வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (17/09/2017)

கடைசி தொடர்பு:16:02 (23/07/2018)

பாம்பன் பாலத்தில் தொடர் விபத்துகள் : உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு!

அன்னை இந்திரா காந்தி சாலை பாம்பன் பாலத்தில் தொடர் விபத்துகளுக்கு காரணமாக உள்ள ரப்பர் சாலைகுறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

பாம்பன் பாலத்தில் நீதிபதிகள் ஆய்வு


ராமநாதபுரம் உப்பூரைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில்  தமிழகத்தின் நிலப் பகுதியை ராமேஸ்வரம் தீவுடன் இணைப்பது பாம்பன் பாலம். சுமார் 2.5 கி.மீ தூரம் கொண்ட இந்த பாம்பன் பாலத்தில் கடந்த சில நாள்களாக தொடர் விபத்துகள் நடைபெற்று வருகின்றது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 விபத்துகள் நடந்துள்ளன. இதற்கான காரணம் பாம்பன் பாலத்தில் புதிதாக போடப்பட்ட ரப்பர் சாலையாகும்.

 நெடுஞ்சாலைத்துறையின் சரியான விதிமுறைகளைப் பின்பற்றாமல் சுண்ணாம்பு மற்றும் தார் , குவாரி துகள்கள் கொண்டு அமைக்கப்பட்ட இந்த சாலை, வாகனம் இயக்குவதற்கு அசாதரண சூழல் உள்ளது. மேலும், வாகனத்தின் சக்கரத்துக்கும் சாலைக்கும் பிடிமானம் இல்லாமல் போய்விடுகின்றது.வேகமாக வரும் சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்டவை வேகத்தைக் கட்டுபடுத்த முடியாமல்  விபத்துகுள்ளாகின்றது. ஆகவே, இந்தப் பாலத்தில் புதிய சாலை அமைக்க நிபுணர் குழு அமைத்து ஆய்வு நடத்தி முறையான சாலை அமைக்க வேண்டுமென கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சசிதரன் - சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வருகையில் , கப்பல் மற்றும் சாலை மற்றும் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் மற்றும் ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை  ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன், நிஷா பானு ஆகியோர் பாம்பன் பாலத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அவர்களிடம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பாம்பன் பாலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலைகுறித்தும், விபத்துக்கான காரணம் குறித்தும் விளக்கினர். இதேபோல் நீதிபதிகளை சந்தித்த பாம்பன் பகுதி மீனவர்கள் சமீப காலங்களில் ஏற்பட்ட விபத்துகள் குறித்தும், புதிதாக போடப்பட்ட ரப்பர் சாலையில் முறைகேடு நடந்திருப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.