வெளியிடப்பட்ட நேரம்: 12:43 (17/09/2017)

கடைசி தொடர்பு:10:46 (18/09/2017)

'19 எம்.எல்.ஏ-க்களை பிடித்து வைத்திருப்பதில் என்ன தவறு?' - முதல்வருக்கு எதிராக சீறிய தினகரன்

அ.தி.மு.க-வில் உட்கட்சி சண்டை இன்னும் ஓரிரு வாரத்தில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ச்சியாக செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில், அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று சென்னை, அடையாறில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

டிடிவி தினகரன்


அப்போது அவர், 'அண்ணன் பழனிசாமி உட்பட அனைத்து அமைச்சர்களும் டென்ஷனாக உள்ளனர். அவர்கள் என்னைப் பற்றியும் எங்கள் குடும்பத்தைப் பற்றியும் ஒருமையில் பேசுகின்றனர். ஒரு முதல்வர் ஒருமையில் பேசுவது சரியல்ல. என்னைக் கைதுசெய்துவிடுவேன் என்ற தொனியில் பேசுகிறார். சசிகலாவால் முதல்வரான பழனிசாமி இப்படி பேசுவது வருத்தத்தக்குரியது. மூன்றாம் தர மேடைப் பேச்சாளர் போல அவர் பேசிக் கொண்டிருக்கிறார். ஜெயக்குமார் என்னை திருடன் என்கிறார். திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதாவை நாங்கள்தான் கொன்றுவிட்டதாக பொய் கூறுகின்றனர். வெள்ளமண்டி நாடராஜனும் அதைப் போலவே கூறுகின்றனர். பத்து ஆண்டுகளாக நான் வன வாசம் இருந்ததாக கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக நான் வாழும் வீடே சென்னையில்தான் இருக்கிறது. என் வீட்டுக்கு எடப்பாடி பழனிசாமியும் அடிக்கடி வந்துள்ளார். ஆனால், இன்று அதை மறைத்துப் பேசுகிறார். பதவியில் இருக்கிறதால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடாது. சேகர் ரெட்டியுடன் தொடர்புள்ளதால்தான் எடப்பாடி பழனிசாமி இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அமைச்சர்கள் எல்லாரும் சி.பி.ஐ வசம் சிக்கியிருக்கிறார்கள். சசிகலாவை பொதுச் செயலாளராக ஆக வேண்டுமென்று கோரிக்கை வைத்தது இவர்கள்தான். ஆகவே, அவர்களுக்கு அன்று சுயநினைவு இல்லையா? அல்லது இன்று சுயநினைவு இல்லையா? என்பது தெரியவில்லை.  ஒருமையில் பேசும் அமைச்சர்களைப் பற்றியும் முதல்வரைப் பற்றியும் பேசவே எனக்கு அசிங்கமாக இருக்கிறது. கட்சியைக் காப்பாற்றவே எடப்பாடி பழனிசாமியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

பொதுச் செயலாளராக வேண்டுமென்று கோரிக்கை வைத்ததே இன்று குறை கூறிக் கொண்டிருப்பவர்கள்தான். திண்டுக்கல் சீனிவாசன் காலில் விழுந்து அந்தக் கோரிக்கையை முன்வைத்தார். அன்று அதைக் கூறிய வாயா இன்று இப்படியெல்லாம் பேசுகிறது என்று ஆச்சர்யமாக இருக்கிறது. 

19 எம்.எல்.ஏ-க்களை நாங்கள் பிடித்து வைத்திருப்பதாகக் கூறுகின்றனர். அன்று 122 பேரை பிடித்துவைத்ததால்தானே பழனிசாமி முதல்வரானார். அப்படிப் பார்த்தால், எங்களுக்கு எதிராக செயல்படும் உங்களை பதவியிலிருந்து நீக்க 19 பேரை பிடித்து வைத்திருப்பது நியாயம்தானே' என்று ஆவேசமாக பேசியுள்ளார்.