கீழடி மூன்றாம் கட்ட ஆய்வில் கிடைத்த அரிய பொருள்கள் குறித்த அறிக்கை..! | Details about Keeladi 3rd stage report

வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (17/09/2017)

கடைசி தொடர்பு:08:51 (18/09/2017)

கீழடி மூன்றாம் கட்ட ஆய்வில் கிடைத்த அரிய பொருள்கள் குறித்த அறிக்கை..!

மூன்றாம் கட்ட ஆய்வில் 1,800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் 1,500-க்கும் மேற்பட்ட மணிகள் கிடைக்கப்பெற்றுள்ளது என்று கீழடி அகழ்வாராய்ச்சி கண்காணிப்பாளர் ஶ்ரீராம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இன்னும் இரண்டு வாரத்தில் கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுக்கு வர இருப்பதாக அறிக்கை கொடுத்திருக்கிறார் இதன் கண்காணிப்பாளர் ஸ்ரீராம். தமிழர்களின் நாகரிகம், கலை, பண்பாடு, வாணிபம், வீரம் ஆகியவற்றின் அடையாளம் கீழடி. கீழடி மூன்றாம் கட்ட ஆய்விலுள்ள தகவல்களின்படி, 'ஏற்கெனவே அறியப்பட்ட கட்டட எச்சங்களின் தொடர்ச்சியைக் கண்டறியும் பொருட்டு கடந்த வருடம் கட்டட எச்சங்கள் கிடைத்த குழிகளின் தொடர்ச்சியாக வடக்கில் 400 சதுர மீட்டர் பரப்பளவில் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகின்றது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வின்போது தோண்டப்பட்ட குழிகளின் பரப்பளவு சுமார் 2,500 சதுரமீட்டர் ஆகும். ஏற்கெனவே அறியப்பட்ட கட்டடங்களின் தொடர்ச்சியோ அல்லது வேறுவிதமான பொருள்களோ இந்த ஆய்வில் கிடைக்கப்பெறவில்லை. இருந்தபோதிலும் சிதலமடைந்து வளைந்த நிலையில் ஒரு கட்டடம் மற்றும் மூன்று உறைகிணறுகள் மாத்திரமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியற்ற நிலையில் துண்டுச் சுவர் ஒன்று கிடைத்துள்ளது.

 

மேலும், இந்த ஆய்வில் பரவலாக கட்டடங்கள் கட்டப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. துண்டுச் சுவர் மட்டுமே முந்தைய காலத்தில் உள்ளது. இதன் காலம் கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும்போது மட்டுமே தெரியவரும். மூன்றாம் கட்ட அனுமதிக்கான காலம் குறைவாகவே இருந்ததால் 400 சதுரமீட்டர் பரப்பளவில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. மூன்றாம் கட்ட ஆய்வில் 1,800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் 1,500-க்கும் மேற்பட்ட மணிகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் 90 சதவிகித மணிகள் கண்ணாடியில் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள மணிகள் பளிங்கு, சூது பவளம், பச்சைக்கல் மற்றும் சுடுமண்ணில் செய்யப்பட்டவையாகும். தந்தத்தில் செய்யப்பட்ட சீப், விளையாட்டுக் காய்கள், காதணிகள், செப்பு, எலும்பு முனைகள், இரும்பு உளிகள் போன்ற பொருள்கள் கிடைத்துள்ளன. இன்று வரை பதினான்கு தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பானையோடுகள் கிடைத்துள்ளன.

 

இவற்றில் ஒளியன் என்ற தனிநபர் பெயரும் பானையோடுகளில் கிடைத்துள்ளன. மேலும் சதுர மற்றும் வட்ட வடிவிலான தேய்ந்த செப்புக் காசுகள், ஐந்து தங்கப் பொருள்கள் ஒரு சில மண்ணுருவங்கள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன. தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக அகழாய்வுப்பணி திட்டமிட்ட வேகத்தில் பணியை மேற்கொள்ள முடியவில்லை. இப்பணிக்கான அனுமதி செப்டம்பர் 30-ம் தேதியோடு முடிவடைகிறது. நான்காம் கட்ட அகழாய்வுப் பணியைத் தொடர அறிக்கைகள் மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க