கோயிலுக்குச் சென்று பூஜை செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | O.Panneerselvam visited temple in Musiri

வெளியிடப்பட்ட நேரம்: 21:59 (17/09/2017)

கடைசி தொடர்பு:08:33 (18/09/2017)

கோயிலுக்குச் சென்று பூஜை செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

வெள்ளூரிலுள்ள திருக்காமேஸ்வரர் மற்றும் சிவகாம சுந்தரி என்றழைக்கப்படும் ஐஸ்வர்ய மகாலட்சுமி திருக்கோயிலுக்குச் சென்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழிபாடு நடத்தினார்.

ஓ.பி.எஸ்

துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நாமக்கல்லில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது அவரை முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, பூனாட்சி, சிவபதி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் முசிறிக்குச் சென்றார். அவர், முசிறியையடுத்த வெள்ளூரிலுள்ள திருக்காமேஸ்வரர் மற்றும் சிவகாம சுந்தரி என்றழைக்கப்படும் ஐஸ்வர்ய மகாலட்சுமி திருக்கோயிலுக்குச் சென்று அங்கு வழிபாடு நடத்தினார்.

எதிரிகளை வீழ்த்தவும், எதிரிகளைவிட பலம் அதிகரிக்க வேண்டுமானால், இந்த ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்டால் அனைத்தும் சாத்தியம் ஆகும் என்பது ஐதீகம். மேலும், சுக்கிரன் யோகத்துக்கு அதிபதி ஆனதும், குபேரன் தனாதிபதி ஆனதும் இங்கு வழிபாடு செய்ததால்தான். ராவணன் சிவனை வழிபட்டு ஈஸ்வரப் பட்டம் பெற்ற தலம் இது. அப்போதைய அரசர்கள் போர்க்களங்களுக்கு பயணிக்கும் முன்பு, இந்த ஆலயத்துக்கு வந்து தரிசனம் செய்துவிட்டுச் சென்றதாக தெரிவிக்கின்றனர். அப்படிப்பட்ட வெள்ளூர் திருக்காமேஸ்வரர் சிவகாமசுந்தரி கோயிலுக்கு ஓ.பி.எஸ் அடிக்கடி தரிசனம் மேற்கொள்வார் என்றும், அந்த வகையில் இன்று தரிசனம் செய்தார்.