வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (18/09/2017)

கடைசி தொடர்பு:15:05 (18/09/2017)

’தினகரனும் ஸ்டாலினும் கூட்டுச் சதி செய்கிறார்கள்’ - அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்

தினகரனும் ஸ்டாலினும் சேர்ந்து கூட்டுச் சதி செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். 

இரட்டை இலை சின்னத்தை மீட்பது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அணிகளைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளனர். தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து சமீபத்தில் முடிந்த பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல்களை அளிக்க இருக்கின்றனர். இதற்காக அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர். இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், இந்தப் பயணம் அமைந்துள்ளது. 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ‘கட்சியில் எந்தவித குழப்பமும் இல்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வழிகாட்டுதலின்படி கட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தினகரன் தரப்பினரை முழுமையாக ஒதுக்கிவைத்துவிட்டு கட்சியும் ஆட்சியும் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஆட்சியைக் கலைக்க, தினகரனும் ஸ்டாலினும் சேர்ந்து கூட்டுச் சதி செய்கிறார்கள். ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட ஆட்சியைக் கலைக்க தினகரன் துடிக்கிறார். அதற்காக, ஸ்டாலின் காலடியில் விழுந்துகிடக்கிறார். இருவரும் பேசி வைத்துக்கொண்டு, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்கிறார்கள். எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், சபாநாயகரின் முடிவில் யாரும் தலையிட முடியாது’ என்றார்.