தமிழகத்தை கிரிஜா வைத்தியநாதன், குருமூர்த்தி ஆகியோர் ஆள்கின்றனர்..! சுப.வீரபாண்டியன் குற்றச்சாட்டு

தமிழகத்தை கிரிஜா வைத்தியநாதன், குருமூர்த்தி போன்றவர்கள்தான் ஆண்டுகொண்டிருக்கிறார்கள் என்று சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். 

 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழ்வாய்வுப் பணியை சுப.வீரபாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசியஅவர், 'கீழடியின் வயது 2,200 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தமிழன் நாகரிகத்தோடு விஞ்ஞான அறிவுகளைப் பயன்படுத்தி வாழ்ந்திருக்கிறான் என்கிற அடையாளத்தை மத்திய அரசு மறைக்கப் பார்க்கிறது. அதுதான் வேதனையாகவும் வியப்பாகவும் இருக்கிறது. அதுவே கவலையாகவும் இருக்கிறது. தமிழ் இனம்தான் இந்திய தேசிய இனத்தில் மூத்த இனம் என்பதற்கு கீழடி மிகப்பெரிய வரலாற்று ஆவணம்.

இதுவரை நாம் புத்தகத்தில் இலக்கியத்தில் தான் நம் நாகரிகம், பண்பாடுகள் பற்றி படித்து வந்திருக்கிறோம். ஆனால் கீழடி நமக்கு நேரடியாக தமிழர்களின் வாழ்க்கை முறையைக் காட்டியிருக்கிறது. தமிழக அரசு கீழடி நாகரிகத்தை வெளிப்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை. காரணம் அது பா.ஜ.க-வின் எடுபிடி அரசாக உள்ளது. இந்த நாட்டில் யாரும் நிம்மதியாக இல்லை.

நீதிமன்றங்கள் ஆசிரியர்களை மிரட்டுகிறது. ஆனால், சாராய வியாபாரி விஜய்மல்லையாவை நீதிமன்றம் முன்ஜாமீனில் விடுகிறது.  பாபா ராம்தேவ், ஜக்கிவாசுதேவ் போன்ற சாமியார்கள் இந்தியாவின் அதிகார மையங்களாக இருக்கிறார்கள். தமிழகத்தைக் கிரிஜா வைத்தியநாதன், குருமூர்த்தி போன்றவர்கள் ஆண்டுகொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாகவே குற்றம் சுமத்துகிறேன். கீழடி மிகப்பெரிய தொன்மையான சான்று. பஞ்சைக்கொண்டு தீயை அணைக்கமுடியாது.

காலம் ஒருநாள் இவர்களுக்குப் பதில் சொல்லும். கீழடி வைகைக் கரை நாகரிகம் வெறும் ஐம்பது சென்ட் இடத்தில் மட்டுமே ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்திருக்கிறது என்றால் 110 ஏக்கரில் ஆய்வு நடத்தினால் தமிழன் வாழ்ந்த நாகரிகம் வெளிப்பட்டுவிடும். முதன்மையான இனம் தமிழ் இனம் என்பது உலகத்துக்கே தெரியவரும் என்பதற்காக மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டே மறைக்கப் பார்க்கிறது. ஆதிச்சநல்லூர் அகழ்வராய்ச்சி அறிக்கையை வெளியிட விரைந்து செயல்பட்ட அதிகாரி மகேஸ்வரியும் மாற்றப்பட்டார். ஆக நேர்மையான அதிகாரிகள் விரைந்து செயல்படக்கூடிய அதிகாரிகள் மத்திய அரசால் மாற்றப்படுகிறார்கள். எங்கே ஆதிசமூகம், தமிழ் சமூகம் என்பது உலகுக்கு தெரிந்துவிடுமோ என்கிற பயம் பா.ஜ.க அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!