Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சங்கரன்கோவிலில் வெள்ளிப் பல்லக்கு மாயமான விவகாரம்: அறநிலையத்துறை துணை ஆணையர் சஸ்பெண்ட்!

சங்கரநாராயணர் கோயில்

சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசாமி கோயிலில் வெள்ளிப் பல்லக்கு மாயமான விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை துணை ஆணையர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் சங்கரகோவிலில் சங்கரநாராயணர்-கோமதி அம்பாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், அரியும் சிவனும் ஒன்று என்பதை விளக்கும் வகையில் நடக்கும் ஆடித்தபசு திருவிழா மிகவும் பிரசித்தம். கோயிலில் தினந்தோறும் இரவில் நடக்கும் பூஜைக்கு வெள்ளிப் பல்லக்கு பயன்படுத்தப்படுவது வழக்கம். 24.5 கிலோ எடைகொண்ட இந்தப் பல்லக்கில் சுவாமியை வைத்து தூக்கிச் செல்வார்கள். 

இந்த வெள்ளிப் பல்லக்கு நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதனால் இதைப் பற்றி யாருமே அக்கறை கொள்ளவில்லை. கடந்த ஜூலை மாதத்தில், இந்தக் கோயிலின் நிர்வாக அதிகாரியும் அறநிலையத்துறை துணை ஆணையருமான பொன்.சுவாமிநாதன் சிவகங்கை மாவட்டத்துக்கு மாறுதலானார். அப்போது, புதிதாகப் பொறுபேற்ற செல்லத்துரையிடம் பொறுப்புக்களை ஒப்படைத்தபோது, இந்தப் பல்லக்கு காணாமல் போனது தெரியவந்தது.

இதையடுத்து பொன்.சுவாமிநாதன் சங்கரன்கோவில் டவுன் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து இதுகுறித்து விசாரித்து வந்தனர். கோயிலுக்குள் இருந்த வெள்ளிப் பல்லக்கு காணாமல் போனதுகுறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையே நீடித்தது. நிர்வாக அலுவலரின் கட்டுப்பாட்டில், பல்லக்கு, சுவாமியின் ஆபரணங்கள் உள்ளிட்ட கோயிலின் முக்கிய பொருள்களுக்கான அறையின் சாவி இருக்கும் நிலையில் அங்கிருந்து வெள்ளிப் பல்லக்கு மட்டும் காணாமல் போனது எப்படி? என போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, கடந்த ஆடித்தபசு திருவிழாவின்போது, அறநிலையத்துறை ஆணையரான வீரசண்முகமணி இந்தக் கோயிலுக்கு வந்தார். அப்போது அவர் வெள்ளிப் பல்லக்கு மாயமான விவகாரம்குறித்து கோயிலின் ஊழியர்கள், கோயிலுக்கு அருகில் கடைகள் நடத்துபவர்கள், இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸார், அறநிலையத்துறை அலுவலர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் தீவிர விசாரணை நடத்தினார். 

இந்தச் சூழலில், அறநிலையத்துறை துணை ஆணையரான பொன்.சுவாமிநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் சிவகங்கை மாவட்ட அறநிலையத்துறை துணை ஆணையராக பொறுப்பு வகித்து வரும் நிலையில், சங்கரன்கோவில் கோயிலில் வெள்ளிப் பல்லக்கு மாயமான விவகாரம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக அறநிலையத்துறையினர் தெரிவித்தனர். இதன்மூலம் இந்த வழக்கில் தற்போது திருப்புமுனை ஏற்பட்டிருப்பதாக சங்கரநாராயணசாமி கோயில் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close