வெளியிடப்பட்ட நேரம்: 16:13 (17/09/2017)

கடைசி தொடர்பு:16:13 (17/09/2017)

மானமும்...அறிவும்.. தற்கால அரசியல் சூழலில் பெரியாரின் தேவையும்

பெரியார்

"மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு!" என்று பெரியார் 'குடியரசுவில்' எழுதிய வரிகள்தான், இன்று நாட்டின் சூழலுக்குப் பெருத்த தேவையாக இருக்கிறது. சமூக வளர்ச்சிக்குத் தேவை தனிமனிதச் சுதந்திரமும் அதன் வழியான சமூக மேம்பாட்டுச் சிந்தனையும், கூடவே தனிமனித சுயமரியாதையும் என்பதைத்தான் அவரது அந்தவரிகள் உணர்த்துகின்றன. ஆனால், தற்போதைய சூழல் எப்படியாக இருக்கிறது? 

மக்களால் இந்த ஆட்சி ஒரே ஒருமுறைதான் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், தமிழகம் மூன்றுமுறை முதல்வர்களைச் சந்தித்துவிட்டது. அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் மக்கள் நலன் பற்றி அதிகம் பேசுவதைவிடவும் தங்களுக்குள் ‘உண்மையான தர்மயுத்தத்தை யார் நடத்துவது?’ என்பதை விவாதிப்பதிலேயே இன்றளவும் காலம் கடத்திவருகிறார்கள். இத்தனைக்கும் பெரியார் போதித்த திராவிடக் கொள்கைகளை முன்னிறுத்தியே தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சி அரியணைக்கு வந்தது. ஆனால் கால மாற்றமும், தமிழகத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பங்களும் திராவிடக் கொள்கைகளை இனி யார் காப்பாற்றுவார்கள் என்கிற கேள்வியை தமிழக அரசியல் சூழலில் விட்டுச் சென்றிருக்கிறது. மத்திய அரசின் கதையோ சர்வதேசமும் அறிந்தது. இக்காலத்தில்தான் பெரியாரை மீட்டுருவாக்கம் செய்வதும், பெரியாரை மீள்வாசிப்பு செய்வதும் தமிழக அரசியலுக்கான தேவையாக இருக்கிறது என்கின்றனர் சில சிந்தனையாளர்கள். பெரியாரின் 139-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகளில் இருந்து...

"நீதி கெட்டது யாரால்?” - அருள்மொழி, வழக்கறிஞர்.

"இந்தியாவில் தற்போது உள்ள மத்திய அரசு வெறும் மதவாத அரசாக இருக்கின்றது. சர்வதேச அளவில் சதாம் உசேனும், முகமது அருள்மொழி, வழக்கறிஞர்கடாஃபியும் அவர்களது நாட்டில் மனித உரிமை மீறல்களை நிகழ்த்தினாலும் வல்லாதிக்கமான அமெரிக்காவிடம் அவர்கள் என்றும் தங்களை ஒப்படைத்தது இல்லை. அப்படிச் செய்திருந்தால் அவர்களது குற்றங்கள் ஒருவேளை வெளிவராமலே போயிருக்கும். இங்கே நிகழும் ஜனநாயகப் பெருங்குற்றங்கள் தெரியாமல் போனதற்குக் காரணம், நமது அரசின் அமெரிக்காவுடனான நட்புறவுதான். ஆதிக்கத்தின் கையில் ஜனநாயகம் ஒப்படைக்கப்படுவதைப் பற்றி முன்னோடியாக எதிர்த்தவர் பெரியார். 1947-ல் சுதந்திரம் பெற்றதைப் பற்றிய கட்டுரையில் அவர் இப்படியாகக் குறிப்பிட்டிருந்தார். 'சுதந்திரம் கிடைத்ததில் என்ன மாறப் போகிறது? இந்த நாட்டை வடநாட்டுப் பணமும், தென்னாட்டு மூளையும்தான் ஆளப்போகிறது' என்று கூறினார். அந்த வடநாடுதான் தற்போது இந்தியா முழுக்க தனது ஆதிக்கத்தால் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. 

ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி அரசு, தற்போது தங்களது அரசியலுக்காக பயன்படுத்தும் உருவகங்களை முன்பே அடையாளம் காண்பித்தவர் பெரியார் மட்டும்தான். ஒருபுறம்  நீட் விலக்கு போன்ற விஷயங்களில், நீதிமன்றமே தவறிழைத்தாலும் அதனைத் தட்டிக் கேட்கத் துணிந்தவர்தான் பெரியார். 1931-ல் அவர் எழுதிய தலையங்கத்துக்காக எட்டு மாதங்கள் கழித்து அவர்மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதற்கு அவர் அளித்த விளக்கம், "இதைவிட வீரியமான தலையங்கங்களை எழுதியிருக்கிறேன். ஆனால், என் மீது குற்றம்சாட்ட வேண்டும் என்பதற்காக, ஏதோ ஒரு தலையங்கத்தை காரணம்காட்டி, என்னை கோர்ட்டுக்கு வரவழைத்திருக்கிறீர்கள்" என்றார் நகைச்சுவையாக. இது மட்டுமில்ல, 1956-ல் நீதிமன்றத் தீர்ப்பை விமர்சனம் செய்தார் என்பதற்காக, பெரியாரால் நீதி கெட்டுவிட்டது என்கிற வகையில் குற்றம்சாட்டப்பட்டது. அதை அடுத்துதான், “நீதி கெட்டது யாரால்?” என்னும் அவர் எழுதிய தொகுப்பு புத்தகமாக வெளிவந்தது. நீட் விலக்குக்கு மறுத்த உச்சநீதிமன்றத்தை எதிர்த்து அரசு மௌனமாக இருக்கும் நிலையிலும், நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சொல்லும்போது அரசு மறுப்பு கூறாமல் இருக்கும் நிலையிலும், நீதிமன்றத்தை எதிர்த்துப் பேசுவதற்கு பெரியாருடைய பார்வை தேவைப்படுகிறது. 

மாநில அரசைப் பொறுத்தவரை அதன் இன்றைய நிலைமையை எந்த மாதிரி வர்ணிப்பது என்று தெரியவில்லை. பெரியார் இருந்திருந்தால் ‘சுயமரியாதையற்ற’ என்னும் ஒரே வார்த்தையில் விளக்கி இருப்பார். தமிழகத்தில் தற்போது சாரணர் இயக்கம் வரை பிரச்னை நடக்கிறது. மத்தியில் இருப்பவர்கள், தமிழக ஆட்சியைக் கைக்குள் வைத்துக்கொண்டு ஆக்டோபஸ் கால்களால் இழுக்கப் பார்க்கிறார்கள். அதைச் செய்வதற்கும் ஒப்புக்கொண்டு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டுள்ளது தமிழக அரசு. இதை அம்பலப்படுத்துவதற்கும் பெரியார் முன்வந்திருப்பார். அவர்கள் கட்சியின் பெயரில் திராவிடம் இருக்கு என்பதற்காகவோ, தன்னுடைய சிலைக்கு அவர்கள் மாலை போடுகிறார்கள் என்பதற்காகவோ அவர்களை ஆதரித்திருக்க மாட்டார். மத்திய அரசின் தற்போதைய கார்ப்பரேட் மூளைக்கு எதிராக அவரது குரல் அப்போதே ஒலித்தது. ஜமீன்தாரர் ஒழிப்புச் சட்டம் வந்தபோது, ஜமீன்தாரர் அல்லாதோர் மாநாடு என்று முதன்முதலில் அவர்தான் நடத்தினார். மேல்மட்ட சாதிகளின் பொருளாதாரத்தை, கட்டமைப்புகளைக் காப்பற்றுவதற்காகவே கிராம அமைப்புகள் இருக்கிறது. அதனால் சிறுநகரங்கள், பெருநகரங்கள் ஆக வேண்டும். விவசாயம் பரம்பரை வாழ்க்கையாக இல்லாமல் அது தொழில் முறைப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகள் பங்குதாரர்களாக வேண்டும்" என்று ஆட்சியதிகாரத்திற்கும், மக்கள் அதிகாரத்திற்குமான தீர்க்க தரிசனப் பார்வை பெரியாரிடம் இருந்தது" என்றார். 

