எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் களைகட்டிய போட்டிகள்! | MGR birth centenary celebrations

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (18/09/2017)

கடைசி தொடர்பு:11:10 (18/09/2017)

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் களைகட்டிய போட்டிகள்!

கரூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கான கால்கோள் விழாவை முன்னிட்டு, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

கரூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நவம்பர் 4-ம் தேதி கொண்டாடுவதை முன்னிட்டு அரங்குகள் அமைக்க  முகூர்த்தக்கால் நடும் விழா, மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.சி.கருப்பண்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்று, முகூர்த்தக்கால் நட்டு அரங்குகள் அமைக்கும் பணிகளைத் தொடங்கிவைத்தனர்.

இதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, முதலாவதாக 1000-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப்போட்டிகள், பொதுமக்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை திருவள்ளுவர் மைதானத்தின் வாசலில், அமைச்சர்கள் கொடி ஏற்றித் தொடங்கிவைத்தனர். அதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்துப் போட்டியை குமாரசாமி பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்திலும், 'எம்.ஜி.ஆர் புகழுக்குப் பெருமைசேர்ப்பது அவரது கலைச்சேவையா அல்லது மக்கள் சேவையா' என்ற தலைப்பில் பட்டிமன்ற நிகழ்ச்சிகளை அட்லஸ் கலையரங்கிலும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளின் நிறைவுப் போட்டிகள், கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கிலும், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கோலப்போட்டிகளை மாவட்ட ஆட்சியரகத்திலும் தொடங்கிவைத்து, அமைச்சர்கள் பார்வையிட்டனர். அப்போது பேசிய தம்பிதுரை, "மற்ற மாவட்டங்களை விட கரூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்தப்படும்" என்றார்.