வெளியிடப்பட்ட நேரம்: 17:13 (18/09/2017)

கடைசி தொடர்பு:17:13 (18/09/2017)

“எஃகு கோட்டைக்குள் எறும்புகூட நுழைய முடியாது!”- எடப்பாடி பழனிசாமியின் நேற்றைய ஆவேசம்... இன்றைய ஆக்‌ஷன்!

எம்.ஜி.ஆர் நுாற்றாண்டு விழா

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினரால் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. நாமக்கலில் நேற்று நடந்த விழாவில் நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களில் தலைக்கு 300 ரூபாய் கொடுத்து, தொண்டர்கள் அழைத்துவரப்பட்டனர்.  இதுதவிர, திறந்தவெளி லாரிகளிலும், மினிடோர்களிலும் ஆடுமாடுகளைப்போல மக்களை ஏற்றிக்கொண்டு வந்திருந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு இருக்கும் சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் நாமக்கல் நல்லிபாளையம்வரை ஃப்ளெக்ஸ் பேனர்கள், கட் -அவுட்கள், கட்சிக் கொடிகள் என வழிநெடுகிலும் வைக்கப்பட்டுச் சாலைகள் களைகட்டியிருந்தன.

 ''சதித் திட்டம் தீட்டியவர்கள்!''

பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மேடையில் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, ''சாதாரணமாக இருந்த எங்களை அடையாளம் காட்டியவர் அம்மா. எங்களை யாரோ ஒருவர் உருவாக்கியதுபோலப் பேசுவதை ஒன்றரை கோடி தொண்டர்கள்கூட மன்னிக்க மாட்டார்கள். நாங்கள் யாரையும் நம்பி இல்லை. அம்மா காட்டிய வழியில் செல்கிறோம். உயிரைக் கொடுத்து இந்த இயக்கத்தைக் காப்போம். அண்ணன் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் அடையாளமாகவும், அண்ணன் பன்னீர்செல்வம் பன்பாட்டின் அடையாளமாகவும் இருக்கிறார்கள். சிலருக்குத் துரோகத்தைப் பற்றிப் பேச அறுகதை இல்லை. தி.மு.க-வோடு சேர்ந்து ஆட்சியைக் கலைக்கப் பார்க்கிறார்கள். இவர்களை அம்மா ஆன்மா மன்னிக்காது. இங்கிருப்பவர்கள் எல்லோரும் அம்மாவின்மீது இருந்த விசுவாசத்தால் சிறைக்குச் சென்றவர்கள்... அவர்கள் சுயநலத்துக்காகச் சிறைக்குச் சென்றவர்கள். அம்மா உயிரோடு இருக்கும்போதே சதித் திட்டம் தீட்டியவர்கள். எவ்வளவு துரோகம் செய்தாலும் இந்த ஆட்சியை அழிக்க முடியாது'' என்றார்.

எடப்பாடி பழனிசாமி

நாடாளுமன்றத் துணை சபாநாயகர் தம்பிதுரை, ''நவோதயா பள்ளிகளைக் கொண்டுவந்தது யார்? மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை மத்திய பட்டியலுக்கு மாற்றியது இந்திரா காந்தி. அவரிடம் மண்டியிட்டு மானம் கெட்டது யார்? நாங்கள் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்மா வழியில் இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். தி.மு.க-வினர், சர்க்காரியா கமிஷனில் இருந்து மீளுவதற்காகக் காவிரிப் பிரச்னை, கல்வி உரிமை, கட்சத்தீவு போன்றவற்றைக் காவு வாங்கியவர்கள். தமிழர்களின் உரிமையை அடமானம் வைத்தவர்கள்'' என்றார்.

ஓ.பி.எஸ். சொன்ன ரகசியம்!

