வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (17/09/2017)

கடைசி தொடர்பு:09:48 (18/09/2017)

’தி.மு.க செயல்தலைவராக அழகிரி இருந்திருந்தால் நெருக்கடி கொடுத்திருப்பார்!’ - செல்லூர்ராஜு

'தி.மு.க செயல்தலைவராக அழகிரி இருந்திருந்தால் எங்களுக்கு நெருக்கடி கொடுத்திருப்பார்'  என்று செல்லூர்ராஜு பேசியுள்ளது அ.தி.மு.க-வில் மட்டுமல்லாமல் தி.மு.க-விலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்லூர்ராஜு


மதுரையில் இன்று தந்தைப் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சிலைக்கு மாலையிட வந்த அமைச்சர் செல்லூர்ராஜு செய்தியாளர்களிடம் பேசும்போது, ''தி.மு.க செயல்தலைவராக இருக்கும் ஸ்டாலினால் அ.தி.மு.க அரசை ஒன்றும் செய்ய முடியாது. அவர் தலைமையில் இருப்பதால் எதிர்க்கட்சி வலுவற்ற நிலையில் உள்ளது.

ஸ்டாலினுக்குப் பதிலாக அழகிரி தலைவராக இருந்திருந்தால் ஆக்கபூர்வமாக செயல்பட்டு அ.தி.மு.க-வுக்கு நெருக்கடியை கொடுத்திருப்பார். எங்களால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். கலைஞரின் திறமைகளில் பாதியளவு அழகிரியிடம் உள்ளது. ஆனால், ஸ்டாலின் அப்படியல்ல. ஸ்டாலினுக்கு சுயமாக செயல்படத் தெரியவில்லை. அவரை சிலர் இயக்குகிறார்கள். தென்மாவட்டத்தில் அழகிரி ஒரு சக்தியாக இருந்ததால்தான் அப்போது புரட்சித்தலைவி அம்மா அவர்கள், அவரைப்பற்றி கடுமையாகப் பேசினார்'' என்றார்.  ’என்னதான் இருந்தாலும், இப்பவும் அழகிரி செல்வாக்கோடு இருப்பதுபோலவும், அவருக்குப்  பயந்ததுபோல்’ அமைச்சர் இப்படி பேசியிருக்கக் கூடாது என்று அ.தி.மு.க-வினரும், ஸ்டாலினுக்கு எதிராக தி.மு.க-வில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார் என்று தி.மு.க-வினரும் விமர்சித்து வருகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க