"குஜராத்துக்கான பதில் பெரியாரிடம் இருந்தது" - தமிழக திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன்

"தொலைநோக்குப் பார்வையோடு, சமூகப் பொருளாதாரக் கருத்துகளை முன்வைத்தவர் பெரியார். பெண்கள் சுதந்திரம் குறித்தும்,நாகநாதன் பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்தும் பல்வேறு மக்கள் பலதரப்புகளை முன்வைத்தபோது பெரியார், குடும்பக் கட்டுப்பாடு திட்டம் பற்றி பேசினார். ஆண், பெண் சமம். ஆனால், பெண்கள்தான் குடும்பக்கட்டுப்பாடு செய்ய வேண்டுமா? அதிக பிள்ளைப் பெறுவதால் பெண்ணின் உடல்நிலை கெடுகிறது. பெண் சுதந்திரம் என்று பேசிவிட்டு, அவர்கள் ஆரோக்கியத்தைக் கேள்விக்குறியாக்குவது எந்தவகையைச் சேர்ந்தது என்று கேள்வி எழுப்பினார். அதனால்தான், இன்று தமிழகத்தில் ஃபெர்டிலிட்டி ரேட் 1.7 ஆனால், வடநாட்டில் 2.3. இங்கே பெரியார் இருந்ததுதான் அதற்குக் காரணம். வாஜ்பாய் தலைமையிலான அரசு, மானுட மேம்பாட்டு அறிக்கையை 2001-ல் சமர்ப்பித்தபோது, 'குடும்பக் கட்டுப்பாடு திட்டம்' தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படுகிறது, அதற்கு அங்கே இருந்த சமூக நீதிக் கட்டமைப்புதான் காரணம்' என்று பெரியாரைப் பற்றி குறிப்பிடுகிறார். அதுமட்டுமில்லாமல் பொருளாதார வல்லுநர் அமர்தியா சென் எழுதிய புத்தகமான 'India's Glory' அதே பெரியாரை முன்னிறுத்தி இங்கிருக்கும் சமூக நீதிக் கட்டமைப்பைப் பாராட்டுகிறது. ஒருமுறை குஜராத்துக்குப் பயணித்தபோது, அங்கே இருக்கும் ஒரு இஸ்லாமிய ஹோட்டலில் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே சாப்பிட்டு முடித்து பில் கொடுத்தபோது, அவர்கள் பணம் வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார்கள். காரணம் அங்கே இந்துக்கள், இந்துக்களுக்கான ஹோட்டலில்தான் சாப்பிடவேண்டும். நான் இஸ்லாமிய ஹோட்டலில் சென்று சாப்பிட்டது, அவர்களுக்கு அதிசயமாக இருந்தது. அதனால் பணம் வாங்க மறுத்தார்கள், அங்கேதான் மாட்டுக்கறிக்காக தலித்துகளின் தோலும் உரிக்கப்பட்டது. அந்த தலித்களுக்காக நீதி கேட்டு பெரும் பேரணியும் நடந்தது. ஆனால், மக்களின் உணவுச் சுதந்திர விழிப்புஉணர்வை இங்கே தமிழகத்தில் 1973-ம் ஆண்டிலேயே ஏற்படுத்தினார் பெரியார். காந்தியக் கடவுள் மறுப்பாளரான 'கோரா'-வின் முன்னிலையில் அனைவருக்குமான ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி விருந்தை நடத்தினார். குஜராத்துக்கான பதில் அன்றே பெரியாரிடம் இருந்தது" என்றார்.

தலைமை ஏற்பது மக்களுக்காகவும், சமூகத்துக்காகவும் செயல்படுவதை தடுத்துவிடும் என்று தலைமைப் பீடத்துக்கே வர மறுத்தவர்தான் பெரியார். தலைமைத் தன்மையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, மக்களை அந்தோ என்ற நிலைக்குத் தள்ளியிருக்கும் தற்போதைய அரசியல் சூழலுக்கு அவரது எண்ணம் எடுத்துரைக்கப்பட வேண்டியதே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க