வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (17/09/2017)

கடைசி தொடர்பு:09:43 (18/09/2017)

தூய்மையே சேவை விழிப்பு உணர்வு ரதத்தை துவக்கி வைத்த மத்திய அமைச்சர்!

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 'தூய்மையே சேவை' விழிப்பு உணர்வு ரதத்தை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை இணை அமைச்சர் துவக்கி வைத்தார்.

தூய்மையே சேவை விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்

மத்திய, மாநில அரசுகள் சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தூய்மை பாரதம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும், செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 வரை தூய்மையே சேவை என்ற இயக்கத்தின் கீழ் பல்வேறு சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மூலம் மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் திறந்த வெளியில் மலம் கழித்தலை தவிர்த்தல், தனிநபர் இல்ல கழிப்பறைகளைக் கட்டுதலை ஊக்குவித்தல் மற்றும் விழிப்பு உணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இன்று வருகை தந்த மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை இணை அமைச்சர் கிருஷ்ணராஜ், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள தூய்மையே சேவை ரதத்தை பேய்க்கரும்பில் உள்ள டாக்டர் அப்துல்கலாம் நினைவிடம் முன்பிருந்து துவக்கிவைத்தார். மாவட்டம் முழுவதும் விழிப்பு உணர்வு பிரசாரத்தை இந்த ரதம் மேற்கொள்ள உள்ளது.

தூய்மையே சேவை ரதம் துவக்கம்

பின்னர் மங்கள தீர்த்தப் பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் இணைந்து மத்திய இணை அமைச்சர் கிருஷ்ணராஜ் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டார். அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் நடராஜன், தமிழக மீன்வளத் துறை இயக்குநர் தண்டபாணி, ஊரக வளர்ச்சித் திட்ட முகமை இயக்குநர் தனபதி, மீன் துறை கூடுதல் இயக்குநர் சமீரான், மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன் ஆகியோர் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.