துணை முதல்வர் பன்னீர்செல்வம், ''அம்மா என்ற அட்சயப்பாத்திரம் நம்மிடம்தான் இருக்கிறது. எதிரிகளின் சதிச் செயலையும், துரோகிகளின் வஞ்சகச் செயலையும் அம்மா கற்றுக் கொடுத்திருக்கிறார். மலைமீது மோதினால் தலை சிதறிப் போவதைப்போல ஆட்சியைக் கலைக்க நினைப்பவர்களின் தலையும் சிதறிப் போகும். குறுக்குவழியில் தி.மு.க-வினர் ஆட்சிக்கு வர நினைக்கிறார்கள். எத்தனையோ துரோகத்தைச் சந்தித்தவர்கள் அவர்கள். குழந்தையில்லா வீட்டில் கிழவன் துள்ளிக் குதிப்பதைப்போலச் சிலர் துள்ளிக் குதிக்கிறார்கள். குல்லா போட்டவன் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. நாங்கள் இணைந்தது சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. குடும்பத்தைக் கபளிகரம் செய்தவர்கள் மாமியார் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அம்மா கட்டிக்காத்த இயக்கம் சில கொள்கைக்காகத் தனித் தனியாகச் செயல்பட்டது. அந்தக் குடும்பத்துக்குள் கட்சி போய்விடக் கூடாது என்று இணைந்துவிட்டோம். தி.மு.க-வோடு இணைந்து எப்படிக் கவிழ்க்க பார்க்கிறார்களோ? தெரியவில்லை. அம்மாவுக்கே நம்பிக்கை இல்லாமல் இருந்த துரோகிகள். இது, அரசு விழாவாக இருந்தாலும் ஒரு ரகசியத்தைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஒருநாள் அம்மா என்னை அழைத்து, 'தினகரனைக் காட்டி அவரோடு இனி பேசக்கூடாது' என்றார். 'சரி, அம்மா' என்றேன். நான்கு மாதம் கழித்து... 'அவரோடு பேசினீர்களா' என்றார். 'இல்லை' என்றேன். 'நான் உயிரோடு இருக்கும்வரை அவரை என் வீட்டுக்குள் விடமாட்டேன்' என்றார். இப்படி ஒவ்வொரு ரகசியத்தையும் சொல்வேன்'' என்றார்.

''எறும்புகூட  நுழைய முடியாது!''

இறுதியாகப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''நயவஞ்சகர்களால் இந்த ஆட்சியைக் கலைக்க முடியாது. சுயநலமுடையவர்கள் காலச் சக்கரத்தில் சிக்கி அழிந்துபோவார்கள். ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் இந்த எஃகு கோட்டைக்குள் ஓர் எறும்புகூட உள்ளே நுழைய முடியாது. எம்.ஜி.ஆர்., தர்மத்தின் தலைவன். சிலர் புறப்பட்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் பகல் கனவு பலிக்காது. தொண்டர்கள் இருக்கும்வரை இந்த இயக்கத்தை யாராலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. நாங்கள் எல்லாம் எட்டப்பன்கள் அல்ல. எங்கள் உடம்பில் இரண்டு சொட்டு ரத்தம் இருக்கும்வரை இந்த இயக்கத்தைக் காப்பாற்றுவோம். தீயசக்தியோடு சேர்ந்திருக்கிறார்கள். அம்மாவே அவர்களை நீக்கி வைத்திருந்தார். அவருக்கு எப்படி இயக்கம், கட்சிமீது பற்றும் பாசமும் இருக்கும்? அம்மா ஆன்மா அவர்களுக்குத் தக்க தண்டனை கொடுக்கும். 'பட்ஜெட் கூட்டம் முடிந்தது... கலைந்துவிடும் என்றார்கள்; அதன்பிறகு, மானியக் கோரிக்கை முடிந்தது... இந்த ஆட்சி முடிந்துவிடும்' என்று கூறி மக்களைக் குழப்புகிறார்கள். விவசாயிகளின் கனவுத் திட்டமான குடிமராமத்து திட்டத்தால் அனைவரும் பயனடைந்து வருகிறார்கள். தேடித்தேடிப் பார்த்தும் இந்த ஆட்சிமீது குறை கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் மத்திய அரசின் அடிமைகள் என்றும், கூஜா தூக்குவதாகவும் சொல்கிறார்கள். நாங்கள் இணக்கமாக இருக்கிறோம். இணக்கமாக இருப்பதால் தமிழ்நாட்டுக்குத் தேவையான வீடுகளைக் கொடுப்பதாக மோடி சொல்லி இருக்கிறார். தமிழகத்தைத் தொழில் நகரமாகவும் மாற்றுவதாகக் கூறி இருக்கிறார். நாங்கள் மத்திய அரசோடு இணக்கமாக இருப்பதால் இது சாத்தியமாகிறது'' என்றார்.

விழா ஆரம்பம் முதல் இறுதிவரை பின்புறத்தில் இருந்து கூச்சல் வந்துகொண்டே இருந்தது. இறுதியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது பின்னாடி இருந்த கூட்டம் கலைய ஆரம்பித்தது.


டிரெண்டிங் @ விகடன்