Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரி புஷ்கர விழா 6-வது நாளில் ஒரு லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில், காவிரி மகா புஷ்கரம், கடந்த 12 -ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இவ்விழாவின் ஐந்தாம் நாளான நேற்று முன்தினம், "தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் பாதங்களுக்கு, இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் புஷ்பாஞ்சலி செய்து, பொற்காசுகளால் சொர்ணாபிஷேகம் செய்தார்."

காவிரி புஷ்கரத்தில் ஆறாம் நாளான நேற்று, முதல் ஐந்து நாள்களில் இல்லாத அளவுக்கு, அதிக அளவில் பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய பிற மாநிலங்களிலிருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களில் பலர், காவிரியில் தர்பண பூஜைகள் செய்தனர்.

இவ்விழாவில், நேற்று சுமார் 1 லட்சம் பக்தர்கள் புனித நீராடி உள்ளனர் என நாகை மாவட்ட  எஸ்.பி  தேஷ்முக் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பலர் தங்கள் குடும்பத்துடன் புஷ்கர விழாவில் கலந்துகொண்டனர்.
இன்று காலை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் காவிரியில் புனித நீராடி, காசி விஸ்வநாதரை தரிசித்தார்.

இன்று, காசி விஸ்வநாதருக்கும் விசாலாட்சி அம்மைக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, உலக நன்மைக்காக விசேஷ யாகங்கள் நடத்தப்பட்டன. காவிரித்தாயின் புதிய சிலைக்கும் அலங்கார அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்செய்தனர்.

வரும் 20-ம் தேதி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி புஷ்கரத்தில் புனித நீராட உள்ளார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அன்றைய தினத்தில், திருப்பதி ஜீயர் தலைமையில் காவிரியில் மஹாளய அமாவாசை பூஜைகள் நடத்தப்பட உள்ளன. இதனால், மீண்டும் நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று,பக்தர்களின் பாதுகாப்புக்காக மேலும் 200  காவல்துறையினர் புஷ்கர சிறப்புப் பணியில் ஈடுபட்டனர். வெகுதொலைவிலிருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக, தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டன. ஆனால், இந்தப் பேருந்து நிலையங்கள் புஷ்கரம் நடைபெற்ற இடத்திலிருந்து வெகு தொலைவில் இருந்ததால், பக்தர்கள் அதிக தூரம் நடக்க வேண்டி இருந்தது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement