாக்குகள் மட்டுமே பெற்றார். 

சாரண இயக்கத் தலைவர் மணி

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த மணி, 'தமிழ்நாடு சாரண - சாரணிய இயக்கத் தலைவர் தேர்தலில் எனக்கு ஓட்டளித்து வெற்றி பெறச் செய்த நல்நெஞ்சங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு இல்லத்தில் இருக்கிற குழந்தைகளும் சாரண - சாரணிய பண்புகள் பெற்று விளங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். இயக்கத்தில் சுட்டிக் காட்டப்படுகின்ற குறைகளை விரைவில் கலைய அனைத்து வேலைகளும் செய்யப்படும். தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனைப் பள்ளிகளிலும் பள்ளி கல்வித்துறையின் உதவியுடன் சாரண - சாரணிய இயக்கத்தைத் தொடங்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். தமிழ்நாடு முழுக்க இந்த சாரண - சாரணிய இயக்கத்தைப் பற்றி தெரியப்படுத்தியதற்கு ஹெச்.ராஜாவுக்கு நன்றிகள்' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!