டெல்லி கிளம்பிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணி!

'இரட்டை இலை' சின்னத்தை மீட்பது தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது அணி நிர்வாகிகள் டெல்லி கிளம்பினர். 


அ.தி.மு.க-வில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால், 'இரட்டை இலை' சின்னத்தை முடக்கித் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. மேலும், அ.தி.மு.க-வின் பெயரைப் பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்தது. 'இரட்டை இலை' சின்னம் தங்களுக்கே சொந்தம் என்றும், தொண்டர்கள், நிர்வாகிகள் ஆதரவு தங்களுக்கே உள்ளது என்றும் கூறி, சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் லட்சக்கணக்காம பிரமாணப் பத்திரங்கள் தாக்கல்செய்யப்பட்டன. ஆனால் சசிகலா, தினகரனை ஓரங்கட்டி, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் ஒன்றாக இணைந்தன. அவர்கள் தரப்பில் அ.தி.மு.க-வின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவும் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில், சசிகலாவை நீக்குவது, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. 

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அணிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் டெல்லி கிளம்பினர். வானகரத்தில் நடந்த பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்குறித்த ஆவணங்கள், தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. தீர்மானங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து அவர்கள் அளிப்பார்கள் என்றும் தகவல் வந்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!