Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''மனசளவுல என் பொண்ணு இன்னும் இயல்பு நிலைக்கு வரல'' - அப்ரீனா தந்தை

அப்ரீனா தந்தை

"துடிதுடிச்சுப்போயிருந்த மொத்த குடும்பத்தினரும் இப்போதான் நிம்மதி அடைஞ்சிருக்கோம். எங்களுக்கு உதவின எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றி" - நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் அருண்மொழி வர்மன். சினிமா துணை இயக்குநரான இவரின் மகள் அப்ரீனா, சென்னையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த 8-ம் தேதி பள்ளிக்குச் சென்றவர் திடீரென காணாமல்போக, இரு தினங்களுக்கு முன்பு கண்டுபிடித்துள்ளனர்.

அப்ரீனா குடும்பம்

''வீடியோ ஃபுட்டேஜ் கிடைக்காததால், பொண்ணு எத்தனை மணிக்கு வெளியே போயிருக்கிறாள், யாராவது அழைச்சுட்டுப் போனாங்களானு எதுவுமே தெரியாமல், ஆளாளுக்கு ஒரு பக்கமா விடிய விடிய தேடி சுத்தினோம். ஒவ்வொரு நாளும் பொண்ணு இன்னிக்கு கிடைச்சுடுவானு நம்பிக்கையோடு அலைஞ்சோம். ஒரு வார தவிப்புக்குப் பிறகு, சனிக்கிழமை கிடைச்சுட்டா. எங்களுக்கு யாரும் எதிரி கிடையாது. அதனால், பொண்ணை கடத்தியிருக்க வாய்ப்பில்லைனு உறுதியா நினைச்சோம். மனசுக்குள்ளே ஏதோ ஒரு கவலையை இருந்திருக்கணும் அல்லது காதல் பிரச்னை ஏதாச்சும் இருந்திருக்குமோனு எங்க மனசெல்லாம் குழப்பத்துல தவிச்சது. அப்ரீனாவே தனியா பெங்களூருவில் இருக்கும் ஒரு சர்ச்சுக்குப் போயிருக்கா. 'அங்கிருந்தவங்கதான் பொண்ணு இங்கே இருக்கா'னு எங்களுக்கு போனில் தகவல் சொன்னாங்க. அப்போதான் எங்களுக்கு உயிர் வந்துச்சு. சந்தோஷமா பெங்களூருக்குப் போய் அழைச்சுட்டு வந்தோம்'' என்று நிம்மதி மூச்சுவிடும் அருண்மொழி வர்மன் தொடர்கிறார். 

''அப்ரீனா வீட்டுக்கு வந்து ரெண்டு நாளாகுது. அதனால், எதுக்கு பெங்களூருக்குப் போனான்னு இன்னும் கேட்கலை. காரணம் தெரியாமல், நாங்க யாரையும் சந்தேகப்படவோ, குறை சொல்லவோ விரும்பலை. மனசளவில் பொண்ணு இன்னும் பழைய நிலைக்கு வரலை. அதனால், அவளை தொந்தரவு செய்ய வேண்டாம்னு நினைக்கிறோம். போலீஸூம் அதையே சொல்லியிருக்காங்க. ஒருவாரம் போகட்டும். அவளாகவே பேசட்டும். அவள் நன்மைக்காக நாங்க செய்ய வேண்டியதை நிச்சயம் செய்வோம். நானும் மனைவி செரில் சராகனும் பொண்ணுக்கிட்ட ரொம்பவே அன்பாக பழகுவோம். படிப்பு, ஹெல்த், நண்பர்கள் எனப் பல விஷயங்களைப் பேசுவோம். ஒருவேளை எங்க அன்பு மேலயும்கூட குறையிருக்கலாம். இனி எங்களை சரிசெய்துக்குவோம். ஸ்கூல் படிக்கும் வயசில் வெளியூருக்கு தனியா போயிருக்கான்னா, அவள் மனசு ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறாங்கிறதை உணர முடியுது. சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல் இருந்த எங்களுக்கு இப்போதான் பேசும் பலமே கிடைச்சிருக்குது" என்கிற அருண்மொழி வர்மன், வேண்டுகோள் ஒன்றை விடுக்கிறார். 

அப்ரீனா குடும்பம்

"எல்லாப் பிள்ளைகளுக்கும் ஸ்கூல்தான் இன்னொரு வீடு. அந்த வீடு, எல்லா பள்ளிக் குழந்தைகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யணும். குழந்தைங்க ஸ்கூல்ல என்ன செய்றாங்கன்னு எங்களுக்குத் தெரியாது. அதைப் பெற்றோருக்கு தெரியப்படுத்தறதும் பள்ளிகளின் கடமை. இன்னிக்கு எங்க பொண்ணுக்கு நடந்தது, நாளைக்கு இன்னொருத்தர் பொண்ணுக்கும் நடக்கலாம். பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல 56 கண்காணிப்பு கேமரா இருந்தும் பயனில்லை. ஒரு கண்காணிப்பு கேமராவில் ஆறு மாசம் முதல் ஒரு வருஷம் வரையிலான நிகழ்வுகள் சேமிச்சு வைக்கப்பட்டிருக்கணும். ஒருவேளை பொண்ணுக்கு ஏதாச்சும் ஆயிருந்தால் யார் பொறுப்பு ஏற்றிருப்பாங்க? இனியாவது எல்லா ஸ்கூலிலும் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டையும் குழந்தைகளின் நடவடிக்கைகளையும் கண்காணிச்சு உறுதி செய்யணும். இதை வலிகளைக் கடந்த பெற்றோராக, இனி எந்தப் பெற்றோருக்கும் நாங்க பட்ட துன்பம் வரக்கூடாது என்ற எண்ணத்தோடு கேட்டுக்கிறோம். போலீஸ் நிர்வாகம், என் திரையுலக நண்பர்கள், நடிகர் சங்கத்தினர் உள்ளிட்ட பெரும்பாலானோர், அப்ரீனாவை மீட்க நிறைய உதவிகளை செய்திருந்தாங்க. இந்தக் கஷ்டமான சூழலில்தான் உண்மையான நலன் விரும்பிகளை தெரிஞ்சுகிட்டேன். அவங்க எல்லோருக்கும் நன்றி" என நெகிழ்கிறார் அருண்மொழி வர்மன். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement