வெளியிடப்பட்ட நேரம்: 13:46 (18/09/2017)

கடைசி தொடர்பு:13:46 (18/09/2017)

எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்! - சட்டமன்றத்தில் தப்புமா எடப்பாடி பழனிசாமி அரசு?

எடப்பாடி பழனிசாமி

மிழக அரசியல் அதிரடியின் அடுத்தகட்டமாக, டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சட்டப்பேரவை சபாநாயகர் ப. தனபால் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதையடுத்து, சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் வெற்றிபெறுவது சுலபமாகி விடும் என்று தெரிகிறது.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை எதிர்த்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாகச் செயல்பட்டதால், அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. இந்நிலையில், சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டதால், கூவத்தூர் விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியேற்றார். 

இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் இணைப்புப் பேச்சுவார்த்தை நடத்தி, அ.தி.மு.க-வின் இரு அணிகள் இணைந்தன. ஆனால், சசிகலாவின் அக்காள் மகனும், அவரால் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டவருமான டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக 19 எம்.எல்.ஏ-க்கள் ஒன்று திரண்டு, கவர்னர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, தனித்தனியே கடிதம் வழங்கினர். இவர்களில் ஜக்கையன் எடப்பாடி அணிக்குத் தாவி விட்டார். தங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், எனவே, முதல்வர் பதவியில் இருந்து அவரை மாற்ற வேண்டும் என்றும்  அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.

தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பிலும் ஆளுநரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தமிழக அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்றும், எனவே சட்டசபையைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதற்கிடையே, ஆளுநரைச் சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்குப் பரிந்துரை செய்திருந்தார். இதையடுத்து, அந்த எம்.எல்.ஏ-க்களிடம் விளக்கம் கோரி, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். 

தினகரன் அணி எம்.எல்.ஏக்கள்

எனினும், சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸ் தங்களை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தெரிவித்திருந்தனர். தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல் ஆகிய இரு எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவைச் செயலாளரைச் சந்தித்து விளக்கமளித்தனர். 

என்றாலும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பற்றி சபாநாயகர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்டசபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து இன்று சபாநாயகர் அறிவித்தார்.

சட்டசபையில் சபாநாயகர் தவிர, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 134. ஜெயலலிதா மறைவால் ஒரு இடம் காலியாக உள்ளது. மொத்த இடங்களின் எண்ணிக்கை 234. அறுதிப் பெரும்பான்மைக்கு 118 எம்.எல்.ஏ-க்கள் தேவை என்ற நிலையில், கடந்த பிப்ரவரி மாதம், ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாகப் பிரிந்திருந்த நிலையில் (ஓ.பி.எஸ் உள்பட 10 எம்.எல்.ஏ-க்கள்) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 122 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைத்தது. தற்போது 10 பேர் சேர்ந்துள்ள நிலையில், 132 பேரின் ஆதரவு இருக்க வேண்டும். ஆனால், 114 எம்.எல்.ஏ-க்களே எடப்பாடி முகாமில் உள்ளனர். 

இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி ஆகிய இருவரும் வெளிப்படையாக தங்கள் ஆதரவை தெரிவிக்கவில்லை. முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த கருணாஸ், தினகரனை ஆதரிக்கிறார்.

தலைமைச் செயலகம்

இந்தச் சூழ்நிலையில், சட்டப்பேரவை கூட்டப்பட்டு எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டால், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாலும், ஜெயலலிதா மறைவால் ஏற்பட்டுள்ள காலியிடத்தாலும் 215 எம்.எல்.ஏ-க்களே மொத்த எண்ணிக்கையாக கருதப்பட வேண்டும் என்பது பேரவை விதி. அப்படிப் பார்க்கும்போது, 215 எம்.எல்.ஏ-க்களில், எடப்பாடி அரசுக்கு 114 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு உள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதில் வெற்றிபெற்று விடும். இதைக் கருத்தில் கொண்டே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

எனினும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.  தமிழகத்தில் அடுத்தடுத்த அரசியல் அரங்கேற்றங்கள் தொடரும் என்பது மட்டும்  உறுதி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்