Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தகுதிநீக்கத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு!

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டதை எதிர்த்து, 18 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தினகரன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசுக் கொறடா, சபாநாயகருக்குப் பரிந்துரைசெய்திருந்தார். இதுதொடர்பாக, நேரில் விளக்கம் அளிக்குமாறு எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அளித்திருந்தார். அவர்களில் எம்.எல்.ஏ ஜக்கையன் தவிர, 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக சபாநாயகர் தனபால் சார்பில் சட்டப்பேரவைச் செயலாளர் பூபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்திய அரசமைப்புச் சட்டம், 10-வது அட்டவணையின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள, 1986-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம்கொண்டு தகுதியின்மையாக்குதல்) விதிகளின் கீழ், பேரவைத் தலைவர் கீழ்க்காணும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களை 18.9.2017 முதல் தகுதிநீக்கம் செய்து ஆணையிட்டதன் காரணமாக, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர். முன்னரே தி.மு.க தொடர்ந்த வழக்கில், இந்த மனுவும் இணைப்பு மனுவாக இணைக்கப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 20-ம் தேதி நடைபெறும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement