‘முதல்வரின் தந்திரத்தை முறியடிப்போம்!’ - கொதிக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் | We will defeat the Chief Minister's trick, says Dinakaran support MLAs

வெளியிடப்பட்ட நேரம்: 12:59 (18/09/2017)

கடைசி தொடர்பு:12:59 (18/09/2017)

‘முதல்வரின் தந்திரத்தை முறியடிப்போம்!’ - கொதிக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

'எங்களைத் தகுதிநீக்கம் செய்து, ஆட்சியைக் காப்பாற்ற முடிவுசெய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தந்திரத்தை முறியடிப்போம்' என்று கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆவேசமாகக் கூறினர். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தினகரனுக்கும் ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றுவது, ஆட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ்பெறுவது என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநரைச் சந்தித்து தனித்தனியாகக் கடிதம் கொடுத்தனர். இதற்கு, ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தினகரன் தொடர்ந்து விமர்சித்துவந்தார்.

தினகரனுக்கு மேலும் மூன்று எம்.எல்.ஏ-க்கள் ஆதரவளித்தனர். அவர்களும் ஆளுநரைச் சந்தித்து கடிதம் கொடுத்தனர். அதில், அ.தி.மு.க கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-வான நடிகர் கருணாஸும் ஒருவர். இந்தச் சூழ்நிலையில், தினகரன் அணியிலிருந்து ஜக்கையன் எம்.எல்.ஏ மட்டும் முதல்வர் அணிக்குத் தாவினார். இதற்கிடையில், தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏ-க்களிடம் விளக்கம் கேட்டு, சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு, ஜக்கையனைத் தவிர மற்ற எம்.எல்.ஏ-க்கள் நேரில் ஆஜராகவில்லை. இதனால், 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்வது தொடர்பான ஆலோசனை, கடந்த சில தினங்களாக தலைமைச்செயலகத்தில் நடந்துவந்தது. அதில், 18 பேரை தகுதி நீக்கம் செய்யலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்கான அறிவிப்பு இன்று காலை வெளியிடப்பட்டது. இது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு கடும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், அடுத்து என்னசெய்யலாம் என்று சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்திவருகின்றனர். திருச்சியில் நாளை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தயாராகிக்கொண்டிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்த அறிவிப்பு, சோர்வடையச் செய்துள்ளது. அதிலும், முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களில் சிலர், கலங்கிப் போய் உள்ளனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கொடுத்த அதிர்ச்சிவைத்தியத்துக்கு சட்டரீதியாகப் பதிலடிகொடுக்க தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினகரன்


 இதுகுறித்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம் பேசினோம். “நாங்கள் கொடுத்த கடிதத்தின்பேரில், சட்டசபையில் பெருபான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வாய்ப்புள்ளது. தற்போதைய சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாது. இதனால், தந்திரமாக எங்களில் 18 பேரை தகுதிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், பெருபான்மையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்துவிடலாம் என்று கருதுகிறார். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தந்திரத்தை நீதிமன்றம்மூலம் முறியடிப்போம்.

எங்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பெருபான்மையை நிரூபித்துவிட்டால், இன்னும் ஆறுமாதங்களுக்கு சிக்கல் ஏற்படாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு கணக்குப் போட்டுள்ளது. எங்களைத் தகுதிநீக்கம் செய்துவிட்டு, நிரந்தரமாக அவர்களால் ஆட்சியைத் தொடர முடியாது. ஏனெனில், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்தால், அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு தேர்தல் நடந்தால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் வெற்றிபெற முடியாது. அது, தி.மு.க-வுக்குத்தான் சாதகமான சூழ்நிலை ஏற்படும். இதனால், மக்களே இந்த ஆட்சியை அகற்றிவிடுவார்கள். ஜெயலலிதா ஏற்படுத்திய இந்த ஆட்சி கவிழக் காரணமாக இருந்தவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா என்றுமே மன்னிக்காது" என்றனர். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேசியவர்கள், "தினகரனை ஆதரித்த எம்.எல்.ஏ-க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர், நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதற்கு அவர்கள் நேரில் ஆஜராகவில்லை. இதனால், கட்சித் தாவல் சட்டத்தின்படி 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். தினகரனின் சுயரூபம் தெரிந்ததால், ஜக்கையன் எம்.எல்.ஏ மட்டும் சபாநாயகர் முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தினகரனை நம்பிய 18 எம்.எல்.ஏ-க்களுக்குக் கிடைத்த பரிசு, தகுதிநீக்கம். ஜெயலலிதா, இரட்டை இலைச் சின்னத்தால் வெற்றிபெற்ற 18 பேரும், வீண் பிடிவாதத்தால் தங்களது பதவியை இழந்துள்ளனர். எங்களைப் பொறுத்தவரை சட்டப்படி செயல்படுகிறோம். ஜெயலலிதா விரும்பிய ஆட்சி, தமிழகத்தில் நடந்துவருகிறது" என்றனர். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close