தனுஷ்கோடியில் நீதிபதிகள் நேரில் ஆய்வு..! அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர மீனவர்கள் கோரிக்கை | Judges have examined in Dhanuskodi

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (17/09/2017)

கடைசி தொடர்பு:14:51 (09/07/2018)

தனுஷ்கோடியில் நீதிபதிகள் நேரில் ஆய்வு..! அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர மீனவர்கள் கோரிக்கை

நாட்டின் மிகச் சிறந்த துறைமுக நகரங்களில் ஒன்றாக விளங்கியது தனுஷ்கோடி.1964-ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலையில் சிக்கி உருக்குலைந்து போனது. இதைத்தொடர்ந்து இப்பகுதி மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் மின்சாரம், குடிநீர், சாலை, பள்ளிக்கூடம், மருத்துவமனை என எந்த அத்தியாவசிய வசதிகளும் அங்கு இல்லாத நிலையிலும் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரம் கருதி அப்பகுதியிலேயே குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு இங்கு தொடக்கப் பள்ளி அமைத்தது. மேலும் கடந்த மாதம் தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதி வரை சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது.

தனுஷ்கோடி பகுதியில் நீதிபதிகள் ஆய்வு

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரைச் சேர்ந்த திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,”தனுஷ்கோடி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலைத் தொடர்ந்து தனுஷ்கோடியில் வசித்து வந்த அனைவரையும், ராமேஸ்வரம் பகுதிக்கு இடமாற்றம் செய்தனர். இருப்பினும், இந்த 300 குடும்பத்தினரும் தனுஷ்கோடி பகுதியிலேயே தங்கி, தொழில் செய்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் தனுஷ்கோடி அங்கன்வாடி, ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் பயின்று வருகின்றனர். ஆனால், இந்தப் பள்ளிகளில் மின்வசதி, கழிப்பறை வசதி, சாலை வசதி, முறையான கட்டட வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. சிலர் சோலார் மின்தகடுகளை வழங்கிய நிலையில், முறையான பராமரிப்பில்லாததால், அதுவும் செயல்படாத நிலையில் உள்ளது. தனுஷ்கோடியிலுள்ள அங்கன்வாடி மையங்களில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுக்கான அரிசி, பருப்பு மற்றும் முட்டைகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டாலும், அவை மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அதற்கான பணியாளர்களும் இல்லை.

நீதிபதிகளிடம் மீனவர்கள் முறையீடு

இதேபோல பழைய தனுஷ்கோடியில் 300 குடும்பங்களும், தாவூக்காடு பகுதியில் 80 குடும்பங்களும், பாரடி பகுதியில் 100 குடும்பங்களும் உள்ளன. ஆனால், இந்தக் கிராமங்களில் கடந்த 53 ஆண்டுகளாக மின் வசதி, பொதுக் கழிப்பிட வசதி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லை. எனவே, இங்கிருக்கும் குடும்பங்களில் இருப்பவர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் கூட 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமேஸ்வரத்துக்கே செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

மேலும், பழைய தனுஷ்கோடியில் புயலில் சேதமடைந்துள்ள அஞ்சல் நிலையம், ஆலயம், விநாயகர் கோயில், ரயில் நிலையம், துறைமுகம் போன்ற கட்டடங்கள் எவ்வித பாதுகாப்புமின்றி உள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த ஆலயத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில், மாவட்ட நிர்வாகமும் சுற்றுலாத் தலமான இந்தப் பகுதியை பாதுகாத்து பராமரிக்க எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே, பழைய தனுஷ்கோடி, தாவுக்காடு, பாரடி கிராமங்களிலும், பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், சுற்றுலாத்தலங்களில் உள்ள பழைய கட்டடங்களைப் பாதுகாத்து பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு இதுகுறித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினம் விசாரணையின்போது தனுஷ்கோடி பகுதியை நேரில் ஆய்வுசெய்ய உள்ளதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதன் அடிப்படையில் இன்று தனுஷ்கோடிக்கு வந்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் மற்றும் நிஷா பானு அகியோர் தனுஷ்கோடி, சர்ஜ் பகுதி, அரிச்சல்முனைப் பகுதி மற்றும் அங்கு மீனவர்கள் வசித்து வரும் இடங்களைப் பார்வையிட்டனர்.

அங்கு வசித்து வரும் மீனவர்கள், பெண்கள் ‘தனுஷ்கோடி பகுதியில் வசிப்பது மட்டுமே தங்கள் தொழிலுக்குப் பாதுகாப்பானது. எனவே, நாங்கள் இங்கேயே வசிக்க உரிய அனுமதியும், தேவையான அடிப்படை வசதிகளையும் செய்துதர நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’’ என நீதிபதிகளிடம் முறையிட்டனர். நீதிபதிகள் ஆய்வுக்குச் சென்றிருந்தபோது பலத்தக் காற்று வீசியதால் மணல் புயல் அடித்தது. இத்தகைய சிரமத்துடன் எப்படி இங்கு வாழ்வீர்கள் என மீனவப் பெண்களிடம் நீதிபதிகள் பரிவுடன் விசாரித்தனர்.

நீதிபதிகளுடன் மாவட்ட ஆட்சியர் நடராஜன், வருவாய் அலுவலர் முத்துமாரி, கோட்டாட்சியர் பேபி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சென்றிருந்தனர்.